இழப்பீடல்ல, உரிமை!

விலை நிர்ணய ஆணையத்தின் விசாரணையின் விளைவாக, குருகிராமத்திலுள்ள பார்டிரஸ்ட் நிறுவன ஆராய்ச்சி

விலை நிர்ணய ஆணையத்தின் விசாரணையின் விளைவாக, குருகிராமத்திலுள்ள பார்டிரஸ்ட் நிறுவன ஆராய்ச்சி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் மரணமடைந்த ஏழு வயதுப் பெண்ணுக்குத் தேவையில்லாத பரிசோதனைகளுக்காக சுமத்திய கட்டணம், வழக்கமான கட்டணத்தைவிட 1,737% அதிகம் என்பது கண்டறியப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் இப்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் ஏஎஸ்ஆர் மூட்டு மாற்று சிகிச்சையில் ஏற்பட்ட தவறுக்காக அந்த நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற அரசின் முடிவு வரவேற்பைப் பெறுகிறது. 
இடுப்பு மூட்டுக்கான செயற்கை மாற்று சிகிச்சைக்கு உலோகத்தாலான இடுப்பு மூட்டை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் எலும்பு சிகிச்சைப் பிரிவு விற்பனை செய்தது. ஏஎஸ்ஆர் மூட்டு மாற்று சிகிச்சையின் மூலம் செயற்கை மூட்டு பொருத்தப்பட்ட நோயாளிகளுக்கு கடுமையான வலியும் வீக்கமும் ஏற்பட்டதால், 2010-இல் அந்த இடுப்பு மூட்டு மாற்றை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்கச் சந்தையில் இருந்து விலக்கிக் கொண்டது. அதன் விளைவால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்த்து அமெரிக்காவில் நோயாளிகள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். 
அமெரிக்காவில் ஏஎஸ்ஆர் மூட்டு மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கு இழப்பீடாக 4.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.30,701 கோடி) வழங்க அந்த நிறுவனம் முன்வந்தது. அதே நேரத்தில் இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் செயற்கை இடுப்பு மூட்டு மாற்று பொருத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அந்த நிறுவனம் தயங்கியது. 
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில் தனது ஏஎஸ்ஆர் இடுப்பு மூட்டை விற்பனை செய்வதை நிறுத்திவிட்ட பிறகும்கூட, இந்தியாவில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது என்பதும் இந்தியாவிலுள்ள மருத்துவர்கள் பிரச்னைக்கு உள்ளான செயற்கை இடுப்பு மூட்டு அமெரிக்காவில் விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது தெரியாமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் அதிர்ச்சி அளிக்கின்றன. 
இந்தியாவில் 4,700-க்கும் அதிகமானோர், அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட, பிரச்னையை ஏற்படுத்தும் செயற்கை மூட்டை, ஏஎஸ்ஆர் மூட்டு மாற்று சிகிச்சையின் மூலம் மருத்துவர்களின் பரிந்துரையின்படி பொருத்திக்கொண்டனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு பிரச்னைகள் எழத்தொடங்கின. 2017-இல் பல்வேறு நோயாளிகளின் புகார்களைத் தொடர்ந்து, விசாரித்தபோதுதான், அமெரிக்காவில் விலக்கிக் கொள்ளப்பட்ட பிரச்னைக்குரிய செயற்கை இடுப்பு மூட்டு, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தால் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது ஏஎஸ்ஆர் செயற்கை மூட்டின் பின்விளைவுகள் குறித்த தகவல்களை மறைத்து விற்பனை செய்ததற்காக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் விசாரணைக் குழு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வெறும் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 
அமெரிக்காவில் பிரச்னைக்குரிய செயற்கை மூட்டுக்காக 4.4 பில்லியன் டாலர் இழப்பீடு கொடுக்க தயாரான அந்த நிறுவனம், இந்தியாவில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால், தகுந்த இழப்பீடு தர முன்வராததுதான் நோயாளிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது. 
இந்தியாவில் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட 4,700-க்கும் மேற்பட்டோரில் இதுவரை 1,080 பேர்தான் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களிலும் 275 பேருக்கு மட்டுமே மீண்டும் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிரச்னைக்குரிய மாற்று மூட்டு அகற்றப்பட்டிருக்கிறது. 3,200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இன்னும் வலியால் துடித்துக்கொண்டு எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான், இந்திய அரசு நோயாளிகளின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிகரித்த இழப்பீட்டை வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறது. 
மூட்டு மாற்று சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.2 கோடி இழப்பீடு வழங்குவது மட்டுமல்லாமல், 2006 முதல் 2010 வரை தவறான மூட்டு மாற்றை விற்பனை செய்ததற்காக நோயாளிகளுக்கு மேலும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தொகை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 
இதுவரை மிகக் குறைந்த தொகை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கு மட்டுமே இந்தியாவில் இழப்பீடாக வழங்கப்பட்டிருந்த நிலைமை மாறி, நோயாளிகளின் உரிமை இந்த முடிவின் மூலம் நிலைநாட்டப்படுகிறது. 
பெரும்பாலான நோயாளிகள் தவறான சிகிச்சையாலும், தவறான மருந்துகளாலும் பாதிக்கப்பட்டாலும் அதை விதி என்று கருதி சகித்துக் கொள்ளும் நிலைதான் இங்கே காணப்படுகிறது. அப்படியே சிலர் புகார் செய்தாலும்கூட, தவறான மருத்துவ சிகிச்சை அல்லது தவறான மருந்து உள்ளிட்டவை குறித்து நிரூபிப்பதை மருத்துவமனைகளும் மருத்துவர்களும் பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து இயலாமல் செய்துவிடுகின்றனர். 
இப்படிப்பட்ட சூழலில்தான் அரசின் முடிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் இழப்பீடு என்பது மருத்துவ சிகிச்சை முறையில் நுகர்வோரின் உரிமையை நிலைநாட்டுவதாக அமையும் என்பது மட்டுமல்ல, மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட அல்லது பிரச்னைக்குரியதான மருந்துகள் குறித்து தொடர்ந்து கண்காணித்துவரத் தூண்டும் என்றும் நம்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com