சாட்சிக்குப் பாதுகாப்பு!

குற்றப்புலன் விசாரணையில் அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளைவிட இந்தியா சிறப்பாகச் செயல்பட்டாலும்கூட, குற்ற வழக்குகளில் தண்டனை பெறுபவர்களின் விழுக்காடு குறைவாகவே காணப்படுகிறது.

குற்றப்புலன் விசாரணையில் அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளைவிட இந்தியா சிறப்பாகச் செயல்பட்டாலும்கூட, குற்ற வழக்குகளில் தண்டனை பெறுபவர்களின் விழுக்காடு குறைவாகவே காணப்படுகிறது. பெரும்பாலான வழக்குகள் பல ஆண்டுகள் நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுகின்றன. பிறழ் சாட்சிகளின் எண்ணிக்கையாலும், குற்றம் ஐயம்திரிபற நிரூபிக்கப்படாமையாலும் பெரும்பாலான வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
 நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட "சாட்சிகள் பாதுகாப்பு வரைவுத் திட்டம்' இப்போது நடைமுறை சாத்தியமாகும் நிலையை எட்டியிருக்கிறது. மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் "சாட்சிகள் பாதுகாப்பு வரைவுத் திட்ட'த்தை மாநிலங்கள் நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதோ கொண்டுவரப்பட்டிருக்க வேண்டிய சாட்சிகளின் பாதுகாப்பு குறித்த இந்த முடிவுக்கு இப்போதாவது விடிவு காலம் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
 பொதுவாகவே குற்ற வழக்குகளில் மிக அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாவது சாட்சிகள்தான். குற்ற வழக்குகளின் விசாரணையின்போது சாட்சிகள் மிரட்டப்படுவதும், பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுக்கப்படுவதும், சில வேளைகளில் துன்புறுத்தப்படுவதும் வழக்கம். அதனால்தான் இந்தியாவில் பெரும்பாலான குற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் வழக்குகள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
 தொடர்ந்து பல ஆண்டுகளாகவே சட்ட ஆணையத்தின் அறிக்கைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பது குறித்து வற்புறுத்தி வந்திருக்கின்றன. இப்போதைய நீதிமன்ற நடைமுறையில், ஒருவர் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி கூறுவதற்கோ, குற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராக வாக்கு மூலம் வழங்குவதற்கோ எந்தவிதமான ஆதாயமோ தேவையோ அவர்களுக்குக் கிடையாது. அதற்கு மாறாக, உயிருக்கு ஆபத்தையும், தேவையில்லாத பகையையும், நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும்போது குற்றம் சாட்டப்பட்டிருப்பவர், காவல் துறையினர் தரப்பிலிருந்து துன்புறுத்தல்களையும் எதிர்கொள்வதுதான் மிச்சம்.
 நீதிபதிகள், வழக்குரைஞர்கள், காவல்துறையினர் ஆகியோரின் வசதிகளையும் தேவைகளையும் மட்டும்தான் நமது நீதிமன்ற நடைமுறைகள் கருத்தில் கொள்கின்றனவே தவிர, சாட்சிகளின் தரப்புப் பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதே கிடையாது. நீதிமன்றத்தில் நேரில் வந்து சாட்சி சொல்வதற்கு அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது குறித்தோ, அவர்களது வேலை நாள் இழப்பு குறித்தோ நீதிமன்றம் பொருள்படுத்துவதே இல்லை. பல நிகழ்வுகளில் தேவையில்லாமல் சாட்சிகள் வரவழைக்கப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திப்போடப்படுவது என்பது வழக்கமாகிவிட்டிருக்கிறது.
 உச்சநீதிமன்றத்தில் இந்தப் பிரச்னை விசாரணைக்கு வந்தபோது "நமது நீதிபரிபாலனத்தில் மிகவும் பரிதாபத்துக்குரியது சாட்சிகளின் நிலைதான்' என்று நீதிபதி ஏ.கே. சிக்ரி சுட்டிக்காட்டியிருக்கிறார். சாட்சிகள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தோ, சிரமங்கள் குறித்தோ காவல்துறையினரும் வழக்குரைஞர்களும் சிறிதும் கவலைப்படாமல் தங்களின் வசதிக்கு வழக்கு நீட்டிப்பு கோருகிறார்கள் என்கிற நீதிபதி ஏ.கே. சிக்ரியின் அவதானிப்பு, இந்தப் பிரச்னையில் அவரது அனுபவப் புரிதலை வெளிப்படுத்துகிறது.
 மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்தப் பிரச்னையில் சாட்சிகளின் நலனைப்பேண திட்டவட்டமான நடவடிக்கையை மேற்கொள்ள நீதித்துறை முனைப்பு காட்டியிருக்கிறது. அதனால் விரைவிலேயே இந்தப் பிரச்னைக்கு முடிவு காண வழிகோலப்படும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.
 மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் இந்தத் திட்டத்தின்படி, சாட்சிகள் எதிர்கொள்ளும் ஆபத்தின் அடிப்படையில் அவர்கள் மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில் ஒவ்வொரு சாட்சிக்கும் எந்தவிதமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்று நிர்ணயிக்கப்படும். இந்த திட்டத்திற்கான நிதியாதாரம் மாநில அரசுகளாலும், பொது நன்கொடையாலும் பெறப்படும்.
 மத்திய அரசுக்கு எந்த பொறுப்பும் இல்லாமல் இதற்கான மொத்த செலவையும் மாநிலங்கள் ஏற்றுக்கொள்வது என்பது நடைமுறை சாத்தியமா? 2006-இன் சட்ட ஆணைய பரிந்துரைப்படி, இதுபோன்ற பிரச்னைகளின் செலவுகளை மத்திய - மாநில அரசுகள் சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. அதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
 அடிப்படை அம்சங்களான தனிமை விசாரணை, நேரடிப் பாதுகாப்பு, வாக்குமூல ரகசியம் காத்தல், ஆவணங்களில் சாட்சிகளுக்கு மாற்றுப் பெயர் அளித்தல் உள்ளிட்டவை சில பரிந்துரைகள். சாட்சிகளுக்குப் புதிய அடையாளம், முகவரி ஆகியவை கொடுத்து மாற்று ஆவணம் தயாரிப்பது என்பதும், மாற்று ஆவணங்களுடன் அவர்களை உலவவிடுவது என்பதும் அதிக மக்கள்தொகையுள்ள இந்தியாவில் சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது.
 சாட்சிகளின் பாதுகாப்பு என்பதைக்கூட அடுத்தகட்டமாக வைத்துக்கொள்ளலாம். எதற்கெடுத்தாலும் "வாய்தா' வழங்கி சாட்சிகளை அலைக்கழிக்காமல் வழக்குகளை விரைந்து முடித்தால் அதுவேகூட மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்.
 சாட்சிகள் பாதுகாப்பு வரைவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றவியல் நீதி வழங்கும் முறையை ஓரளவுக்கு முறைப்படுத்த முடியும் என்பது என்னவோ உண்மை. நீதிமன்றத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் மத்திய அரசின் இந்தத் திட்டம் எந்த அளவுக்கு வெற்றியடையும் என்பதை காலப்போக்கில்தான் கணிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com