'ஏஸர்' சொல்லும் சேதி!

'ஏஸர்' எனப்படும் கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை ஒன்று வெளியிடப்படுகிறது.

'ஏஸர்' எனப்படும் கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை ஒன்று வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கற்கும் திறன் குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டு அதனடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
2017-ஆம் ஆண்டுக்கான 'ஏஸர்' அறிக்கை நகர்ப்புறம், ஊரகப்புறம் என இரு பிரிவுகளாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்விக்கான சட்டம், இப்போது 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குத்தான் கல்வி கற்கும் உரிமையை வழங்குகிறது. இந்தச் சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை உட்படுத்துவதாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் 2017-க்கான ஆய்வின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2017-க்கான 'ஏஸர்' அறிக்கையின் முடிவுகள் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. தங்களது கல்வியைத் தொடரும் 14 முதல் 18 வயதுக்குள்ளானவர்கள்கூட கற்கும் திறனில் மிகவும் பின்தங்கியிருப்பதை அறிக்கை வெளிச்சம்போடுகிறது. 24 மாநிலங்களில் உள்ள ஊரகப்புற பள்ளிக்கூடங்களில் படிக்கும் 14-க்கும் 18-க்கும் இடையேயான வயதினர் 40 விழுக்காடு பேர் தாங்கள் படிக்கும் பாடப் புத்தகங்களைப் புரிந்து படிப்பதில்லை என்கிறது அறிக்கை. 
40 விழுக்காடு மாணவர்களுக்குக் கடிகாரத்தைப் பார்த்து நேரம் சொல்லத் தெரியவில்லை. ஏதாவது விதிமுறைகளை அவர்களிடம் கொடுத்து படித்து விவரம் சொல்லச் சொன்னால், நான்கில் மூன்று விதிமுறைகளை 46 விழுக்காடு ஊரகப்புற மாணவர்களால் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லை. 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 57 விழுக்காடு மாணவர்களுக்கு அடிப்படை அரிச்சுவடி கணக்குக்கூடத் தெரியவில்லை. 25 விழுக்காடு பேருக்கு தாய்மொழியில் தவறில்லாமல் படிக்கத் தெரியவில்லை. ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து எண்ணச் சொன்னால், எண்ணத் தெரியவில்லை. நீளம், அகலம், உயரம் போன்ற சாதாரண கணக்குகள்கூட அவர்களில் பலருக்கும் தெரியாத நிலை காணப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 
எல்லாவற்றையும்விட வேதனை அளிப்பது என்னவென்றால், 14 விழுக்காடு மாணவர்களுக்கு உலக வரைபடத்தில் இந்தியாவை அடையாளம் காட்டவோ, இந்திய வரைபடத்தில் அவரவர் மாநிலத்தை அடையாளம் காட்டவோ தெரியாதநிலை காணப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. 36 விழுக்காடு 10-ஆம் வகுப்பு படிக்கும் ஊரகப்புற மாணவர்களுக்கு இந்தியாவின் தலைநகர் எது என்பதுகூடத் தெரியாத அவலம் காணப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எல்லாமே மோசம் என்று மனம் தளர வேண்டிய அவசியம் இல்லை. 14 வயதினரில் 53 விழுக்காடு பேரும், 18 வயதினரில் 60 விழுக்காட்டினரும் ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் 79 விழுக்காட்டினருக்கு தாங்கள் படித்ததன் அர்த்தமும் தெரிந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 76 விழுக்காடு பேருக்கு ரூபாய் நோட்டுகளை எண்ணத் தெரிந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. எழுதும் திறனைப் பொருத்தவரை அரசுப் பள்ளிகளானாலும், தனியார் பள்ளிகளானாலும் ஊரகப்புற இந்தியாவில் மாணவர்களின் வாசிக்கும் திறனும், கணக்குப் போடும் திறனும் தவறில்லாமல் எழுதும் திறனும் குறைவாகவே காணப்படுவதாகத் தெரிகிறது.
தொடர்ந்து வெளியிடப்படும் 'ஏஸர்' அறிக்கைகளைப் பார்க்கும்போது, பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையைப் பொருத்தவரை மிகப்பெரிய முன்னேற்றம் தெரிகிறது. ஆனால், பள்ளிச் சேர்க்கைக்கு ஒப்ப மாணவர்களின் கல்வித் திறன் அமைகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல பள்ளிச் சேர்க்கை அதிகமாக இருப்பதுபோல பள்ளிக்கு வருகையும் அதேபோல இருக்கிறதா என்றால், இல்லை. இடைநிலைக் கல்வி அளவிலான மாணவர்களுக்கு, ஆரம்பக் கல்விப் பாடப் புத்தகங்களைக்கூட சரியாகப் படிக்க முடியாத நிலைமை காணப்படுவதற்கு ஊரகப்புறங்களில் அவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருகை தராமல் இருப்பதும்கூட காரணம் என்று தோன்றுகிறது.
2017-க்கான 'ஏஸர்' புள்ளிவிவரங்கள் நகர்ப்புறத்துக்கும் கிராமப்புறத்துக்கும் மிகப்பெரிய எண்ம இடைவெளி (டிஜிட்டல் டிவைட்) காணப்படுவதை சுட்டிக்காட்டுகிறது. 61 விழுக்காடு ஊரகப்புற மாணவர்கள் தாங்கள் இணையத்தை (இன்டர்நெட்) பயன்படுத்தியதே இல்லை என்றும், 56 விழுக்காடு மாணவர்கள் கணினியை பயன்படுத்தியதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். 
ஆனால், உயர்நிலைப் பள்ளி அளவில் படிக்கும் 86 விழுக்காடு ஊரகப்புற மாணவர்கள் தொலைக்காட்சி பார்ப்பவர்களாகவும், 72.9 விழுக்காடு பேர் செல்லிடப்பேசி பயன்படுத்தத் தெரிந்தவர்களாகவும், 62.5 விழுக்காடு பேர் தினசரி பத்திரிகை வாசிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அவர்களில் 60 விழுக்காடு பேர் உயர்கல்வியில் நாட்டமுடையவர்களாகவும் தங்களது வருங்காலம் குறித்த குறிக்கோள் உடையவர்கள் என்பதையும் 'ஏஸர்' அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
கல்வி கற்கும் உரிமைச் சட்டம், மேல்நிலைப் பள்ளி அளவு வரை விரிவுபடுத்தப்பட்டு, 18 வயது வரையிலான அனைவருக்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதைத்தான் 2017-க்கான 'ஏஸர்' அறிக்கை உணர்த்துகிறது. ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை தேடலுக்கு தயாராகிறார்கள். அவர்கள் தரமான கல்வி பெறாதவர்களாக இருந்தால், வேலைவாய்ப்பு கிட்டாதவர்களாக மாறுவார்கள். அந்த இளைஞர்களின் ஆற்றல் முறையாகப் பயன்படுத்தாத நிலையில் தவறான வழிக்கு அவர்கள் திரும்பக்கூடும். 
நகர்ப்புறமோ, ஊரகப்புறமோ - கல்வியின் தரமும் கற்பித்தல் தரமும் உயர்த்தப்பட்டு, ஆசிரியர்களின் தரம் உறுதிப்படுத்தப்பட்டு, இந்திய இளைஞர்களின் மனிதவளம் முறையாகப் பயன்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com