நிதிநிலை அறிக்கை 2018-19!

நரேந்திர மோடி அரசின் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

நரேந்திர மோடி அரசின் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அரசின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இது. நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் இந்த 105 நிமிட நிதிநிலை அறிக்கை உரை வெளிப்படுத்தும் செய்தி, அரசு தன்னை தேர்தலுக்குத் தயாராக்கிக் கொள்கிறது என்பதைத்தான்.
இந்த ஆண்டு எட்டு மாநிலங்களும், அடுத்தாண்டு முதல் பகுதியில் நான்கு மாநிலங்களும் சட்டப்பேரவைத் தேர்தலைக் காண இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அடுத்தாண்டு மக்களவைக்கான பொதுத் தேர்தலும் வர இருக்கின்றது. ஊரகப்புறங்களில் ஆளும் பாஜகவுக்கு எதிராகக் காணப்படும் கடுமையான அதிருப்தியை அகற்றி அடுத்து நடைபெற இருக்கும் தேர்தல்களுக்கு பாஜகவை தயாராக்க வேண்டிய கட்டாயம் நிதியமைச்சருக்கு ஏற்பட்டிருப்பதை அவர் தாக்கல் செய்திருக்கும் 2018-19க்கான நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்துகிறது. 
இந்த நிதிநிலை அறிக்கையின் அதிரடி அறிவிப்பு நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்தான். பத்து கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு வசதி வழங்குவது என்கிற பிரம்மாண்டமானதொரு இலக்கை இந்த நிதிநிலை அறிக்கை அறிவித்திருக்கிறது. உலகத்திலேயே இந்த அளவிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வேறு எந்த ஓர் அரசாலும் எந்த ஒரு நாட்டிலும் இதுவரை முயற்சிக்கப்படவில்லை என்கிற அளவில் நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக இந்த அறிவிப்பு கருதப்படுகிறது.
ஏற்கெனவே ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநில அரசால் இதுபோன்ற மருத்துவக் காப்பீடு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், அகில இந்திய அளவில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதற்காக நரேந்திர மோடி அரசை பாராட்ட வேண்டும். வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தமிழகத்தின் சத்துணவுத் திட்டத்தை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த முற்பட்டது என்றால், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்ல முற்பட்டிருப்பதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருப்பதை எண்ணி நாம் பெருமைப்படலாம்.
இதற்காக நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்திருக்கும் ஒதுக்கீடு வெறும் ரூ.2,000 கோடி மட்டுமே. இதுகுறித்த முழுமையான, நுணுக்கமான விவரங்களை ஆய்வு செய்து நடைமுறைக்கு கொண்டுவர குறைந்தது ஆறு மாதமாவது பிடிக்கும். செலாவணி செல்லாததாக்கியது, ஜிஎஸ்டி விதிப்பு இரண்டையும் போல மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் அறிவிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து நடைமுறைச் சிக்கல்களை அகற்றுவது என்று மத்திய அரசு தீர்மானித்திருக்கிறதோ என்னவோ?
நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாதச் சம்பளக்காரர்களை திருப்திப்படுத்த முற்பட்டிருக்கிறார். மாத ஊதியம் பெறும் அனைவருக்கும் ரூ.40,000 அவர்களுடைய வருவாயிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சரின் கருணைப் பார்வை மூத்த குடிமக்கள் மீது விழுந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. வங்கிகளில் பெறும் வட்டி வருமானத்தில் ரூ.50,000 வரை முழு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது ஓய்வூதியத்தை வங்கி வைப்புத் தொகையாக வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும். அதேபோல, மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுக்கான கட்டணத் தொகை வரிவிலக்கு ரூ.30,000-லிருந்து ரூ.50,000-மாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல சில குறிப்பிட்ட மருத்துவச் செலவினங்களுக்கும் வரிவிலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 
இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காடு மக்கள்தொகையினர் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூலம் வேலைவாய்ப்புப் பெறுகிறார்கள். செலாவணி செல்லாததாக்கப்பட்டதும், ஜிஎஸ்டி விதிப்பும் பல நிறுவனங்களை கடுமையாக பாதித்திருக்கின்றன. இந்த நிலையில், அவர்களுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் உற்பத்தியை பெருக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முடியும் என்பதை காலதாமதமாக நரேந்திர மோடி அரசு உணர்ந்து, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக குறைத்திருப்பது காலத்தின் கட்டாயம். 
பங்கு வர்த்தகத்தில் பெறப்படும் நீண்ட கால மூலதன வருவாய்க்கு வரி எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த நிதிநிலை அறிக்கையில் அதற்கு 10% வரி விதிக்கப்பட்டிருப்பது நியாயமானதாகப்படவில்லை. கடந்த நிதியாண்டில் ரூ.3,67,000 கோடி நீண்ட கால மூலதன வருவாய் பெறப்பட்டதாக கிடைத்திருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இப்படியொரு வரிவிதிப்பை நிதியமைச்சர் மேற்கொண்டிருக்கிறார். பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் அதன் மதிப்பில் 0.25% வரிவிதிப்பு இருக்கும்போது, நீண்டகால மூலதன வருவாய்க்கு வரிவிதிப்பது என்பது சரியானதாகப்படவில்லை.
தொடர்ந்து வர இருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும்கூட, நிதியமைச்சர் அருண் ஜேட்லி மிகவும் சாதுர்யமாக பயணித்து நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் கோட்டை விடாமல் இருந்திருப்பதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். பாராட்டவும் விமர்சிக்கவும் அருண் ஜேட்லியின் 2018-19 க்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் மத்திய அரசின் பார்வை சாமானிய இந்தியனை நோக்கித் திரும்பியிருக்கிறது என்கிற அளவில் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்புக்குரியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com