2018-19 நிதிநிலை அறிக்கை - II

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் 2018-19க்கான நிதிநிலை அறிக்கை நான்கு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் 2018-19க்கான நிதிநிலை அறிக்கை நான்கு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை குறித்து மிக அதிகமாகப் பேசப்படுவது, தேசிய அளவில் 10 கோடி ஏழை இந்திய குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் பிரம்மாண்டமான திட்டம். 
இரண்டாவதாக, 'உஜ்வலா யோஜனா' என்று பரவலாக அறியப்படும் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்திற்கு, நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை முன்னுரிமை அளித்திருக்கிறது. இந்தியாவில் ஏறத்தாழ 25 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. உஜ்வலா யோஜனா திட்டத்தின்படி எட்டு கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு தர முனைந்திருக்கிறது நரேந்திர மோடி அரசு. இந்தியாவில் வாழும் ஏறத்தாழ 33 விழுக்காடு குடும்பங்கள் - அநேகமாக அனைத்து குறைந்த வருவாய் பிரிவினருக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்க அரசு முனைந்திருக்கிறது. 
நிதிநிலை அறிக்கையில் மூன்றாவதாக காணப்படும் முனைப்பு விவசாயிகளும் விவசாயமும் தொடர்பானது. விளை பொருள்களுக்குத் தரப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை, உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. அடுத்து வர இருக்கும் காரீப் சாகுபடியிலிருந்து அமலுக்கு வர இருக்கும் இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு உறுதியான வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
கிராமப்புறங்களில் நிலவும் அதிருப்தியை இதன் மூலம் கணிசமாகக் குறைக்க முடியும் என்று கருதுகிறார் நிதியமைச்சர். இந்தத் திட்டத்தில் அரிசி, சிறுதானியங்கள் உள்ளிட்டவை பயன்பெறுமா என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை. அப்படியில்லாமல் போனால், அரசு எதிர்பார்க்கும் பயன் கிடைக்காமல் போய்விடக் கூடும். நிதியமைச்சர் வேளாண் விளைபொருள்களை வாங்குவதற்கு ஏறத்தாழ 22,000 உள்ளூர் சந்தைகளைத் தரம் உயர்த்தப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், வேளாண் பொருள்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளுக்குக் கடனுதவி அளிப்பதற்காக ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம், குத்தகைதாரர்களுக்கும் விவசாயக் கடன் தரலாம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் கொள்கை முடிவு. இதுவரை நிலத்தின் பேரில் நில உடைமைகள் மட்டும்தான் விவசாயக் கடன் பெற முடியும். இனிமேல் குத்தகைதாரர்களுக்கும் கடன் தரலாம் என அறிவித்திருப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறு விவசாயிகளின் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துப் பெரிய அளவில் பண்ணை விவசாயம் செய்வதை ஊக்குவிப்பதற்காகக் கூட இருக்கக் கூடும்.
விவசாயத்துடன் மீன்பிடித் துறையும், கால்நடைத் துறையும் நிதியமைச்சரின் கருணைப் பார்வை பெற்றிருக்கின்றன. கிராமப்புற அதிருப்தியை அகற்றுவதில் இவையும்கூடப் பங்களிப்பு நல்கும் என்று கருதுவதாகத் தெரிகிறது. மீன்பிடித் துறையையும், கால்நடைத் துறையையும் மேம்படுத்த ரூ.10,000 கோடி முதலீட்டில் நிதியம் ஒன்றை ஏற்படுத்த அரசு முற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்தத் துறைகளையும் வேளாண் கடன் அட்டை திட்டத்தில் இணைக்க முடிவெடுத்திருக்கிறது. அதேபோல, தேசிய மூங்கில் திட்டத்தின் மூலம் மூங்கில் உற்பத்திக்கும் அரசு ஊக்கமளிக்க முற்பட்டிருக்கிறது. 
நிதியமைச்சரின் நான்காவது முன்னுரிமை தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் நலம் தொடர்பானது. பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு தலித்துகளுக்கு எதிரானது என்கிற தோற்றம் கடந்த மூன்றரை ஆண்டுகளாகவே நிலவுகிறது. அந்தத் தோற்றத்தை இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் மாற்ற முனைந்திருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. 
பட்டியலினத்தவர்களின் நலனுக்காக ரூ.56,619 கோடி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆதிவாசிகளின் நலனுக்காக ரூ.39,135 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அளவுக்கு பட்டியலினத்தவர்களுக்கும் ஆதிவாசிகளுக்கும் எந்த நிதிநிலை அறிக்கையிலும் இதற்கு முன்னால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நினைவில்லை.
ஆதிவாசிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கெனவே ஏகலவ்யா வித்யாலயா உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. 2022-க்குள் 50%-க்கும் அதிகமாக ஆதிவாசிகள் வாழுகின்ற அல்லது 20,000 பேருக்கும் மேலாக இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஏகலவ்யா வித்யாலயா உறைவிடப் பள்ளி நிறுவ இருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த ஏகலவ்யா வித்யாலயா உறைவிடப் பள்ளிகள், நவோதயா பள்ளிகளுக்கு நிகரான எல்லாக் கட்டமைப்பு வசதிகளையும் பெற்றிருப்பதுடன், ஆதிவாசிக் குழந்தைகளை விளையாட்டிலும் திறன் மேம்பாட்டிலும் தயார்படுத்தும் விதத்தில் தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.
மேலே குறிப்பிட்ட நான்கு முக்கியமான அம்சங்கள் தவிர, ஐந்தாவதாக சொல்ல வேண்டுமானால், ரூ.250 கோடிக்கு கீழே விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 5% அதிகரித்த வரிச் சலுகை. இந்தச் சலுகை மட்டுமல்லாமல், நடுத்தர சிறு, குறு வியாபார நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பதற்காக ரூ.3,794 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3,50,000 கோடி கடனுதவி வழங்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இவையெல்லாம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான ஊக்குவிக்கும் முயற்சிகள்.
இந்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி நிர்ணயித்துக் கொண்டிருக்கும் இலக்குகளை தனது முதல் நிதிநிலை அறிக்கையிலேயே நிர்ணயித்து நடைமுறைப்படுத்தியிருந்தால்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com