2018 -2019 நிதி நிலை அறிக்கை - IV

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் 2018-2019க்கான நிதிநிலை அறிக்கை அளவுக்கு இதற்கு முன்னால் தாக்கல் செய்யப்பட்ட வேறு எந்தவொரு நிதிநிலை அறிக்கையும் இந்தளவுக்குக்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் 2018-2019க்கான நிதிநிலை அறிக்கை அளவுக்கு இதற்கு முன்னால் தாக்கல் செய்யப்பட்ட வேறு எந்தவொரு நிதிநிலை அறிக்கையும் இந்தளவுக்குக் கேலிக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்குமா என்பது சந்தேகம்தான். அதற்குக் காரணம், அந்த அளவுக்கு நடுத்தர வர்க்கத்தினர் இந்த நிதிநிலை அறிக்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ''இந்தியாவில் ஒன்று, பணக்காரராக இருக்க வேண்டும், இல்லையென்றால், ஏழையாகவோ, விவசாயியாகவோ இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தினராக அதிலும், மாத வருவாய்ப் பிரிவினராக இருந்துவிடக்கூடாது'' என்கிற முணுமுணுப்பு பரவலாகவே காணப்படுகிறது.
''கால் ஊனமுற்றோருக்கான காலணிகளுக்கு வரி கிடையாது; மரணமடைந்தோர், இறந்த இரண்டாவது ஆண்டு முதல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்; கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்காக அரை டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை; விநோத விளையாட்டுகளில் ஈடுபடும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஜி.எஸ்.டி. யிலிருந்து விலக்களிக்கப்
படுகிறது; சர்க்கஸ், சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் கண்பார்வையற்றவருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது'' - அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கையைப் 'பகடி' செய்து இப்படியொரு பதிவு கட்செவி அஞ்சலில் பரப்பப்பட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கை என்பது வெறும் வார்த்தை ஜாலமாகவும், ஒருபுறம் கொடுப்பதுபோல் கொடுத்து இன்னொரு புறம் பிடுங்கிக் கொள்வதாகவும் இருந்தால், இதுபோன்ற விமர்சனங்கள் எழத்தான் செய்யும். 
நடுத்தர வர்க்கத்தினர் வஞ்சிக்கப்பட்டிருப்பதாகக் கருதுவதில் நியாயம் இருக்கிறது. மாத வருவாய்க்காரர்களுக்கு அவர்களுடைய மொத்த ஆண்டு வருவாயில் ரூ.40,000 கழிவு தருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவிக்கும்போது அதற்காக மகிழ்ச்சி அடைய முடியவில்லை. காரணம், இதற்கு முன்னால் மாத வருவாய்க்காரர்களுக்கு மருத்துவச் செலவினங்களுக்காக ரூ.15,000 மும் போக்குவரத்துச் செலவினங்களுக்காக ரூ.19,200 மும் அவர்களது வருமானத்திலிருந்து கழிவு தரப்பட்டு வந்தது. இப்போது அந்தக் கழிவு விலக்கப்பட்டிருக்கும் நிலையில், மாத வருவாய்க்காரர்களுக்கு மொத்தமாகக் கிடைக்க இருப்பது வெறும் ரூ.6,800 கழிவு மட்டுமே. அது போதாதென்று இதுவரை 3%ஆக இருந்த கல்விக்கான கூடுதல் வரியை (செஸ்) 4% ஆக அதிகரித்திருக்கிறார்கள். 
பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது புதிய நேரடி வரி விதிமுறைகளை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி ஆண்டுதோறும் வருமான வரியையும், அதன் வரம்பையும் மாற்றுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, 5 ஆண்டுக்கு மாற்றம் இல்லாமல் நிர்ணயிப்பது என்று ஒரு நல்லதொரு திட்டத்தை முன்மொழிந்திருந்தார். அதேபோல மாத வருவாய்ப் பிரிவினர் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் சுலபமாக வருமான வரியைத் தாக்கல் செய்யவும் வழிகோல வேண்டும் என்றும் முன்மொழிந்திருந்தார். அப்படியொரு இலக்கை நோக்கி நாம் பயணிக்கத் தயாராக இல்லை என்பதை இந்த நிதிநிலை அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.
எந்தவொரு நேரடி வரி விதிப்பிலும் வரி செலுத்துவோருக்கு சில சலுகைகளும், கழிவுகளும் தரப்படுகின்றன. பொதுமக்கள் சேமநல நிதி (பி.பி.எஃப்.), சேம நலநிதி, ஆயுள் காப்பீடு, கல்விக் கட்டணத்திற்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு என்று வருவாயிலிருந்து பல்வேறு வருமானவரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இந்தச் சலுகைகளைப் பெறுவது என்பது குடிமகனின் உரிமையும்கூட.
இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யாமல் போனால், மேலே குறிப்பிட்ட பல்வேறு வரி விலக்குகளுக்கான கழிவுகளைப் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது உலகிலேயே எந்தவொரு நாட்டிலும் காணப்படாத, கண்டனத்துக்குரிய நிபந்தனை.
அதேபோல, மாத சம்பளக்காரர்கள், ரூ. 2 கோடிக்கும் குறைவாக ஆண்டு விற்றுவரவுள்ள வியாபாரிகளோ, நபர்களோ ஜுலை 31க்குள், அதாவது, நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்தாக வேண்டும். அதேபோல ரூ.2 கோடிக்கு மேல் விற்றுவரவுள்ள வியாபாரிகளும், நபர்களும் 6 மாதங்களுக்குள் தாக்கல் செய்தாக வேண்டும். அப்படித் தாக்கல் செய்யாவிட்டால், அரசால் வழங்கப்பட்டிருக்கும் எந்தவிதச் சலுகைகளோ, கழிவுகளோ பெற முடியாது என்கிறது அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை.
இந்தியாவில் 8 கோடி 37 லட்சம் பேர் வருமானவரி தாக்கல் செய்கிறார்கள். இத்தனை பேருக்கும் வருமானவரி தாக்கல் செய்வதற்குப் போதுமான அளவு தொழின்முறை பட்டயக் கணக்காளர்கள் இல்லை என்பதுகூடவா நமது நிதியமைச்சருக்குத் தெரியாது? வருமானவரித் தாக்கல் செய்வது குறித்த சரியான புரிதல் உள்ள எந்தவொரு நிதியமைச்சரும், நிதியமைச்சக அதிகாரியும் இப்படியொரு நிபந்தனையை விதித்திருக்க வழியில்லை.
பொருளாதாரம் தெரிந்தவர்களும் சாமானிய மக்களின் பிரச்னைகளை உணர்ந்தவர்களும் நிதியமைச்சர்களாக இல்லாமல் போனால் மேதாவித்தனம் வெளிப்படுமே தவிர, அவர்கள் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை மக்களின் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாது. வழக்குரைஞரான நிதியமைச்சர் அருண் ஜேட்லி வார்த்தை வித்தகத்தால் கைத்தட்டல் பெற முனைந்திருக்கிறார். நரேந்திர மோடி அரசின் வாக்கு வங்கியான நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றி இருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com