2018 -2019 நிதி நிலை அறிக்கை - V

''பூவிலிருந்து வண்டு தேன் எடுப்பது போல மக்களுக்கு எந்தவித முகச்சுளிப்போ, பாதிப்போ இல்லாமல் வரிகள் விதிக்கப்பட வேண்டும்''

''பூவிலிருந்து வண்டு தேன் எடுப்பது போல மக்களுக்கு எந்தவித முகச்சுளிப்போ, பாதிப்போ இல்லாமல் வரிகள் விதிக்கப்பட வேண்டும்'' என்று கூறுவார் மூதறிஞர் ராஜாஜி. நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டதை இந்த நிதிநிலை அறிக்கை வெளிச்சம் போடுகிறது. 
வரி ஏய்ப்பு செய்யாமல் அனைவரும் குறித்த நேரத்தில் வரிகளைக் கட்டிவிடவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் நிதியமைச்சர். ஆனால், முறையாகக் கணக்குகளைத் தாக்கல் செய்ய விரும்பினாலும்கூட அதற்கு ஏற்றாற் போன்ற கட்டமைப்பு வசதிகள் அரசிடம் இருக்கிறதா என்றால், கிடையாது. 125 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 8 கோடி 70 லட்சம் பேர் 'பான்' எனப்படும் வருமான வரி அட்டைதாரர்கள். இவர்களில் 3.73 கோடி பேர்தான் வருமானவரி செலுத்துகிறார்கள்.
8.7 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஏதுவாக கணினி மென்பொருள் கட்டமைப்பு வசதி கடந்த மூன்று ஆண்டுகளாகியும் மேம்படுத்தப்படாததால், கெடு தேதிக்கான கடைசி ஒரு வாரத்தில் வருமான வரித்துறையின் இணையதளம் முடங்கிவிடுகிறது. கெடு தேதியைத் தள்ளிப்போடுவது ஆண்டுதோறும் வழக்கமாகி வருகிறது. வரி செலுத்துவோருக்கு அறிவுரை கூறும் நிதியமைச்சர் வருமான வரித்துறையின் இணையதள மென்பொருளை மேம்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை காட்டாமல் இருப்பதை என்னவென்று சொல்வது?
5 ஏக்கர் 10 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கு வருமான வரி விலக்கு அளிப்பதில் யாருக்கும் வருத்தமோ எதிர்ப்போ கிடையாது. ஆனால், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தின் மூலம் பலகோடி ரூபாய் வருவாய் ஈட்டுபவர்களுக்கு அல்லது கணக்குக் காட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? விவசாயத்தில் அனைத்துமே ரொக்கப் பரிவர்த்தனையாக காட்டப்பட்டு, கருப்புப் பணம் உருவாகிறது என்பதைத் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறார்களே, அதுதான் வியப்பாக இருக்கிறது. நில உச்சவரம்புச் சட்டம் போல விவசாய வருமானத்துக்கும் வரம்பு விதிக்காமல் இருப்பது ஏன்? 
நேரடி வரி வருவாய் ஐந்து விதமானது. முதலாவது, மாத ஊதியம். இரண்டாவது, அசையாச் சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருவாய். மூன்றாவது, வியாபாரத்தில் பெறும் ஆதாயமும், தொழில் ரீதியிலான வருவாயும். நான்காவதாக, முதலீட்டு ஆதாயம். இதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பங்குகள் உள்ளிட்ட முதலீடுகள். மற்றது, அசையாச் சொத்துகள். ஐந்தாவதாக, இதர வருவாய். 
நீண்டகால முதலீட்டு ஆதாயத்தில் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், 30 சதவீதமும், அதற்கு மேல் இருந்தால் 20 சதவீதமும் நீண்டகால ஆதாய வரியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், பங்குகளுக்கு மட்டும் இதிலிருந்து சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஓராண்டுக்குக் குறைவாக இருந்தால் 15 சதவீதமும், ஓராண்டுக்கு அதிகமாக இருந்தால் 10 சதவீதமும் மட்டும்தான் நீண்டகால மூலதன ஆதாய வரியாக வசூலிக்கப்படுகிறது. ஏன் இந்தப் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று யாரும் கேள்வி கேட்பதில்லை.
அந்நிய முதலீட்டாளர்களுக்கும், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும் உதவுவதற்காக கடந்த 15 ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும். பங்குச் சந்தையில் சிலர் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு நமது நிதியமைச்சர்கள் துணை போகிறார்களோ என்கிற ஐயப்பாட்டைத்தான் இந்தப் பாரபட்சம் எழுப்புகிறது.
அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கையில் பாராட்டுக்குரிய அம்சம் ஒன்று இருக்கிறது என்று சொன்னால், அது மூத்த குடிமக்களுக்கு அவர் அளித்திருக்கும் சலுகைகள். 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள முதியோர்களின் மக்கள்தொகை ஏறத்தாழ 30 கோடியாக உயரும் என்றும், மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படும் நிலையில், அவர்கள் குறித்து நிதியமைச்சர் கவலைப்பட்டிருப்பது நியாயமான அணுகுமுறை.
மூத்த குடிமக்கள் தங்கள் வங்கி மற்றும் தபால் நிலைய சேமிப்புகளிலிருந்து பெறும் வட்டி வருவாய்க்கான வருமான வரி வரம்பை 5 மடங்கு உயர்த்தி, ரூ.50 ஆயிரமாக ஆக்கி இருக்கிறார். அதேபோல, சேமிப்பிலிருந்து பெறும் வட்டிக்கு மூல வரிப்பிடித்தம் (டி.டி.எஸ்.) அகற்றப்பட்டிருக்கிறது. அவர்களது மருத்துவக் காப்பீடு, மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றுக்கான கழிவுகள் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தனையும் செய்த நிதியமைச்சர் அதிக அளவில் முதியோர் இல்லங்கள் நிறுவுவதை ஊக்குவிக்கவும் முனைப்பு காட்டியிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
2018-2019-க்கான நிதிநிலை அறிக்கையைப் படிக்கும்போது, ஜேட்லியின் முந்தைய நான்கு நிதிநிலை அறிக்கைகளையும் மீள் பார்வை பார்க்கத் தோன்றுகிறது. அவற்றில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் போதிய நிதியாதாரம் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் அவலத்தை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, அருண் ஜேட்லியின் தலைமையில் ஏற்கெனவே இருந்ததைவிட மிக மோசமாக, எதற்கெடுத்தாலும் அபராதம் விதிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. இது நல்லதொரு நிதி நிர்வாகத்திற்கான அறிகுறி அல்ல.
நம்மைவிட எல்லா விதத்திலும் மிகவும் மோசமாக இருக்கும் பாகிஸ்தானிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நல்ல அம்சம் இருக்கிறது. அங்கே முறையாக வரி தாக்கல் செய்வோருக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குகிறார்கள். அதன் மூலம் வரி தாக்கல் செய்வதை ஊக்குவிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அபராதம் விதிக்கும் எதிர்மறைப் போக்கை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. மக்களாட்சி நடக்கும் சுதந்திர நாட்டில் வரி செலுத்துவோருக்கு கெளரவமும், மரியாதையும் தருவதற்குப் பதிலாக, ஏமாற்றுக்காரர்களாகக் கருதும் மனப்போக்கு தொடர்வது நல்லதல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com