"அண்டர் - 19' வெற்றி!

கடந்த ஜனவரி 13 முதல் பிப்ரவரி 3-ஆம்

கடந்த ஜனவரி 13 முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நியூஸிலாந்தில் நடந்த, பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான ("அண்டர் - 19') 12-ஆவது உலகக் கிரிக்கெட் கோப்பை பந்தயத்தில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படும் "அண்டர் - 19' கிரிக்கெட் போட்டிகள் "யூத் வேர்ல்ட் கப்' என்கிற பெயரில் 1988-இல் தொடங்கப்பட்டது என்றாலும், 1998 முதல்தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
50 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் "அண்டர் - 19' உலகக் கிரிக்கெட் கோப்பைக்கான பந்தயம் நியூஸிலாந்தில் நடைபெற்றது. "அண்டர் - 19' பந்தயம் நியூஸிலாந்தில் நடப்பது இது 3-ஆவது முறை. இதில் 16 நாடுகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்வது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வேறு எந்த நாடும் "அண்டர் - 19' போட்டியில் இத்தனை முறை கோப்பையை வென்றதில்லை. 
"அண்டர் - 19' உலகக் கிரிக்கெட் கோப்பையை வென்றிருப்பது ஒரு மிகப்பெரிய சாதனை. நியூஸிலாந்தில் நடந்த "அண்டர் - 19' கிரிக்கெட் கோப்பை பந்தயத்தில் இந்தியா பங்கு பெற்ற அனைத்துப் போட்டிகளிலுமே நமது அணி வெற்றி பெற்றது என்பதுதான் இதன் சிறப்பு. 2000, 2008, 2012, 2018 என்று நான்கு முறை கோப்பையை வென்றிருக்கின்ற இந்தியா, "அண்டர் - 19' போட்டிகளில் 76 பந்தயங்களில் விளையாடி 57-இல் வெற்றி பெற்றிருக்கிறது.
நியூஸிலாந்தில் நடந்த "அண்டர் - 19' உலகக் கிரிக்கெட் கோப்பையை இந்தியா நான்காவது முறையாக வென்றிருப்பது என்பது, இந்தியாவின் இளைய தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாகவே தயாராகி வருகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இந்த போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய பலரும் கிராமப்புற இந்தியாவில் இருந்து வந்தவர்கள். கிரிக்கெட் என்பது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கத்தினரின் விளையாட்டு என்பது மாறி, இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைய தலைமுறை வீரர்கள் முன்னணிக்கு வருவதன் அடையாளம்தான் "அண்டர் - 19' போட்டியில் இந்திய அணியின் வெற்றி.
மேற்கு வங்கத்தில் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இஷான் போரல் என்ற இளைஞர் "அண்டர் - 19' போட்டியில் கிரிக்கெட் வீரர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மஞ்சோத் கல்ரா, சுபமான் கில், அனுகூல் ராய் ஆகியோர் 2018 "அண்டர் - 19' போட்டியால் அடையாளம் காணப்பட்டிருக்கும் வருங்கால இந்திய கிரிக்கெட் வீரர்கள். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கொள்கையாலும், முயற்சியாலும்தான் கிரிக்கெட் என்பது இந்தியாவின் எல்லா பகுதிகளையும் சென்றடைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 
திறமைசாலிகள் இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் அடையாளம் காணப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்படாவிட்டால் அவர்களது திறமை வீணாகிவிடும். இந்தியாவில் பல மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள்போதிய முறையிலான பயிற்சி கிடைக்காமலும், வாய்ப்பு கிடைக்காமலும் பெரிய அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனதுண்டு. 
இன்றைய கிரிக்கெட் என்பது வெறும் பணமும் புகழும் அளிப்பது மட்டுமல்ல. பல்வேறுவிதமான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவையெல்லாம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களை கிரிக்கெட் விளையாட்டின் மீது நாட்டம் கொள்ள ஈர்க்கின்றன. அவர்கள் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படாமல் போனால் அந்தத் திறமைகள் வீணாகிவிடுவது தவிர்க்க முடியாதது.
எந்த ஒரு விளையாட்டிலும் பயிற்சியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. பந்தயங்களில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றுவதற்கு விளையாட்டு வீரர்களைத் தயார்படுத்துவதுடன் பயிற்சியாளரின் பணி முடிந்துவிடுவதில்லை. திறமைசாலிகளை அடையாளம் கண்டு, அந்த இளைஞர்கள் எந்தத் துறையில் சிறப்பாக பரிணமிக்க முடியும் என்பதை உணர்ந்து அவர்களை உருவாக்குவதில் பயிற்சியாளர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
நியூஸிலாந்தில் நடந்த "அண்டர் - 19' கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளராகச் சென்றவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட். மிகச் சிறப்பாக இந்த முறை இந்திய அணிக்கு பயிற்சியும் ஊக்கமும் கொடுத்து "அண்டர் - 19' உலகக் கோப்பையை வெற்றியடையச் செய்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதுபோல இளம் வீரர்களைத் தயார் செய்யும் பயிற்சியாளர்களாக கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை "அண்டர் - 19' உலகக் கிரிக்கெட் கோப்பையின் வெற்றி உணர்த்துகிறது. அப்படி செய்தால் மட்டுமே இளைய தலைமுறையில் நல்ல திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களாகவும், வருங்கால இந்திய கிரிக்கெட் அணிக்கு வலு சேர்ப்பவர்களாகவும் உருவாக்க முடியும். 
"அண்டர் - 19' அணியில் உள்ள எல்லோருமே வருங்காலத்தில் இந்திய அணியில் விளையாடும் வீரர்களாக உருவாகாமல் போகலாம். ஆனால், உள்நாட்டுப் போட்டிகளிலும், ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளிலும் விளையாடும் தகுதி பெறுபவர்களாக உருவாகக் கூடும். அதற்கான நாற்றங்காலாக "அண்டர் - 19' போட்டிக்கு நடத்தப்படும் தேர்வுகளும், பயிற்சியும் மாற வேண்டும். 
இந்தியாவுக்கு நான்காவது முறையாக உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் பிருத்வி ஷா தலைமையிலான இளம் வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com