ஜனநாயக விபரீதம்!

மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும்

மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் உயர்ந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து அனைத்து அரசியல் கட்சியினர் மத்தியிலும் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். 
இந்தக் கோரிக்கை வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருந்தபோது அன்றைய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியால் எழுப்பப்பட்டது. அதற்குப் பிறகு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும்கூட அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது குறித்து மக்கள் மத்தியில் ஏற்படும் சலிப்பும், அதனால் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை குறைவும் ஏற்படுவதாக கருத்து தெரிவித்திருந்தார். 
ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது குறித்தும், மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஐந்தாண்டுப் பதவிக்காலம் உறுதிப்படுத்துவது குறித்தும் இதற்கு முன்பும்கூட பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.
1952, 1957, 1962, 1967 ஆகிய நான்கு பொதுத் தேர்தல்களிலும் மக்களவைக்கும் இந்தியாவிலுள்ள எல்லா சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டது. அதுவரை மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்ததால், எல்லா அரசுகளுமே தங்களது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ததுதான் அதற்குக் காரணம். 1967-இல் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளும் கூட்டணி ஆட்சிகளும் பதவிக்கு வந்தன. 
1969 காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசம் ஆகியது. 1971-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மக்களவையைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலுக்கு வழிகோலியபோது தங்களது பதவிக் காலம் முழுமையடையாத பல சட்டப்பேரவைகள் தேர்தலை எதிர்கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றதாகிவிட்டது.
1989-க்குப் பிறகு மத்தியில் தேசிய முன்னணி ஆட்சியும், பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சிகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமல்லாத நிலையை எட்டியிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்போது மீண்டும் ஒரே நேரத்தில் தேர்தல் கோரிக்கை பிரதமராலும் பாஜகவினராலும் எழுப்பப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களாவது நடைபெறுகின்றன. அப்போதெல்லாம் தேர்தல் வழிகாட்டு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அந்தக் காலகட்டத்தில் எந்தவிதமான மக்கள் நலத்திட்டங்களையும் அரசால் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படுகிறது. 
இன்னும் சொல்லப்போனால், பெரும்பாலான மாநிலங்களில் தேர்தல் மனோநிலை காணப்படுவதால் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ச்சியாக முனைந்து செயல்படுத்த முடிவதில்லை.
அதுமட்டுமல்ல, தேர்தல் என்று சொல்லும்போது, அரசு இயந்திரம் அநேகமாக ஸ்தம்பித்துவிடுகிறது. தேர்தல் ஆணையத்துக்கு உதவுவதற்காக அரசு ஊழியர்கள் தாற்காலிகமாக வழங்கப்படுகிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதுபோல பாதுகாப்புப் படையினரும் தேர்தல் பணிக்காக களம் இறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காவல் துறையின் கவனமும் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதை விட்டுவிட்டு, தேர்தல் நேர பாதுகாப்பில் திரும்பிவிடுகிறது. இவையெல்லாம்தான் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைப்பதற்கான காரணங்கள்.
இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு ரீதியான அரசியல் பார்வையும் பின்புலமும் கொண்டிருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் என்பது விவாதத்துக்கு வேண்டுமானால் நன்றாகத் தோன்றலாமே தவிர, நடைமுறை சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி. காரணம், மாநில அரசுகள் தனிப்பெரும்பான்மையுடன் செயல்படும்போது மக்களவையில் ஓர் அரசு பெரும்பான்மை பலம் இழந்துவிட்டால், மக்களவைத் தேர்தலுடன் நிலையான அரசுகள் இருக்கும் மாநில ஆட்சிகளைக் கலைத்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வழிகோலுவது என்பது சரியல்ல. 
அதேபோல, மாநில சட்டப்பேரவையில் ஓர் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் அடுத்த மக்களவைத் தேர்தல் வரும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் அந்த மாநிலம் வர வேண்டும் என்பதும் ஏற்புடையதல்ல. அது மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மறைமுக ஆட்சியாக இருக்குமே தவிர மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையாது.
இப்போது இருப்பதுபோல, ஐந்தாண்டு அதிகபட்ச காலவரம்பு இருக்கலாமே தவிர, ஐந்தாண்டு கட்டாயக் காலவரம்பு என்பது ஆபத்தானது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது மாற்று ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை முன்வைக்க வேண்டும் என்கிற விதிமுறை இருக்குமேயானால், எந்தவொரு வெகுஜன விரோத அரசும் ஆட்சியிலிருந்து அகற்றப்படாது. அது மக்கள் கருத்தின் குரல்வளையை நெரிப்பதாகத்தான் அமையும். 
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவும் ராஜஸ்தான் இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் படுதோல்வியும், ஒரே நேரத்தில் தேர்தல் என்கிற கோரிக்கை வலுப்பதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட சமூக, பொருளாதார, அரசியல் சூழல் காணப்படும் நிலையில், ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல், ஐந்தாண்டு கட்டாயக் காலவரம்பு போன்றவை நடைமுறை சாத்தியமல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com