வாளாவிருக்க முடியாது!

மாலத்தீவில் ஏற்பட்டிருக்கும் அரசியல்

மாலத்தீவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி உலக அரங்கில் அனைவரையும் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தென்கிழக்காக சுமார் 1000 கி.மீ. தூரத்தில் அரபிக் கடலில் இருக்கும் மாலத்தீவுக்கு புவியியல் ரீதியாக மிகப்பெரிய முக்கியத்துவம் இருப்பதால்தான் உலக நாடுகள் இந்தப் பிரச்னையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன. 
ஆசியாவுக்கும், ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து நடைபெறும் இந்து மகாசமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் உலக வல்லரசுகள் அனைத்துமே மாலத்தீவுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவுக்கு மிகமிக நெருக்கமான நாடாக இருந்த மாலத்தீவு, நமது ஏனைய அண்டை நாடுகளைப் போலவே சீனாவுடனான நெருக்கத்தை சமீப காலமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதும், மாலத்தீவின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதற்கான காரணம்.
1968-இல் இப்ராஹிம் நசீர் தலைமையில் மாலத்தீவு சுதந்திரக் குடியரசாக தன்னை அறிவித்துக் கொண்டது என்றாலும், மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை காணப்பட்டது. மக்கள் எழுச்சியின் விளைவாக இப்ராஹிம் ஆட்சி அகற்றப்பட்டது. மமூன் அப்துல் கயூம் 1978-இல் ஆட்சிக்கு வந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகள் மாலத்தீவில் அவரது ஆட்சிதான். மூன்று முறை அவருக்கு எதிரான புரட்சிகள் நடந்தும் வெற்றி பெறவில்லை. 
அப்துல் கயூமின் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன் வைத்தவர் முகமது நஷீத். மாலத்தீவின் மண்டேலா என்று அழைக்கப்பட்ட நஷீத், 2008-இல் நடந்த அதிபர் தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிபர் கயூமைத் தோற்கடித்து அதிபரானார். முகமது நஷீத் 2012-இல் மிகப்பெரிய எதிர்ப்புகள் கிளம்பியதன் பின்னணியில் பதவி விலகினார். அவர் கைது செய்யப்பட்டு தீவிரவாதக் குற்றச்சாட்டுக்காக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்று கூறி அவரது உடனடி விடுதலைக்கு சர்வதேச அளவில் அழுத்தம் தரப்பட்டது.
2013-இல் அதிபர் தேர்தல் நடந்தபோது, முதல் சுற்றில் முகமது நஷீத் அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும் அவர் தண்டிக்கப்பட்டவர் என்று காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது. மறு தேர்தலில் முன்னாள் அதிபர் கயூமின் உறவினரான அப்துல்லா யமீன் அதிபரானார். நஷீதுக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுத்தது. இப்போதும்கூட, மாலத்தீவில் கணிசமான ஆதரவை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் முகமது நஷீத் என்பதுதான் உண்மை.
இப்போதைய அரசியல் குழப்பங்களுக்கு காரணம், மாலத்தீவின் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு. முன்னாள் அதிபர் முகமது நஷீத், ஜும்கூரி கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம், அதாலத் கட்சித் தலைவர் இம்ரான் அப்துல்லா, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முகமது நஜீம் உள்ளிட்ட 12 அரசியல் குற்றவாளிகளையும் விடுவித்து கடந்த பிப்ரவரி 1-இல் மாலத்தீவின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் மீதான வழக்குகள் மாலத்தீவின் அரசியல் சாசனத்துக்கும் சர்வதேச சட்டத்துக்கும் எதிரானவை என்றும் நீதிமன்றத்தின் மீது வழக்கு விசாரணையில் அரசியல் அழுத்தம் தரப்பட்டது என்றும் தீர்ப்பு கூறியது. அதுமட்டுமல்லாமல், 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்தது. இதன் மூலம் மாலத்தீவின் நாடாளுமன்றமான மஜ்லிஸில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலம் அடைகின்றன.
இதைத் தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அகமது ஆரிப் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பணிவதாக அறிவித்தார். உடனடியாக அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப் போவதாகச் சொன்னவுடன் அவரும் மாற்றப்பட்டார். விளைவு, இளைஞர்கள் பெருந்திரளாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினர்.
இப்போது மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதிபர் யமீன் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல, அவருக்கு எதிராக இருக்கும் நீதிபதிகள் கைது செய்யப்பட்டு சாதகமாக இருக்கும் நீதிபதிகள் மூலம் முன்னால் தரப்பட்ட தீர்ப்பை திருத்தி எழுத முற்பட்டிருக்கிறார். சர்வதேச அளவில் ஐ.நா. சபை, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகியவை யமீன் உச்ச நீதிமன்றத்தின் 
முந்தையத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள். மாலத்தீவு பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, இந்தியா வாளாவிருக்க முடியாது. முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோருவதுபோல, மாலத்தீவில் இந்திய ராணுவம் தலையிடுவது என்பதும் இயலாது. ஏற்கெனவே சீனாவுடன் அதிபர் அப்துல்லா யமீன் நெருக்கமாக இருக்கும் நிலையில், எந்தவித ராணுவத் தலையீடும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை மாலத்தீவில் தோற்றுவிக்கக் கூடும்.
சீனா உடனடியாகத் தலையிடாமல் இந்தியாவுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்போவதாக தெரிவித்திருப்பது, நல்ல அறிகுறி. ஐ.நா. சபையின் மேற்பார்வையில் தேர்தலை நடத்தவும் அதை அதிபர் அப்துல்லா யமீனும், முன்னாள் அதிபர் முகமது நஷீதும் ஏற்றுக்கொள்வதுதான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். மாலத்தீவில் ஜனநாயகம் மலர்ந்தால் மட்டுமே இந்து மகாசமுத்திரத்தில் அமைதி நிலவும் என்பதை இந்தியாவும் சீனாவும் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துமே புரிந்து கொள்ள வேண்டும். 
இதேபோன்ற நிலைமை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வரவும் குறைந்தால் மாலத்தீவின் பொருளாதாரம் தகர்ந்து விடும். அது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும். ஆகவே, உடனடியாக ராஜதந்திர ரீதியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com