நீதியில் அநீதி!

இந்தியாவில் குடியரசுத் தலைவராகவும்

இந்தியாவில் குடியரசுத் தலைவராகவும், பிரதமராகவும், ஆளுநர்களாகவும், மாநில முதல்வர்களாகவும், மக்களவை, சட்டப்பேரவைத் தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும், தலைமைச் செயலாளர்களாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர்களாகவும்கூட பெண்கள் தங்களது திறமையாலும் கடின உழைப்பாலும் உயர முடிந்திருக்கிறது. மகளிருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் ஊராட்சி, உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பெருமளவில் பங்கு பெற்று முக்கியமான பதவிகளைத் திறம்பட வகிக்கிறார்கள். அனைத்துத் துறைகளிலும் பெண் சாதனையாளர்களின் பங்களிப்பு கணிசமாகவே இருக்கிறது.
ராணுவத்தில்கூட பெண்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். மருத்துவத் துறையிலும், கல்வித் துறையிலும், நிர்வாகத்திலும் பெண்கள் பெருமளவில் ஈடுபடுகிறார்கள் என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்கும்போது, நீதித்துறையில் மட்டும் பெண்கள் தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படாமல் ஒதுக்கப்படுகிறார்கள் என்கிற நிதர்சன உண்மை வேதனையளிக்கிறது. உச்ச நீதிமன்றத்திலுள்ள 25 நீதிபதிகளில் நீதிபதி ஆர்.பானுமதி ஒருவர்தான் பெண் என்பது, எந்த அளவுக்கு நீதித்துறையில் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்ட 1950}லிருந்து இன்று வரை 229 நீதிபதிகள் பதவி வகித்திருக்கிறார்கள். அவர்களில் ஆறே ஆறு பேர்தான் பெண்கள் என்கிற வேதனையான உண்மை சுடுகிறது. உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்டு 39 ஆண்டுகளுக்குப் பிறகுதான், 1989}இல் முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி உயர முடிந்தது. அதற்குப் பிறகு இன்னொரு பெண் நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் இடம் பெற ஆறு ஆண்டுகள் பிடித்தன. 
1994}இல் சுஜாதா மனோகர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அன்றிருந்து இன்று வரையிலான 23 ஆண்டு இடைவெளியில் நான்கே நான்கு பெண் நீதிபதிகள்தான் உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். 2014 ஆகஸ்டுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்துக்கு பெண்கள் யாரும் நீதிபதிகளாக நியமிக்கப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தியாவிலுள்ள 692 உயர்நிலை நீதிமன்றங்களில் 70 பேர்தான் பெண்கள். எட்டு உயர் நீதிமன்றங்களில் பெயருக்குக்கூட ஒரு பெண் நீதிபதி கிடையாது. 15,806 கீழமை நீதிமன்றங்களில் 4,409 பெண் நீதிபதிகள்தான் பதவி வகிக்கிறார்கள். 
நீதிமன்றங்களில் என்பது மட்டுமல்ல, இதுவரை இந்திய பார் கவுன்சிலில் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ ஒரு பெண்மணிகூட இருந்ததில்லை. 247 பார் கவுன்சில் உறுப்பினர்களில் ஏழு பேர் மட்டும்தான் பெண்கள் என்கிற அவலம் வழக்குரைஞர்களின் மனசாட்சியை உறுத்தவோ, உலுக்கவோ செய்யவில்லை என்பது வேதனையளிக்கிறது.
முத்தலாக் பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகளும் ஐந்து வெவ்வேறு மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள் என்று பாராட்டப்பட்டது. இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி இந்தியாவில் காணப்படும் முத்தலாக் விவாகரத்து முறை என்று பரவலாக விமர்சிக்கப்பட்ட, இஸ்லாமிய பெண்கள் தொடர்பான அந்த முக்கியமான வழக்கில் பல்வேறு மத நம்பிக்கையைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக இருப்பதா முக்கியம்? பெண்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஓர் அரசியல் சாசன அமர்வல்லவா இந்தப் பிரச்னையை விசாரித்திருக்க வேண்டும்? இதுபற்றி நீதித்துறையும் கவலைப்படவில்லை, அறிவுஜீவிகளும் கேள்வி எழுப்பவில்லை, பொது
மக்களும் கவனம் செலுத்தவில்லை.
அதேபோல, தன்மறைப்பு நிலை (பிரைவஸி) இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை என்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு கூறியது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்தத் தீர்ப்பை எழுதும்போது, அந்த நீதிபதிகளில் ஒருவர்கூட பெண் இல்லை. மிக முக்கியமான பிரச்னைகளிலோ, தீர்ப்புகளிலோ பெண்களின் உணர்வுக்கும், பெண்களின் கருத்துக்கும் நீதித்துறையும், இந்திய சமூகமும் இடமளிக்கவில்லை என்பதைத்தான் இது எடுத்துரைக்கிறது. இதுபற்றியும் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
தீர்ப்புகள் அனைத்துமே ஜாதி, மத, பாலியல் கண்ணோட்டம் இல்லாமல் வழங்கப்பட வேண்டும், வழங்கப்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பெண்கள் அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றால் மட்டுமே தீர்ப்புகள் சரியாக இருக்கும் என்றும் கூறிவிட முடியாது. பாலியல் தொடர்பான பிரச்னைகளில் பெண் நீதிபதிகள் சட்டத்தையும், நியாயத்தையும் மீறி பெண்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்துவிடுவார்கள் என்று கூற முடியாது. அதேபோல பெண்களின் உரிமைகளையும் கெüரவத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டும் முத்தலாக் விவகாரம் போன்ற பல்வேறு தீர்ப்புகள் ஆண் நீதிபதிகளால் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
பெண்கள் மிக அதிகமாக உள்ள இந்திய சமுதாயத்தில் அவர்களுக்குத் தர வேண்டிய முக்கியத்துவமும் இடமும் வாய்ப்பும் நீதித்துறையில் வழங்கப்படாமல் இருப்பது நியாயமல்ல. மக்களவையிலும் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கான இட ஒதுக்கீடு தேவையா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களில் கணிசமான அளவில் பெண் நீதிபதிகள் இடம் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியைப் பெண்மணி ஒருவர் அலங்கரிக்க இந்தியா இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கப் போகிறதோ, தெரியவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com