தீர்வு இல்லாமல் தேர்தல் இல்லை!

நாகாலாந்து சட்டப்பேரவைக்கான 60 தொகுதிகளுக்கு பிப்ரவரி 27-இல் நடக்கும் தேர்தலில் 195 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக நாகாலாந்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருக்கிறார்.

நாகாலாந்து சட்டப்பேரவைக்கான 60 தொகுதிகளுக்கு பிப்ரவரி 27-இல் நடக்கும் தேர்தலில் 195 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக நாகாலாந்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருக்கிறார். 195 பேர் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள் என்றாலும்கூட, நாகாலாந்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் எந்த அளவுக்கு முழுமையானதாகவும் முறையானதாகவும் மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கும் என்பது கேள்விக்குறி. 
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நாகாலாந்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டாக தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தன. அந்த 15 அரசியல் கட்சிகளில் தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும்கூட இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஒப்பந்தத்தை முதலில் மீறியது பாஜகதான். பாஜகவே அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ளுமோ என்கிற அச்சத்தில் ஏனைய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து களம் இறங்கியிருப்பதால் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போதும்கூட, இது எந்த அளவில் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக அமையும் என்கிற ஐயப்பாடு தொடர்கிறது. 
ஆளும் நாகாலாந்து மக்கள் கூட்டணி உள்பட மாநிலக் கட்சிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியாக இல்லை. நாகா ஆதிவாசி குழுக்களின் கூட்டமைப்பான நாகா ஹோஹோ என்கிற அமைப்பு மிகவும் முக்கியமானது. மாநில அரசியலில் மிகவும் செல்வாக்கு படைத்தது. நாகா சமாதான ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படாமல் தேர்தலை நடத்த நாகா ஹோஹோ எதிர்ப்பதற்கு காரணம் இருக்கிறது. 
1940 முதலே நாகாலாந்தில் உள்ள ஆதிவாசிக் குழுக்கள் தனி நாடு கோரிக்கையுடன் போராடி வருகின்றன. 1997-இல் தேவெ கெளடா பிரதமராக இருந்தபோது சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கூட்டமைப்பு என்கிற குழுவுடன், 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த நாகா தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சில அடிப்படைப் பிரச்னைகளில் தேவெ கெளடா அரசு புரிந்துணர்வு ஏற்படுத்தியது என்றாலும்கூட எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால், சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் மட்டும் நடந்து வந்தன.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2015 ஆகஸ்டில் மீண்டும் தீவிரவாதக் குழுக்களுடன் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் குழுவின் தலைவர்களில் ஒருவரான முயிவாவுடன் பேச்சுவார்த்தை நடந்தபோது, பிரதமர் மோடியும் அதில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அந்தப் பேச்சவார்த்தையைத் தொடர்ந்து, 'இன்று நாகா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து வருங்காலத்திற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். இத்தனை நாள் இருந்த உங்களது காயங்களை ஆற்றி பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி செய்வது மட்டுமல்ல, உங்களுடைய பெருமையையும் கெளரவத்தையும் நிலைநாட்டுவதில் நாங்கள் துணை இருப்போம்' என்று பிரதமர் நரேந்திர மோடி அப்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
நாகா தீவிரவாதிகளின் நீண்டநாள் கோரிக்கை நாகாலிம் என்கிற அகண்ட நாகாலாந்து. அதாவது, நாகர்கள் அதிகமாகக் காணப்படும் இப்போதைய நாகாலாந்து மட்டுமல்ல, அஸ்ஸாம், மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள நாகர்கள் அதிகம் உள்ள பகுதிகளையும் இணைத்து அதை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் குழுவின் நீண்ட நாள் கோரிக்கை. அதற்கு அண்டை மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர், அருணாசல பிரதேசத்தில் ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்பு நிலவிவந்தது. இந்த நிலையில்தான் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாகாலாந்து தீவிரவாத இயக்கத்தினருடன் கடந்த 2015 ஆகஸ்ட் 3-இல் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. 
மத்திய அரசுக்கும், நாகா தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படை குறித்தோ, சாராம்சம் குறித்தோ வெளியில் எதுவும் கூறப்படவில்லை. தனியாக உருவாக்கப்படும் நாகா மாநிலத்திற்கு காஷ்மீரத்துக்கு தரப்பட்டுள்ள சில தனியுரிமைகள் தரப்படக்கூடும் என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டது. அவற்றை வலுப்படுத்துவது போல சில ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அண்டை மாநிலமான அஸ்ஸாமில் மிகப்பெரிய கலவரம் வெடித்து சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
மத்திய அரசு இது குறித்து விவரங்களை வெளியிடாமல் தேர்தலை அறிவித்திருப்பது நாகாலாந்தில் மிகப்பெரிய எதிர்ப்பை உருவாக்கியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமாவில் திரும்பிய இடமெல்லாம் 'தீர்வு இல்லாமல் தேர்தல் இல்லை' என்கிற பேனர்களும் சுவரொட்டிகளும் காணப்படுகின்றன. கடந்த முறை பிரதமர் வந்தபோது 2017-க்குள் பிரச்னையைத் தீர்த்து, அதை நாகா மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக வழங்குவோம் என்று குறிப்பிட்டதை எதிர்க்கட்சிகளும் நாகா அமைப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன. நாகாலிம் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து தரப்பட்டு தனிக் கொடி, தனி நாணயம், தனி கடவுச்சீட்டு என வழங்கப்பட இருக்கின்றன என்றுகூட பரவலாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. 
இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு செய்துகொண்டிருக்கும் ஒப்பந்த விவரத்தை வெளியிடுவதுதான் ஜனநாயகத்துக்கும் இந்திய தேசத்தின் சான்றாண்மைக்கும் உகந்ததாக இருக்கும். அப்படியல்லாமல், தேர்தல் நடந்தால் அரசு அமையும், ஆனால், அமைதியும் நிலவாது, தீவிரவாதமும் குறையாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com