குறைந்துவரும் காடுகள்!

இயற்கைக்கோள் ஆய்வின் அடிப்படையிலான

இயற்கைக்கோள் ஆய்வின் அடிப்படையிலான "இந்திய வனப்பரப்பு அறிக்கை - 2017' என்ற ஓர் அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி, வனங்கள் மற்றும் மரங்கள் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 24.4% அளவில் இருப்பதாக தெரிவிக்கிறது. மொத்த வனப்பரப்பை அடர்த்தியான காடுகள், சுமாரான காடுகள், திறந்த வெளிக் காடுகள், சிறு காடுகள் என்று வகைப்படுத்தியிருக்கிறது இந்த அறிக்கை. அந்த அறிக்கையின்படி இந்தியாவின் மரங்களாலான பசுமைப்பரப்பு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது ஒரு சதவீதம் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 
சுற்றுச்சூழல் கொள்கையின்படி, இந்தியாவின் மொத்த வனப்பரப்பை 33 சதவீதமாக, அதாவது, நாட்டு நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்காக, அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மொத்த பசுமைப்பரப்பு 20 சதவீதமாக இருந்தது, இப்போது அது 24.4 சதவீதமாக அதிகரித்திருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். 
ஆங்காங்கே பரவலாக மரம் நடுதல், பசுமைப்பரப்பை அதிகரித்தல் இவையெல்லாம் வரவேற்புக்குரிய முயற்சிகள் என்றாலும்கூட, அவை பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு காரணமாக அமையும் அடர்த்தியான காடுகளுக்கு இணையாக மாட்டாது. வணிக நோக்கத்துடன் பயிரிடப்படும் "பிளான்டேஷன்கள்' என்று பரவலாக அழைக்கப்படும் ரப்பர், தேயிலை, காப்பி, முந்திரி, சவுக்கு, மலை விளைப் பொருள்கள் ஆகிய தோட்டப் பயிர்கள் பசுமைப் பகுதிகள் என்கிற பட்டியலில் இணைக்கப்படலாமே தவிர, செடிகளும், கொடிகளும், மரங்களும், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்களும் வாழும் "வெயில்கூடப் புகமுடியாத அடர்த்தியான' காடுகளுக்கு இணையாக முடியாது.
இந்தியாவிலுள்ள வனங்கள் 1936-இல் சர். சாம்பியன் என்பவரால் தரம் பிரிக்கப்பட்டன. 1968-இல் எச்.ஜி. சாம்பியனும், எஸ்.கே. சேத் என்பவரும் மறுஆய்வு செய்து இது குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டனர். இப்போது மீண்டும் இந்திய வனங்கள் குறித்து ஒரு மறு ஆய்வுக்கு டெராடூனிலுள்ள இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் முற்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட, 1968 சாம்பியன், சேத் ஆய்வுதான் இப்போதும்கூட அடிப்படையாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் 16 விதமான அடர்த்தியான காடுகளும் 221 விதமான சிறு வனப்பரப்புகளும் இருப்பதாக சாம்பியன், சேத் அறிக்கை கூறுகிறது. 
16 அடர்த்தியான வனங்கள் இந்தியாவில் இருந்தாலும்கூட, பல நூற்றாண்டுகளாக காலனிய சுரண்டல்களுக்கு ஆட்பட்டதால் இந்திய வனங்கள் பழைமையான நிலையை இழந்துவிட்டிருக்கின்றன. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து பல வளர்ச்சிப் பணிகளின் அழுத்தத்தால் காடுகள் தங்களது பரப்பில் பெரும் பகுதியை இழந்துவிட்டிருக்கின்றன என்பது மட்டுமல்ல, தங்களின் அடர்த்தியையும் இழந்துவிட்டிருக்கின்றன.
வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மிசோரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் ஏறத்தாழ 1200 சதுர கிமீ வனப்பரப்பு கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் சர்வதேசப் பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அளவுக்கான வனப்பகுதிகள் அழிக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் முனைப்புடன் மரங்கள் நடப்பட்டு, பசுமைப் பகுதிகள் அதிகரிக்கப்படுகின்றன என்றாலும்கூட, அவை வடகிழக்கு மாநிலங்களில் நாம் இழந்திருக்கும் 1200 சகிமீ வனப்பரப்பை ஈடு செய்துவிட முடியாது.
சமீபத்திய மதிப்பீட்டின்படி, 10% முதல் 45% அளவில் மரங்கள் காணப்படும் திறந்தவெளிக் காடுகளின் பரப்பளவு ஏறத்தாழ 3 லட்சம் சதுர கிமீ. இவைதான் பல்வேறு வகையான, இந்திய மண்ணுக்கே உரித்தான, மரங்கள் மீண்டும் பெரிய அளவில் வளர்வதற்கும், செழிப்பதற்கும் வழிகோலுகின்றன. இதுபோன்ற திறந்தவெளிக் காடுகளை மத்திய அரசு ஊக்குவிப்பதுடன் மட்டுமல்லாமல் அவை எந்த விதத்திலும் வளர்ச்சிப் பணி என்கிற பெயரிலோ, கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்காகவோ ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
வனப்பரப்பு என்கிற வார்த்தை ஒரு ஹெக்டேர் நிலப்பரப்புக்கு மேல் உள்ள பகுதியில் 10 சதவீதத்துக்கு அதிகமாக மரங்கள் இருப்பது என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த நிலப்பரப்பு தனியார் உடையதாக இருந்தாலும், எந்தவிதமான பயன்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்தாலும், அவை வனப்பரப்பு என்று அறிக்கை கூறுகிறது. இந்த விளக்கம் சரிதானதல்ல. அடர்த்தியான வனங்கள் மட்டுமே வனப்பரப்பு என்று கருதப்படுமேயானால், இந்திய வனப்பரப்பு அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் 24.4 சதவீத வனப்பரப்பு அளவு என்பது கணிசமாக குறைந்துவிடும். 
இப்போதிருக்கும் அடர்த்தியான காடுகளின் நிலப்பரப்பை நம்மால் அதிகரிக்க முடியாவிட்டாலும், தற்போதுள்ள காடுகள் சுருங்கிவிடாமலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அவற்றில் மரங்கள் வெட்டப்படாமலும் இருப்பதை உறுதிப்படுத்துவம்தான் இன்றைய தேவை. ஆட்சியில் இருப்பவர்களும், அதிகாரிகளும், வனத்துறை ஊழியர்களும் காடுகளில் உள்ள மரங்களை வெட்டிக் கொள்ளை லாபம் ஈட்டும் வியாபாரிகளும் ஒத்துழைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். 
கண்ணை விற்று நாம் சித்திரம் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com