லோக்பால்தான் தீர்வு!

இந்திய ஜனநாயகத்தின் போக்கையும்

இந்திய ஜனநாயகத்தின் போக்கையும் அமைப்பையும் கட்டிக்காத்து நிர்ணயிக்க வேண்டிய அரசியல் கட்சிகள், மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்கூத்தாக்க மாற்ற முற்பட்டிருப்பதால், மீண்டும் மீண்டும் நீதித்துறை தலையிட்டு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவலம் உள்ளாகியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மேலும் சில கடுமையான நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகளுக்கு ஏற்றாற்போலத் தேவையான மாற்றங்களை இந்தியத் தேர்தல் பிரதிநிதித்துவச் சட்டத்தில் ஏற்படுத்தும்படி மத்திய ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த வரவேற்கத்தக்க உத்தரவை இந்திய ஜனநாயகத்தில் அக்கறையுள்ள அனைவருமே வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம். 
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் தங்களைக் குறித்த பல்வேறு விவரங்களை அதில் இணைக்க வேண்டும் என்கிற விதிமுறை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஏற்கெனவே கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதன்படி தங்களது கல்வித் தகுதி, வருமானம், சொத்துகளின் மதிப்பு, தங்கள் மீதுள்ள குற்றவியல், குடிமையியல் தொடர்பான வழக்குகள், தங்களது குடும்பத்தினர் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை வாக்காளர்கள் அறிந்துகொள்ள வேட்பாளர் குறித்த அனைத்துத் தகவல்களையும் வேட்புமனு படிவத்துடன் இணைக்க வேண்டும். இப்போது அந்த சட்டத்தில் மேலும் சில புதிய இணைப்புகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இனிமேல் தங்களது வருமானம் மட்டுமல்லாமல், வேட்பாளரின் மனைவி, மனைவியர், குழந்தைகள் உள்ளிட்ட வேட்பாளரைச் சார்ந்திருக்கும் அனைத்து உறவினர்களின் வருமானம் மற்றும் சொத்து விவரங்களையும் வேட்புமனுவில் இணைத்தாக வேண்டும். அதேபோல, ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களது பதவிக் காலத்தில் அதிகரித்துக் கொள்ளும் சொத்து மதிப்புகள் குறித்து விசாரிக்க ஒரு நிரந்தர அமைப்பு ஏற்படுத்தும்படியும் அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது. பதவிக் காலத்தில் வழக்கத்துக்கு அதிகமாக சேர்த்திருக்கும் அல்லது விளக்கம் கூற முடியாமல் அதிகரித்திருக்கும் சொத்துகள் குறித்த விசாரணை வளையத்துக்குள் அனைத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நோக்கம்.
லோக் பிரகாரி என்கிற தன்னார்வ நிறுவனம் தொடுத்த பொதுநல வழக்கில்தான் உச்ச நீதிமன்றத்தின் அமர்வு இப்படியொரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இதற்கு முன்னாலும் இதுபோன்ற பல மாற்றங்களைத் தேர்தல் ஆணையம் கொண்டுவருவதற்கு உச்ச நீதிமன்றம் காரணமாக இருந்திருக்கிறது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் "நோட்டா' என்கிற வாய்ப்பை ஏற்படுத்தியது நீதிமன்றம்தான். அதேபோல, குற்றம் நிரூபிக்கப்பட்டால் உறுப்பினர்கள் மேல்
முறையீடு செய்துகொள்ளத் தரப்பட்டிருந்த கால அவகாசத்தை அகற்றி, அவர்கள் தொடர்ந்து பதவி வகிப்பதைத் தடுக்க உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்கிற உத்தரவை பிறப்பித்ததும் நீதிமன்றம்தான்.
வாக்களிப்பது என்பது குடிமகனின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று என்பதால், வேட்பாளர்கள் குறித்த அனைத்து விவரங்களும் வாக்களிப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் உறுப்பினர்களின் வருவாய் குறித்த விவரங்கள் பற்றி இப்போது உத்தரவிட்டிருக்கும் மாற்றங்கள் மிகவும் அவசியமானவை, முக்கியமானவை. தேர்தலுக்குத் தேர்தல் உறுப்பினர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிப்பது என்பதும், கடந்த தேர்தலில் தாக்கல் செய்த விவரங்களுக்கும் அடுத்தத் தேர்தலுக்கு தாக்கல் செய்யும் விவரங்களுக்கும் இடையே காணப்படும் மாற்றங்கள் குறித்த விளக்கத்தைப் பெறுவது என்பதும் வாக்காளரின் அடிப்படை உரிமை. அதைத்தான் உச்ச நீதிமன்ற உத்தரவு பிரதிபலித்திருக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் திடீர் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவது என்பது நீண்ட காலமாகவே இந்திய ஜனநாயகம் சகித்துக் கொண்டிருக்கும் முரண். புதிய விதிமுறைகள் மூலமும், சட்டத்தின் மூலமும், மக்கள் நம்பிக்கைக்கு விரோதமான இந்த நடவடிக்கை தடுக்கப்பட்டேயாக வேண்டும். 
தனது உத்தரவுக்கு வலுசேர்க்கும் விதத்தில் உச்ச நீதிமன்றம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 123-இல் ஒரு புதிய திருத்தத்தை இணைக்கக் கோரியிருக்கிறது. அதன்படி, தங்களது சரியான சொத்து மதிப்பை, அதனை அடைந்த வழிமுறைகளை வேட்பாளர் தெளிவுபடுத்தாமல் இருப்பதை "லஞ்ச ஊழல்' என்று வகைப்படுத்த முற்பட்டிருக்கிறது. இதற்கு சட்டத்திருத்தம் தேவையில்லை என்றும், தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து 
ஏற்கெனவே இருக்கும் சட்டத்தில் புதிய விதிமுறைகளைச் சேர்க்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
அதேநேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தவறான வழிகளிலும், தங்களது நியாயமான வருமானத்துக்கு அதிகமாகவும் சொத்து சேர்ப்பதை கண்காணிக்கவும் அது குறித்து விவரங்களைத் திரட்டவும் ஒரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவில்லாமல் இருக்கிறது. அதற்காகத் தனியாக அமைப்பு ஏற்படுத்த முடியுமா அல்லது யாருடைய கட்டுப்பாட்டில் அந்த அமைப்பு இயங்கும், அந்த அமைப்பு தன்னுடைய விசாரணையின் அடிப்படையில் குறிப்பிட்ட உறுப்பினர் மீது வழக்குத் தொடரவோ, பதவி நீக்கம் செய்யவோ பரிந்துரைக்கும் அதிகாரம் பெற்றதாக இருக்குமா என்பதெல்லாம் குறித்தத் தெளிவு இல்லை.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும், நோக்கமும் வரவேற்புக்குரியது. இதற்காகத்தானே பல ஆண்டுகளாக லோக் பால், லோக் ஆயுக்த வேண்டும் என்று அரசியல் தூய்மைக்கான அமைப்புகள் போராடி வருகின்றன? அரசியல் சாசன அமைப்பாக லோக் பால் உருவாக்கப்படுவதுதான் இதற்குத் தீர்வாக இருக்கக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com