மோதல்போக்கு கூடாது!

தில்லியில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு மிகவும் கீழ்த்தரமான அளவுக்கு தரம் தாழ்ந்திருக்கிறது.

தில்லியில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு மிகவும் கீழ்த்தரமான அளவுக்கு தரம் தாழ்ந்திருக்கிறது. தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ், இரண்டு ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களால் முதல்வர் முன்னிலையில் தாக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அந்த இரண்டு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில், தலைமைச் செயலர் தங்களது ஜாதியின் பெயரைக் கூறி தரக்குறைவாகத் திட்டியதாக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
பிரச்னை அத்துடன் நின்றுவிடவில்லை. தில்லி தலைமைச் செயலகத்தில் பாஜக கட்சியினர் பலர், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் இம்ரான் உசேனை தாக்கியிருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திற்கு வந்த அமைச்சர்களுக்கு எதிராக அரசு ஊழியர்கள் கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். தில்லி அரசில் பணி புரியும் இந்திய அரசுப் பணி அதிகாரிகளும் தலைமைச் செயலர் தாக்கப்பட்டதைக் கண்டித்து காந்தியடிகளின் சமாதியான ராஜ்கோட்டிலிருந்து மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தித் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். இவையெல்லாம் ஆரோக்கியமான நிர்வாகத்திற்கும், அரசியல் செயல்பாட்டிற்குமான அடையாளம் அல்ல என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க நியாயமில்லை.
கடந்த திங்கள்கிழமை மாலையில் இரவு 12 மணியளவில் முக்கியமான சில பிரச்னைகள் குறித்து விவாதிக்க முதல்வரின் இல்லத்துக்கு வரும்படி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷுக்கு அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து அவரும் முதல்வரின் இல்லத்துக்கு நள்ளிரவில் சென்றிருக்கிறார். 
ஆம் ஆத்மி கட்சி பதவிக்கு வந்த மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ய இருக்கும் நிலையில், அது குறித்து விளம்பரங்கள் தரப்படுவதில் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமைச்சர்களும் தங்கள் அதிருப்தியைத் தலைமைச் செயலரிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் சாதனைகள் குறித்த தொலைக்காட்சி விளம்பரங்களை வெளியிடுவதை தாமதப்படுத்தும் தலைமைச் செயலரின் போக்கைக் கண்டித்து வழக்குத் தொடருவோம் என்பது வரை மிரட்டியதாகத் தலைமைச் செயலர் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். 
அதேநேரத்தில், பொதுமக்களுக்கு முறையாக ரேஷன் வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்குத்தான் தலைமைச் செயலர் அழைக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தெரிவிக்கின்றனர். வேடிக்கை என்னவென்றால், முதல்வரின் இல்லத்தில் துணை முதல்வரும், 11 ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களும் காணப்பட்டார்களே தவிர, ரேஷன் விநியோகம் தொடர்பான உணவு மற்றும் பொதுவிநியோகத் துறையின் அமைச்சர் அங்கே இருக்கவில்லை என்பதுதான். 
இரண்டு தரப்பின் கூற்றிலும் முழுமையான உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சி பதவிக்கு வந்தது முதலே அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே காணப்படும் மோதல் போக்கு தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு சில முக்கியமான துறைகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் நேரடியான மோதல் காணப்பட்டது ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானது. கடந்த டிசம்பர் 2015-இல் இரண்டு அரசு அதிகாரிகள் முதல்வர் கேஜரிவாலால் தாற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 200 அரசு அதிகாரிகள் மொத்தமாக விடுப்பில் சென்று ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்.
தலைநகர் தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும்கூட, அங்கு முழுமையான அதிகாரம் படைத்த மாநில அரசு செயல்படவில்லை. இந்தியாவின் தலைநகர் பகுதியை உள்ளடக்கியது என்பதால், தில்லி மாநில அரசு ஏனைய மாநில அரசுகள் போலவோ, யூனியன் பிரதேசங்கள் போலவோ அதிகாரம் பெற்றதாக அமையவில்லை. பெரும்பாலான அதிகாரங்கள், குறிப்பாக, காவல்துறை துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில்தான் தொடர்கிறது. தலைமைச் செயலாளர் முதல்வருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, துணைநிலை ஆளுநருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் தரும் முக்கியத்துவம் அதிகம். மத்திய அரசுக்கு இணக்கம் இல்லாத எதிர்க்கட்சிகள் தில்லியில் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அந்த அரசின் செயல்பாடுகளுக்கு துணைநிலை ஆளுநரும் அதிகாரிகளும் மத்திய உள்துறையும் முட்டுக்கட்டை போடுவது புதியதொன்றும் அல்ல.
2015-இல் தில்லி சட்டப்பேரவையின் 70 இடங்களில் 67 இடங்களை வென்று பாஜகவையும் காங்கிரஸையும் ஆம் ஆத்மி கட்சி நிலைகுலைய வைத்து ஆட்சியைக் கைப்பற்றியது முதல், முதல்வர்அரவிந்த் கேஜரிவாலின் செயல்பாடுகளை எப்படியெல்லாம் முடக்க முடியுமோ, அப்படியெல்லாம் முடக்க மத்திய ஆளும் கட்சியான பாஜக முயல்கிறது என்பது உண்மை. அதேபோல, மத்திய பாஜகவுக்கு எதிராக செயல்படுவதன் மூலம் மட்டும்தான், தான் ஓர் அரசியல் கட்சியாகத் தொடர முடியும் என்கிற தவறான கண்ணோட்டத்துடன் துணைநிலை ஆளுநருடனும் அதிகார வர்க்கத்துடனும் மத்திய அரசுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதிலேயே முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முனைப்பாக இருக்கிறார் என்பதும் உண்மை.
அதிகார வர்க்கமும் ஆட்சியாளர்களும் இணைந்து செயல்படாமல் மோதல்போக்கைக் கடைப்பிடிப்பது மக்களுக்கு இழைக்கும் அநீதி. கடைசியாக ஒரு வார்த்தை, இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியைக் கலைத்து, மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தலுக்கு வழிகோலும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்காது என்று எதிர்பார்ப்போமாக!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com