தெரியாமலா நடக்கிறது?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி நடத்தியிருக்கும் மோசடி இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக வங்கித் துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி நடத்தியிருக்கும் மோசடி இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக வங்கித் துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்திய வங்கிகளில் ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு பிரச்னைகள், மோசடிகள், ஊழல்கள் அம்பலமாகி வருகின்றன. இப்போது அந்த வரிசையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் சேர்ந்துகொண்டிருக்கிறது. 
அதிகரித்து வரும் வங்கி மோசடிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இப்போதைய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிக்கு முன்னால் 2012 - 13 முதல் 2016 -17 வரையிலான காலகட்டத்தில் இந்திய வங்கிகளில் ஏறத்தாழ ரூ.69,770 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில்தான் இழப்பில் இயங்கும் வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், வாராக் கடன்களால் பாதிக்கப்பட்டிருக்கும் 21 பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்றவும் மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாயை அளித்து உதவுவதற்கு மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கடந்த மாதம் அறிவித்தது.
நீரவ் மோடி மோசடியின் தொடர்பாக 10 அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அளவிலான மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் பணிபுரியும் ஊழியர்களால் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. இதற்காக அந்த ஊழியர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் புதியதா என்றால், அதுவும் இல்லை. புரிந்துணர்வு கடிதங்களின் மூலம் பல்வேறு வங்கிகளில் மோசடி நடந்திருக்கும் நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி நீரவ் மோடி தொடர்பான இந்த மோசடியும் ஏழு ஆண்டுகள் எந்த விவரமும் தெரியாமல் இயங்கி வருகிறது என்று சொன்னால், அதை எப்படி ஏற்றுக்கொள்வது? இது குறித்த உயர்அதிகாரிகளுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பது உண்மையானால், அவர்கள் அந்தப் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள் என்பதுதான் உண்மை. 
இந்த பிரச்னையில் வங்கி நிர்வாகம், வங்கியின் உடைமைதாரரான இந்திய அரசு, வங்கியின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள ரிசர்வ் வங்கி என்று அனைவருமே குற்றவாளிகள். வங்கியின் இயக்குநர்கள் குழு, கணக்குத் தணிக்கையாளர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்திருக்கிறார்கள். இப்படி எல்லா அரசு வங்கிகளிலும் மேலிருந்து கீழே வரை பரவலாகக் காணப்படும் பொறுப்பின்மைதான் இதுபோன்ற வங்கி மோசடிகளுக்கு அடிப்படைக் காரணம். 
இந்திய வங்கிகளில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு கடன் வழங்குவதற்கு, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அப்படியிருக்கும்போது, ரிசர்வ் வங்கி எந்த வெளிநாட்டிலும் இல்லாத புதுமையான 'புரிந்துணர்வுக் கடிதம்' என்கிற வழிமுறையை அறிமுகப்படுத்துவானேன்? இந்தியாவிலுள்ள ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலவரம்புடன் வழங்கப்படும் புரிந்துணர்வுக் கடிதத்தின் அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் இந்த முறையின் அடிப்படை. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த நபர் வாங்கிய கடனை திருப்பித் தராவிட்டால், புரிந்துணர்வு கடிதத்தின் அடிப்படையில் கடன் கொடுத்த வெளிநாட்டு வங்கிக்கு கடிதத்தை வழங்கிய வங்கி, அந்த பணத்தை கொடுத்தாக வேண்டும். இதுபோன்ற கடிதத்தை தங்களது செல்வாக்கால் பெற்று அதன் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி உதவ வேண்டிய அவசியம் என்ன?
பரவலாக அடித்தட்டு மக்களுக்கு வங்கிச் சேவைகள் போய்ச்சேரவில்லை என்பதால் 1969 ஜூலை மாதம் 14 பெரிய தனியார் வங்கிகள் இந்திரா காந்தி அரசால் தேசியமயமாக்கப்பட்டன. 1980-இல் மேலும் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இப்போது நாட்டில் ஏறத்தாழ 80 விழுக்காடு வங்கிச் சேவைகளை அரசு வங்கிகள்தான் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நீரவ் மோடி மோசடியைத் தொடர்ந்து இனிமேலும் வங்கிச் சேவையை அரசு நடத்த வேண்டுமா, தனியார்மயமாக்கிவிடக் கூடாதா என்கிற கேள்வி பரவலாகவே எழுப்பப்படுகிறது.
அரசு வங்கிகளில் ஏறத்தாழ ரூ.9,50,000 கோடி ரூபாய் அளவில் வாராக்கடன் காணப்படுகிறது. இந்த கடனுக்கெல்லாம் காரணம், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள். அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கடன் தள்ளுபடி, சலுகைகள், வட்டி தள்ளுபடி என்று அவர்களைக் கெஞ்சிக் கூத்தாடி அரசு வங்கிகள் பணத்தைத் திரும்பப் பெற எத்தனிக்கின்றன. அதே நேரத்தில், சாமானிய குடிமகன் வாகனம் வாங்குவதற்கோ, கடன் அட்டைக்காகவோ வங்கியில் கடனைச் செலுத்தத் தவறினால் அவர்கள் மீது சட்டம் பாய்கிறது என்பது மட்டுமல்ல, பத்திரிகைகளில் அவர்களது படம் வெளியிடப்பட்டு அவமானப்படுத்தபடுகிறார்கள். அத்துடன் நின்றுவிடவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களும், நீரவ் மோடிகளும் வங்கிகளில் மோசடி செய்வதால் ஏற்படும் இழப்பை சாமானியன் வரிப்பணத்தால் அரசு ஈடுகட்ட முற்படுகிறது.
விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் வெறும் அடையாளங்கள்தான். இவர்களைப் போல பலர் எல்லா அரசு வங்கிகளையும் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் ஏற்படும் இழப்பை சாதாரண வாடிக்கையாளர்களை தண்டித்து, வங்கிகள் ஈடுகட்ட முற்படுகின்றன. 
மக்களின் சேமிப்பும், மக்களின் வரிப்பணமும் வங்கிகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களால் சுரண்டப்படுவதை தடுப்பது எப்படி? இதற்கான விடை அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் அரசு வங்கிகளின் நிர்வாகத்திற்கும் தெரியும். நமக்குத்தான் தெரியவில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com