வீணாகிப்போன வாய்ப்பு!

கடந்த 17-ஆம் தேதி இந்தியாவுக்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏழு நாள்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தும், அரசு அலுவல்களுக்காக அவர் ஒதுக்கி இருந்தது

கடந்த 17-ஆம் தேதி இந்தியாவுக்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏழு நாள்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தும், அரசு அலுவல்களுக்காக அவர் ஒதுக்கி இருந்தது அரைநாள் மட்டுமே என்பது வியப்பளிக்கிறது. இந்தியாவுக்கு எந்த வெளிநாட்டு அதிபரோ, பிரதமரோ வந்தால், உடனடியாக அவர்களுக்குத் தனது சுட்டுரையில் வரவேற்பளிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமரை வரவேற்று வாழ்த்து தெரிவிக்காதது அதைவிட வியப்பு.
 சாதாரணமாக, ஒரு நாட்டின் பிரதமர் அரசுமுறைப் பயணமாக இன்னொரு நாட்டுக்கு விஜயம் செய்யும்போது அந்நாட்டின் பிரதமர் அவரை விமான நிலையத்தில் வரவேற்பதுதான் வழக்கம். ஆனால் பிப்ரவரி 17-ஆம் தேதி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தினரும் குழுவினரும் புதுதில்லி விமான நிலையத்தில் வந்திறங்கியபோது இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தால் வரவேற்கப்பட்டபோதே சர்வதேச அளவில் புருவங்கள் உயர்ந்தன.
 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, அபுதாபி இளவரசர் முகமது பின் ஜாயீத் அல் நஹ்யான் ஆகியோரை ஆரத்தழுவி வரவேற்றதற்கும் கனடா அதிபரிடம் பாராமுகமாக நடந்து கொண்டதற்கும் என்ன பின்னணி என்று ஆராய்ச்சிகள் தொடங்கின.
 காமன்வெல்த் நாடுகளில் ஒன்றான கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகவும் நெருக்கமான தொடர்புகள், உறவுகள் இல்லாமல் போனாலும் பல்வேறு பிரச்னைகளிலும் வர்த்தக உறவுகளிலும் நெருக்கம் இருந்து வந்திருக்கிறது. அதேபோல கணிசமான எண்ணிக்கையில் பஞ்சாப், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களும் ஈழத் தமிழர்களும் கனடாவில் இருக்கிறார்கள் என்பது வலுவான நட்புறவு நிலவுவதற்கு அடித்தளமாக இருக்கிறது.
 அதே நேரத்தில் 1974 மே 18-ஆம் தேதி "புன்னகைக்கும் புத்தர்' என்று குறிப்பிடப்படும் பொக்ரான்-1 அணுகுண்டு சோதனையை இந்தியா நடத்தியது முதலே இரு நாடுகளுக்குமிடையே இருந்த சுமுக உறவில் சிக்கல்கள் தோன்றின. இந்தியாவில் காலிஸ்தான் தீவிரவாதம் தலைதூக்கியபோது பல காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடாவில் தஞ்சம் அடைந்தார்கள். அது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைக் கடுமையாக பாதித்தது. ஆனாலும்கூட காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்கள் என்கிற முறையில் இரண்டு நாடுகளும் பல்வேறு பிரச்னைகளில் இணையாமல் இல்லை.
 கனடா பிரதமருக்கு சில உள்நாட்டு நிர்பந்தங்கள் இருக்கின்றன. அவருக்கு மட்டுமல்ல, கனடாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைக் குறிவைத்து அரசியல் நடத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றன.
 கனடாவில் ஏறத்தாழ 15 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபியர்கள். அடுத்தபடியாகக் கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் குஜராத்தியர். இந்திய வம்சாவளியினர் கனடா நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் இடம்பெறும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். அதனால்தான் ட்ரூடோ தனது அரசுமுறைப் பயணத்தில் குஜராத்துக்கும் பஞ்சாபுக்கும் முன்னுரிமை அளித்திருக்கிறார்.
 அவருடைய கனடா லிபரல் கட்சி காலிஸ்தானை ஆதரிக்கும் சீக்கியத் தீவிரவாதிகளிடம் மென்மையாக நடந்துகொள்கிறது என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. கடந்த ஆண்டு டொரொன்டோவில் பிரதமர் ட்ரூடோ கலந்துகொண்ட பஞ்சாபியர் நிகழ்ச்சி ஒன்றில் காலிஸ்தான் கொடி காணப்பட்டது என்பது இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு எரிச்சலூட்டியதில் வியப்பில்லை. அதேபோல 1984-இல் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து இந்தியாவில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை இனப்படுகொலை என்று கனடாவின் ஒன்டாரியோ மாகாண சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசின் கடும் கண்டனத்துக்கு ஆளானது.
 1985-இல் கனடாவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அதில் 268 கனடா குடிமக்கள் உட்பட 329 பேர் கொல்லப்பட்டனர். அந்த நிகழ்வுக்குக் காரணமானவர்கள் கனடாவிலுள்ள சில சீக்கிய குருத்வாராக்களில் கதாநாயகர்களாகப் பாராட்டப்படுவது இப்போதும் தொடர்கிறது.
 இதுபோன்ற செயல்பாடுகளை பிரதமர் ட்ரூடோ தடுக்கவோ, கண்டிக்கவோ முற்படவில்லை என்பதுதான் இந்திய அரசின் வருத்தத்துக்கும் கோபத்துக்கும் காரணம். ஆனால், அதை அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வரும் விருந்தினரிடம் காட்டுவது இந்தியப் பண்பாட்டுக்கும், ராஜதந்திர நாகரிகத்துக்கும் ஏற்றதுதானா?
 இதைவிட வேடிக்கை என்னவென்றால், 1986-இல், பஞ்சாப் அமைச்சர் ஒருவரை கனடாவில் கொலை செய்ய முயன்றதாகத் தண்டிக்கப்பட்டு, பின் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்ட ஜஸ்பால் அத்வால் என்பவர் பிரதமர் ட்ரூடோவின் குழுவில் இந்தியா வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான். இதை இந்திய உள்துறை அமைச்சகமோ, வெளிவிவகாரத் துறை அமைச்சகமோ பார்க்காமல் விட்டது ஏன் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. பயங்கரவாதி என்று தெரிந்தும் அவருக்குக் கனடா தூதரகத்தில் நடந்த விருந்துக்கு அழைப்பிதழ் தரப்பட்டது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது.
 இந்தியா-கனடா இரண்டு தரப்பிலுமே ஒரு மிகப்பெரிய நிகழ்வாக வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டிய ஓர் அரசுமுறைப் பயணத்தை முறையாக திட்டமிடாமல் வீணடித்துவிட்டனர்.
 இந்தியாவுக்கு மகிழ்ச்சியாக சுற்றுலா வந்து திரும்பி இருக்கிறார்கள் கனடா பிரதமரும் அவரது குடும்பத்தினரும். கனடாவிலுள்ள இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஆதரவை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் தனக்கு உறுதி செய்து கொள்ளும் முயற்சியில் ட்ரூடோ ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறார். ஆனால், கனடா பிரதமரின் ஏழு நாள் இந்திய பயணத்தால் நமக்கு என்ன பயன்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com