யாகாவாராயினும்...

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பல்வேறு நாடுகளில், தொடர்ந்து 70 ஆண்டுகள் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் சுதந்திர நாடாக இருக்கிறோம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பல்வேறு நாடுகளில், தொடர்ந்து 70 ஆண்டுகள் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் சுதந்திர நாடாக இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையேயான உறவு மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டு, பின்பற்றப்பட்டு வருகிறது. அரசின் செயல்பாடுகளிலும் கொள்கை முடிவுகளிலும் எந்தவிதத்திலும் தலையிடாத ராணுவ அமைப்பு காணப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய போற்றுதலுக்குரிய சாதனை.
இதுவரை இந்திய ராணுவத்திலும், கடற்படையிலும், விமானப்படையிலும் தலைமைப் பொறுப்பில் இருந்த யாரும் அரசியலில் நேரிடையாகத் தலையிடவோ, கருத்துக் கூறியதோ இல்லை. தளபதிகள் தங்களது கருத்துகள் எதையும் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டதில்லை. இந்த வழக்கத்திற்கு விதிவிலக்காக இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்திருக்கும் கருத்துகள் கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகியிருப்பதில் வியப்பில்லை.
கடந்த புதன்கிழமை தில்லியில் நடந்த இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, விபின் ராவத் சில முக்கியமான அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. அஸ்ஸாம் மாநிலத்தின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வளர்ச்சியை, பாஜக வின் வளர்ச்சியுடன் அவர் ஒப்பிட்டுப் பேசியது அவசியமில்லாத வரம்பு மீறல் என்று அனைவருமே சுட்டிக்காட்டுகிறார்கள்.
'இப்படியே போனால் அஸ்ஸாம் மாநிலத்தின் நிலைமை என்னவாகும் என்பதை உணர்ந்து, நாம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும்' என்று அவர் தெரிவித்திருக்கும் கருத்தும், அஸ்ஸாமில் அதிகரித்துவரும் முஸ்லிம்களின் மக்கள் தொகை குறித்து வெளிப்படுத்தி இருக்கும் கவலையும் ஒரு ராணுவ அதிகாரியின் கருத்தாகவும் குரலாகவும் வெளிப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசியல்வாதிகள் பேச வேண்டியதை எல்லாம் ராணுவ அதிகாரிகள் பேசத் தொடங்குவது என்பது ஜனநாயக முரண் மட்டுமல்ல, ஆபத்துக்கான அறிகுறியும்கூட.
'வங்க தேசத்தின் அதிகரித்த மக்கள் தொகையும், அதற்கேற்ற நிலப்பரப்பு இல்லாததும் அங்கிருந்து பெருமளவில் மக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு மிக முக்கியமான காரணம். இன்னொரு காரணம், நமது மேற்குப் பகுதியில் இருக்கும் அண்டை நாட்டின் தூண்டுதலால் நடைபெறும் திட்டமிட்ட குடியேற்றம். இது ஒரு வகையில் மறைமுகப் போர் தந்திரம். இதை நமது வடக்குப் பகுதியில் உள்ளஅண்டை நாடும் ஊக்குவிக்கிறது' என்பதுதான் ஜெனரல் ராவத் வெளிப்படுத்தி இருக்கும் கருத்து. இது பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் குறித்த குற்றச்சாட்டு.
இதே கருத்தை பாரதப் பிரதமரோ, இந்தியாவின் பாதுகாப்பு அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர்களோ, அதிகாரிகளோ வெளிப்படுத்தி இருந்தால் அது நியாயமான குற்றச்சாட்டு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ராணுவத்தின் தலைமைத் தளபதியிடமிருந்து இப்படியொரு கருத்து வெளிப்பட்டிருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத் குறிப்பிட்டிருக்கும் மூன்று நாடுகளுடனான இந்தியாவின் உறவு, பல்வேறு பிரச்னைகளையும் தீர்க்க முடியாத சிக்கல்களையும் எதிர்கொள்கிறது என்றாலும்கூட , ராஜாங்க உறவு முறையில் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய பிரச்னைகள். விபின் ராவத் குறிப்பிட்டிருக்கும் மூன்று நாடுகளுடனும் இந்தியா தொடர்ந்து உறவை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்பதும், பேச்சுவார்த்தை முறிந்துவிடவில்லை என்பதும், வர்த்தக உறவு தொடர்கிறது என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. அப்படி இருக்கும்போது, இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் இடையேயான நட்பு சமநிலையை ராணுவத் தளபதியின் வெளிப்படையான கூற்று தடம்புரள வைக்கக்கூடும்.
இப்படிப் பொதுவெளியில் தனது கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைப்பது என்பது ராணுவத் தலைமை தளபதிக்குப் புதிதொன்றுமல்ல. சில நாள்களுக்கு முன்பு இந்து மகாசமுத்திரப் பகுதியில் சீனாவின் தலையீட்டையும், இந்தியாவின் நிலைப்பாட்டையும் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார். அதேபோல காஷ்மீர் அரசியல் குறித்தும் அந்த மாநிலத்தின் கல்விக் கொள்கை குறித்தும் அவர் வெளியிட்ட கருத்து கடும் எதிர்வினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் இந்திய வரைபடத்துடன் ஜம்மு காஷ்மீர மாநிலத்தின் வரைபடத்தையும் அருகருகே மாட்டியிருப்பது குறித்து விபின் ராவத் விமர்சித்தபோது, ஜம்மு காஷ்மீரக் கல்வி அமைச்சர் அதை வன்மையாகக் கண்டித்து, அறிக்கை வெளியிட நேர்ந்தது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதுபோல மாநிலத்தின் வரைபடங்களையும் பள்ளிகளில் மாட்டிவைப்பது வழக்கம் என்பதுகூட இந்திய ராணுவத்தின் தலைமை தளபதிக்குத் தெரியாமல் இருக்கிறதே என்று மாநில அமைச்சர் பகடி செய்திருந்தார். 
இந்தியாவின் பாதுகாப்பில் ராணுவத்துக்கு மிகப்பெரிய பொறுப்பும் முக்கியத்துவமும் உண்டு. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு, அதேபோல இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்னைகளிலும் பாதுகாப்புப் படைகள் தேவைப்பட்டால் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். 
ராணுவத்தின் தலைமை தளபதிக்கு இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும், வெளிவிவகாரக் கொள்கை குறித்தும் கருத்துகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், அவருடைய கருத்துகளை, அரசு நிர்வாகத்துடனும் அரசியல் தலைமையுடனும் மூடப்பட்ட அறைகளில் பகிர்ந்து கொள்ளவோ, விவாதிக்கவோ வேண்டுமே தவிர, பொதுவெளியில் வெளிப்படுத்துவது என்பது ஏற்புடையதல்ல.
அரசியல் கலப்பில்லாத ராணுவமும் ராணுவத் தலைமையும் இந்திய ஜனநாயகத்துக்கு மிகமிக அவசியம். இந்தச் சமநிலை தவறிவிடக்கூடாது. ராணுவத் தளபதிகள் அரசியல் பேசத் தொடங்கினால், அதன் விளைவு அரசியலிலும் ஆட்சியிலும் தலையிடும் சூழலை பாகிஸ்தானைப் போல இந்தியாவிலும் ஏற்படுத்தி விடக்கூடும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com