மாசே துங் ஆகிறாரா ஜீ ஜின்பிங்?

சீனா மீண்டும் மாசே துங் பாணி ஆட்சி முறைக்குத் திரும்புவது போன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை. அதிபராகவோ, துணை அதிபராகவோ இருப்பவர்கள் இரண்டு முறைக்கு மேல் பதவியில்

சீனா மீண்டும் மாசே துங் பாணி ஆட்சி முறைக்குத் திரும்புவது போன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை. அதிபராகவோ, துணை அதிபராகவோ இருப்பவர்கள் இரண்டு முறைக்கு மேல் பதவியில் நீடிக்கக் கூடாது என்று டெங் ஜியாவோபிங் ஏற்படுத்தியிருந்த கடந்த 40 ஆண்டுக் கட்டமைப்பு, இப்போது மாற்றப்பட இருக்கிறது. இரண்டு முறைக்கு மேல் பதவியில் நீடிக்கக் கூடாது என்கிற வரம்பை அகற்றுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பரிந்துரைத்திருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் நிரம்பிய சீன நாடாளுமன்றம் இந்தப் பரிந்துரையை வழிமொழியும் என்பதில் ஐயப்பாட்டுக்கே இடமில்லை.
1949-இல் மாசே துங் சீனாவில் ஆட்சியைக் கைப்பற்றி சீன மக்கள் குடியரசை ஏற்படுத்தினார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒற்றைக் கட்சி ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. 1943 முதல் மாசே துங் மறைந்த 1976 செப்டம்பர் 9-ஆம் தேதி வரை அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், சீனாவின் அதிபராகவும் சர்வ வல்லமை படைத்த தலைவராகத் தொடர்ந்தார். கடைசி காலத்தில் மாசே துங் மறதி நோயால் பாதிக்கப்பட்டபோது, மாசே துங்கின் கடைசி மனைவியான ஜியாங் கிங் தலைமையில் அமைந்த நான்கு பேர் கொண்ட குழுதான் ஆட்சியை நடத்தி வந்தது. மாசே துங்கின் மரணத்தைத் தொடர்ந்து அந்த நான்கு பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டு டெங் ஜியாவோபிங் கட்சியைக் கைப்பற்றினார். 
டெங் ஜியாவோபிங் அதிபராகவோ, பிரதமராகவோ இல்லாவிட்டாலும் இன்றைய சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்திற்கும் சீனாவை உலகப் பொருளாதார வல்லரசாக மாற்றுவதற்கும் காரணமாக இருந்தார். 1978 முதல் 1989 வரை கட்சி அவரது இரும்புப் பிடியில்தான் இருந்தது. அதிபர்களும், பிரதமர்களும் அவரது விரல் அசைவுக்குத் தலையாட்டும் பொம்மைகளாகத்தான் இருந்தனர். 1992-இல் அவர் முழுநேர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் என்றாலும்கூட, முதன்மைத் தலைவராகத் தொடர்ந்தார். கடைசி வரை கட்சியிலும் ஆட்சியிலும் பதவியில் இல்லாமலேயே சர்வ வல்லமை படைத்தவராக தோழர் ஜியாவோபிங்கால் தொடர முடிந்தது என்பதால், அவர் இப்போதும்கூட சீனாவின் பெரும் தலைவர் (பாரமவுண்ட் லீடர்) என்று அழைக்கப்படுகிறார்.
மாசே துங்குக்கும் டெங் ஜியாவோபிங்குக்கும் பிறகு சீன அரசில் சர்வ வல்லமை பொருந்திய தனிப்பெரும் தலைவராக ஜீ ஜின்பிங் உருவெடுத்திருக்கிறார் என்பது கடந்த அக்டோபர் நடந்த 19-ஆவது கட்சி மாநாட்டிலேயே வெளிப்பட்டது. ஜியாவோபிங்கால், இரண்டு முறைக்கு மேல் பதவியில் தொடரக்கூடாது என்கிற வரம்பு ஏற்படுத்தப்பட்டதால், எந்த ஒரு தலைவரும் ஆட்சியில் சர்வாதிகாரம் படைத்த தலைவராக உருவாக முடியாத சூழல் ஏற்பட்டது. 19-ஆவது கட்சி மாநாட்டில் 'புதிய காலகட்டத்துக்கான சீன பாணி சோஷலிசம் குறித்த ஜீ ஜின்பிங்கின் சிந்தனைகள்' கட்சியின் கொள்கை சாசனத்தில் இணைக்கப்பட்டபோது, ஜீ ஜின்பிங்குக்கு முற்பட்ட தலைவர்களிலிருந்து அவர் வேறுபட்டார்.
2016-இல் அவருக்கு 'அடிப்படை தலைவர் (கோர் லீடர்)' என்கிற அந்தஸ்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி அளித்தது. எப்படி சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு டெங் ஜியாவோபிங் காரணமாக இருந்தாரோ, அதேபோல சர்வதேச அரசியலில் சீனாவை உயர்த்திப் பிடித்த பெருமைக்குரியவர் என்று ஜீ ஜின்பிங் வர்ணிக்கப்பட்டார். அப்போதே அவர் மாசே துங், டெங் ஜியாவோபிங் ஆகியோரின் அடிச்சுவட்டில் பயணிக்கத் தொடங்கிவிட்டார் என்பதை உலகம் உணரத் தொடங்கிவிட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த அக்டோபரில் ஜீ ஜின்பிங்கை இரண்டாவது முறையாகக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. 2023 வரை அவர்தான் தலைவராக இருக்கப்போகிறார். அதுமட்டுமல்ல, வழக்கத்துக்கு மாறாக தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான அடுத்தகட்ட தலைவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்கிற நிலையில், அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு இரண்டாவது முறைக்கு மேலும் பதவியில் தொடரும் எண்ணம் இருக்கிறது என்பது வெளிப்பட்டது.
அடுத்த மாதம் சீன அதிபராக இரண்டாவது முறையாக பதவியில் தொடர இருக்கும் ஜீ ஜின்பிங்குக்கு தான் விரும்பும் மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் அரசியல் சாசன திருத்தங்களையும் கொண்டுவர ஐந்து ஆண்டுகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் அடுத்த வாரம் தொடங்க இருக்கின்ற கட்சி மாநாட்டுக்கு முன் இப்படியொரு விதிமுறைத் தளர்வை அதிபர் ஜீ ஜின்பிங் ஏற்படுத்த முற்பட்டிருக்கிறார். அவர் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த எந்தத் தடையும் ஏற்பட்டுவிடாமல் முன்னெச்சரிக்கையாக இருக்கிறார் என்பதுதான் காரணம்.
இப்போதைய நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீ ஜின்பிங்குக்கு எதிராக எந்தவொரு போட்டி அதிகார மையமும் இல்லை. அவருக்கு எதிராக இருக்கக் கூடியவர்கள் என்று அவரால் சந்தேகப்படப்பட்டவர்கள் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். டெங் ஜியாவோபிங் ஏற்படுத்திய மாற்றங்களுக்குப் பிறகு இரண்டாவது முறை பதவிக்கு வரும் தலைவர்கள் தங்களுக்கு அடுத்த வாரிசை அடையாளம் காட்டும் முறைக்கு ஜீ ஜின்பிங் முற்றுப்புள்ளி வைத்திருப்பது, சீனா மீண்டும் தனி நபர் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதன் அடையாளம் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுவதில் வியப்பில்லை.
ஜீ ஜின்பிங் சர்வ வல்லமை படைத்த வாழ்நாள் சீன அதிபராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முற்பட்டிருப்பது இந்தியாவுக்கும் தெற்காசியாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் கவலை தரக்கூடியது. சீனாவுக்கு அடுத்த ஆட்சி மாற்றம் சுமுகமாக இருக்கப்போவதில்லை என்பதற்கான அடையாளம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com