2017 - ஒரு மீள் பார்வை!

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடந்து போன 2017 மிகவும் பரபரப்பான ஆண்டாகவே இருந்திருக்கிறது.

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடந்து போன 2017 மிகவும் பரபரப்பான ஆண்டாகவே இருந்திருக்கிறது.
 தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நிலையின்மையுடன் தொடங்கிய 2017, நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்கிற பரபரப்பான அறிவிப்புடன் முடிந்திருக்கிறது.
 தமிழகம் கடந்த ஆண்டு இரண்டு முதலமைச்சர்களைப் பார்த்திருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து 2016 டிசம்பர் 6-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், 2017 பிப்ரவரி 17-ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.
 மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துடன் தொடங்கிய 2017 "ஒக்கி' புயலால் ஏற்பட்ட பேரழிவின் பாதிப்புடன் முடிந்திருக்கிறது.
 சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, சசிகலா உள்ளிட்ட மூவரின் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல, ஏர்செல், மேக்சிஸ் ஒப்பந்த விவகார முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 மருத்துவக் கல்விக்கான "நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து நடந்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் எதிரொலியாகத் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் மரணத்துடன் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.
 மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவி ஏற்றது, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டது ஆகியவை 2017-இல் முக்கிய நிகழ்வுகள்.
 பணப் பட்டுவாடா காரணமாக ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் முடக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார். இதன் உச்சகட்ட முடிவாக மீண்டும் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியான திமுக வைப்புத் தொகையை இழந்தது என்பவை 2017-இன் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.
 பிரிந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்ததைத் தொடர்ந்து, முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்புடன் 2017 முடிவுக்கு வந்திருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் அரசியல் களம் காணப்போகிறாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகாமல் "மையம் விசில்' என்னும் செல்லிடப்பேசி செயலியுடன் நிற்கிறது.
 தேசிய அரசியலில் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றம் ஜே.எஸ்.கேஹர், தீபக் மிஸ்ரா என்று இரண்டு தலைமை நீதிபதிகளை 2017-இல் சந்தித்தது.
 முதன்முறையாக 2017-இல் ரயில்வே துறைக்கென்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படாமல், பொதுநிதி நிலை அறிக்கையுடன் இணைக்கப்பட்டது. புதியதாக ரூ.50, ரூ200 ஆகிய செலாவணிகளும், 2016 டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.500, ரூ.2000ஐ தொடர்ந்து புழக்கத்தில் விடப்பட்டன. 2016-இல் இந்தியப் பொருளாதாரத்திற்குத் தரப்பட்ட அதிர்ச்சி வைத்தியமான ரூ.500, ரூ.1000 செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து 2017, ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி மிகப்பெரிய பொருளாதாரத் திருப்பமாக அறிவிக்கப்பட்டது.
 முதன்முறையாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக ஒரு பெண்மணி }நிர்மலா சீதாராமன்- நியமிக்கப்பட்டது வரலாற்றுச் சாதனை. இந்திய-சீனப் படைகளுக்கு இடையே டோக்கா லாமில் 72 நாள் நீடித்த பதற்றம், போர் மூளும் சூழலை ஏற்படுத்தியது. துணிவுடன் சீன ராணுவத்தின் ஊடுருவலை எதிர்கொண்டு தடுத்தது நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி.
 காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றது, மாட்டுத் தீவன வழக்கில் பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாதும், 15 பேரும் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை அடைந்தது ஆகியவையும், பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்ததும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.
 மணிப்பூர், கோவா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் தொடங்கியது 2017. கடந்த ஆண்டு நடந்த 7 சட்டப் பேரவைத் தேர்தல்களில் 6 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாபில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. 2017 தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை அடைந்த பாஜக, கடந்த ஆண்டு நிறைவடையும் வேளையில் இமாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதையும், குஜராத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதையும் குறிப்பிட்டாக வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடுமையான எதிர்ப்பை பாஜக எதிர்கொள்ள வேண்டி வந்தது என்பதையும் பதிவு செய்தாக வேண்டும்.
 இந்திய அளவிலும் சரி, தமிழகத்தைப் பொருத்த அளவிலும் சரி, பரபரப்பாகத் தொடங்கி, சுறுசுறுப்பாக நகர்ந்து, விறுவிறுப்பாக முடிந்திருக்கிறது 2017!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com