நீதித்துறையின் சவால்!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் முடிந்து, தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றது 2017-இல் நீதித்துறையின் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் முடிந்து, தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றது 2017-இல் நீதித்துறையின் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. அதேபோல, நீதிமன்ற அவமதிப்புக்காக, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை உச்ச நீதிமன்றம் சிறையில் தள்ளிய விசித்திரமும் 2017-இல்தான் அரங்கேறியது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒரு வழக்கு விசாரணையில் பங்கு பெறக் கூடாது என்று கோரப்பட்டதும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் 2017-இல் நீதித்துறை எதிர்கொண்ட அவலங்களில் குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டஸ்வாமி, 'தன்மறைப்பு நிலை (பிரைவசி) என்பது குடிமகனின் அடிப்படை உரிமை' என்று கூறி இந்திய அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்கு, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 2017-இல் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தன்மறைப்பு நிலையை அடிப்படை உரிமை என்று ஏகமனதாக உறுதிப்படுத்தியது. இது இந்திய நீதிமன்ற வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை.
முத்தலாக் முறையை சட்ட விரோதமாக்கியது, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 375-இன் கீழ் தரப்பட்டிருந்த 'விதிவிலக்கு-2' தவறு என்று தீர்ப்பளித்தது, தேசிய கீதம் தொடர்பான முடிவு, ஹாதியா வழக்கில் கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகள் 2017-இல் குறிப்பிடத்தக்கவை. 
இவை எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை தொடர்பானவை. உச்ச நீதிமன்றம் எதிர்கொண்ட - எதிர்கொள்ளும் மிக முக்கியமான நடைமுறை நிர்வாகப் பிரச்னை நீதிபதிகள் நியமனம் தொடர்பானது. நீதிமன்றத்துக்கும் மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கும் இடையேயான நீதிபதிகள் நியமனம் குறித்த பிரச்னையில்எந்தவித முடிவும் கடந்த 2017-ஆம் ஆண்டிலும் எட்டப்படாமல் தொடர்வது வேதனைக்குரிய ஒன்று.
உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான இடர்ப்பாட்டை எதிர்கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 31. ஆனால், இப்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 25 மட்டுமே. இன்னும் 7 பேர் இந்த ஆண்டு பணி ஓய்வு பெற இருக்கிறார்கள் என்கிற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் 13 நீதிபதி இடங்கள் காலியாகக்கூடும். இந்த இடங்கள் நிரப்பப்படாமல் போனால், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடே ஸ்தம்பித்து விடக்கூடிய பேராபத்து 2018-இல் ஏற்பட்டுவிடலாம்.
கொலீஜியம் சார்பில் நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து, அனுமதி பெறுவது என்பதில் பிரச்னை இருக்கிறது. உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறை விதிகளை ஏற்படுத்துவதில் நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தொடர்கிறது. அதற்கு ஒரு முடிவு எட்டப்படாமல் நீதிபதிகள் நியமனம் சாத்தியமல்ல. அதனால், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் தலைவர் என்கின்ற முறையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார். 
கடந்த அக்டோபர் 2015 முதல் நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீதிபதிகள் நியமனம் தொடர்பான பிரச்னையில் மோதல் காணப்படுகிறது. மத்திய அரசு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் நிறைவேற்றிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நிராகரித்தது. அதற்குக் காரணம், நீதிபதிகள் நியமனத்தில் அரசின் கருத்துக்கும் அந்தச் சட்டம் இடமளித்தது என்பதுதான். அரசுக்கு நீதிபதிகள் நியமனத்தில் கருத்துச் சொல்லும் உரிமை வழங்கப்பட்டால், அது நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்று நீதித்துறை கருதுகிறது.
கொலீஜிய முறையின் கீழ் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக்கொண்டது. ஆனால், அரசின் தலையீட்டை அது விரும்பவில்லை. கொலீஜியத்துடன் கலந்து ஆலோசித்து, நீதிபதிகளின் நியமனத்துக்கான புதிய நடைமுறை விதிகளைத் தயாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் அரசிடம் கேட்டுக் கொண்டது. அரசு தயாரித்தளித்த நடைமுறை விதிகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் மீது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், கொலீஜியம் முறை மூலம் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு இப்போது மீண்டும் கோரியிருக்கிறது. கொலீஜியத்தின் பரிந்துரைகளை தேசப் பாதுகாப்பின் அடிப்படையில் மறுக்கும் உரிமையை நடைமுறை விதிகளில் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதை ஏற்றுக்கொள்ள நீதித்துறை தயாராக இல்லை என்பதுதான் பிரச்னையின் அடிப்படை.
அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 107 நீதிபதிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 18 நீதிபதிகள் என்கிற விகிதத்தில்தான் நீதித்துறை இயங்குகிறது. உயர் நீதிமன்றங்களில் 400 நீதிபதிகள் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. 9 உயர் நீதிமன்றங்கள் முழுநேரத் தலைமை நீதிபதிகள் இல்லாமல் இயங்குகின்றன. மாவட்ட நீதிமன்றங்களில் 5000 நீதிபதிகள் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது.
இந்த நிலைமை தொடர்ந்தால், இப்போது தேங்கிக்கிடக்கும் வழக்குகளை முடிக்க 464 வருடங்களாகும் என்று சட்ட ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வருகிற அக்டோபர் மாதம் பணி ஓய்வு பெறுவார். அதற்குள் நீதிபதிகள் நியமனத்தில் முடிவு எட்டப்பட்டு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கான காலி இடங்கள் நிரப்பப்படுமா என்பதுதான் 2018-இல் நீதித்துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com