சோதனை அல்ல வாய்ப்பு!

அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது

அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் படிப்பதற்காகவும் வேலை தேடியும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாக மாறிவிட்டிருக்கிறது. அமெரிக்கா வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை கடுமையாக்கி இருக்கிறது. 
எச்-1பி விசா என்று பரவலாக அறியப்படும் நுழைவு விதிமுறைகளில் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சில மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறது. இது இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று படித்துவிட்டு, அங்கேயே வேலை பார்க்கும் பல தொழில்நுட்ப பொறியாளர்கள், மருத்துவர்கள், கணக்காளர்கள், பொருளாதார வல்லுநர்கள் 
ஆகியோரின் வருங்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடும்.
அமெரிக்காவில் நிரந்தரத் தங்கும் உரிமை கோரி விண்ணப்பித்து இருக்கும் சுமார் ஐந்து லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் இது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விடுப்பில் தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்த பலரும் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டிருக்கிறார்கள். தாயகம் திரும்பி விட்டால் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பி வர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுமோ என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம்.
அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுவது என்பது லாட்டரி சீட்டு அடிப்பது போன்றது. விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். இந்த நுழைவு அனுமதி பெற்றவர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கியிருக்கலாம், வேலை பார்க்கலாம். அப்படி எச்-1பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள், "கிரீன் கார்ட்' எனப்படும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பித்தவர்கள் எச்-1பி விசாவின் காலக்கெடு முடிந்தாலும்கூட அமெரிக்காவில் தங்கியிருக்கவும், வேலை பார்க்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால், எச்-1பி விசா பெற்றுவிட்டாலே அது அமெரிக்கக் குடியுரிமை பெற்றதற்கு நிகரானது என்று கருதப்படுகிறது.
அமெரிக்கக் குடியுரிமை (கிரீன் கார்ட்) வழங்கும் முறை கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் கவனத்துடனும் தாமதத்துடனும்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, குடியுரிமைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் எச்-1பி விசா பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிட்டிருக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, குடியுரிமைக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு எச்-1பி விசாவை நீட்டித்துக் கொடுப்பதை நிறுத்திவிடலாமா என்று யோசிக்கிறது.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, எச்-1பி விசாவின் காலக்கெடு நீட்டிப்பை ரத்து செய்ய முற்பட்டால், அதனால் அமெரிக்காவில் பணிபுரியும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். எச்-1பி விசாவின் காலக்கெடு முடிந்துவிட்டால் அவர்கள் தத்தம் நாடு திரும்ப நேரும். அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்போதுதான் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பி வரவோ, அங்கே வேலை பார்க்கவோ, தங்கியிருக்கவோ முடியும். தேங்கிக் கிடக்கும் குடியுரிமைக்கான விண்ணப்பங்களைப் பார்க்கும்போது அவர்கள் திரும்ப வருவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க நேரும். குடியுரிமை கிடைக்காமலும் போகலாம்.
அமெரிக்க அரசின் இந்த முடிவு, பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது மட்டுமல்ல, பல லட்சம் எச்-1பி விசா பெற்றவர்களுக்கு எதிரானதாகவும் அமைகிறது. இது, உறுப்பு நாடுகளில் உள்ள மக்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு தங்கு தடையின்றி சென்று வரலாம் என்கிற உலக வர்த்தக அமைப்பின் கோட்பாட்டிற்கு எதிரானது. 
அமெரிக்காவிலுள்ள பல தகவல் தொழில்நுட்ப, நிதி, மருந்துத் தயாரிப்பு, ஆயுத உற்பத்தி என்று பல்வேறு நிறுவனங்களுக்கு எச்-1பி விசா பெற்றிருக்கும் திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள். இப்படி எச்-1பி விசாவில் அமெரிக்காவுக்கு போய் தங்களுடைய திறமையால் முன்னேறி பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தவர்கள் தான் இந்திரா நூயி, சத்தியா நாதெள்ளா, சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்கள்.
2008-இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மெல்ல மெல்ல இப்போதுதான் மீண்டு வருகிறது அமெரிக்கப் பொருளாதாரம். அப்படி இருக்கும்போது, உள்நாட்டு பாதுகாப்புத் துறை எச்-1பி விசா மூலம் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க முற்பட்டால் அதன் விளைவாக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப, மருத்துவ துறைகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இது அதிபர் டிரம்புக்கு தெரியாவிட்டாலும் அமெரிக்க நிர்வாகத்துக்கு தெரியும் என்பதால், உடனடியாக எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டுவிடாது என்று நம்ப இடம் இருக்கிறது.
புலம்பெயர்ந்தவர்களும், குடியேறிகளும் தாங்கள் குடியேற நினைக்கும் நாடுகளின் குடியுரிமை குறித்த முடிவுகளை கேள்வி கேட்க முடியாது. அதனால், பல லட்சம் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதை நாம் சோதனையாகவும் வேதனையாகவும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் திறமையையும் உழைப்பையும் தாயகத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியுமேயானால், அவர்கள் இந்தியாவிலேயே தங்கி தாயகத்துக்குத் தங்களது பங்களிப்பை வழங்குவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க முடியுமேயானால், இந்தியா வல்லரசாக மாறுவதற்கான பயணம் விரைவுபடுத்தப்படும். 
எதிர்மறையாக சிந்திக்காமல் இந்த வாய்ப்பை இந்தியாவின் வளர்ச்சிக்கு நமது அரசியல் தலைமை பயன்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com