ஜேட்லி எதிர்கொள்ளும் சவால்!

நரேந்திர மோடி அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆண்டுதான் இந்தியா மிகக்குறைந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. அரசின் எதிர்பார்ப்புக்கு மாறாக வளர்ச்சி வெறும்

நரேந்திர மோடி அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆண்டுதான் இந்தியா மிகக்குறைந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. அரசின் எதிர்பார்ப்புக்கு மாறாக வளர்ச்சி வெறும் 6.5% ஆகக் குறைந்திருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. கடந்த ஜூலை மாதம் அவசரக் கோலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி உருவாக்கிய குழப்பங்கள்தான் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையாததற்குக் காரணம். 
மத்திய புள்ளிவிவரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கை கவலையளிக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 7.9% ஆக இருந்த தொழில் உற்பத்தி இந்த நிதி ஆண்டில் 4.6% ஆகக் குறைந்திருக்கிறது. 4.9% ஆக இருந்த வேளாண் உற்பத்தி 2.9% ஆகக் குறைந்திருக்கிறது. இவையெல்லாம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி எதிர்பார்த்த 7.1% வளர்ச்சி இலக்கை கானல் நீராக்கி இருக்கின்றன.
சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான சிறு - குறு உற்பத்தியாளர்கள் நிலைதடுமாறிப் போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான சிறு தொழில் முனைவோர் தங்கள் நிறுவனங்களையே மூடிவிட்டுக் காணாமல் போய்விட்டனர். கடந்த நவம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியால் அரசுக்குக் கிடைத்த நிதி வருவாய் ரூ.80, 808 கோடி. கடந்த ஜூலை 1-ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு இதுதான் மிகக்குறைவான வரி வருவாய். குறைந்து வரும் வரி வருவாயும், அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையும் அரசின் கைகளைக் கட்டிப் போடுகின்றன. வளர்ச்சியைத் தூண்டுவதற்காக அரசு எந்தவித முதலீட்டையும் செய்ய முடியாமல் முடக்கியிருக்கிறது. 
ஆண்டொன்றுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பு என்று இலக்கு நிர்ணயித்து பதவிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு. ஆனால், ஆண்டொன்றுக்கு சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகளைத்தான் உருவாக்க முடிந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவுக்குக் குறைவான வேலை வாய்ப்பு வளர்ச்சி ஏற்பட்டதில்லை.
ஆண்டொன்றுக்கு சுமார் 8 லட்சம் இளைஞர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் வேலை வாய்ப்புக்குத் தயாராகிறார்கள். அவர்களில் பாதி பேர் மட்டும்தான் முறை சார்ந்த நிறுவனங்களில் தொழிலாளர்களாக வேலை வாய்ப்புப் பெறுகிறார்கள். ஏனையோர் மரபுசாரா தொழில்களில் வேலைக்குச் சேர்கிறார்கள்.
இந்தியாவில் சுமார் 5.85 கோடி பெரிய, சிறிய வியாபார நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் 1.4% மட்டுமே 10 பேருக்கும் அதிகமான பேரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களாக இருக்கின்றன. அவைதான் சுமார் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன.
இந்தியா போன்ற பெரிய தேசத்தில் 4 லட்சம் தொழிலாளிகளுக்கு மாத சம்பளம் வழங்கும் வேலைகளை உருவாக்குவது என்பதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் முறைசார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைவு. உயர்மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்டதன் விளைவாக சிறு-குறு தொழில் நிறுவனங்களிலும், மரபுசாரா துறைகளிலும் எத்தனை பேர் வேலையில் இழந்தார்கள் என்பதற்கு சரியான புள்ளிவிவரம் இல்லை.
2017-இல் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின்படி 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 30% பேர் வேலை பார்க்கவோ, கல்வி கற்கவோ அல்லது தொழிற்பயிற்சியில் ஈடுபடவோ செய்யாமல் இருப்பவர்கள். இவர்களுடைய எண்ணிக்கை சில கோடிகள் என்பதை நாம் உணர வேண்டும். 
வேளாண்மை என்பது சிறு விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்ற வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. அவர்களுக்கு முழுநேர வேலை வாய்ப்புக்கு வழியில்லை. அதுமட்டுமல்லாமல், சிறு விவசாயிகளின் உற்பத்தித் திறன் குறைவு என்பதால், அவர்களுக்கு வேளாண்மை முழுமையான வாழ்வாதாரமாகவும் இல்லாத நிலைமை காணப்படுகிறது. அப்படி இருந்தாலும்கூட இந்தியாவில் 70% மக்கள்தொகையினர் வேளாண்மையை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலும் ஊரகப் புறங்களில் கடுமையான அதிருப்தி நிலவுவதை உணர்த்துகின்றன. மரபுசாரா துறைகளைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகச் செயல்படுத்தியாக வேண்டும். உயர்மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்டதும், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப் பட்டதும் பெருமளவில் ஊரகப் புறங்களைத்தான் பாதித்திருக்கின்றன. மரபுசாரா துறைகளும் ஊரகப் பொருளாதாரமும்தான் இந்தியாவின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45% க்குக் காரணம். இந்தியாவின் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 90% இவை இரண்டிலும்தான் காணப்படுகின்றன.
ஊரகப்புற பொருளாதாரம் முடுக்கிவிடப்பட்டு, வளர்ச்சி அதிகரிக்குமேயானால், அதன் தொடர் விளைவாக மரபுசாரா துறை வேகம் பெறும். அதன் முலம் சுணக்கம் ஏற்பட்டிருக்கின்ற இந்தியப் பொருளாதாரம் உயிர்ப்புப் பெறும். இது நிதியமைச்சருக்கும், நிதித்துறை அதிகாரிகளுக்கும் தெரியாததல்ல.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கை, வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றை அகற்றி, சேதங்களைக் கட்டுப்படுத்த உதவக்கூடும். அதே நேரத்தில் அவர் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. விலைவாசி உயர்வு ஏற்கெனவே 4% கட்டுப்பாட்டு அளவைத் தாண்டியிருக்கிறது. அரசின் கடன் 3.2% க்கு அதிகரிக்கக்கூடாது. ஆனால், அதிகரித்திருக்கிறது. இதனால், விரைந்த வளர்ச்சி, விலைவாசி அதிகரிக்கக் காரணமாகி விடக்கூடும். 
உயர் நிலைகளிலும், வேளாண் துறையிலும் வேலைவாய்ப்புகள் ஏற்படுவதற்குப் பதிலாகக் குறைந்த திறமை தேவைப்படும், குறைந்த வருவாய் தரக்கூடிய துறைகளில் அதிகரித்து வருகின்றன. இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிட்டுமே தவிர, பொருளாதாரத்துக்கு அதனால் எந்தவித நன்மையும் ஏற்பட்டுவிடாது. 
உதாரணமாக, சேவை துறைகளில் மிக அதிகமாக வளர்ச்சி அடைவது தனியார் பாதுகாப்புத்துறை. தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் என்று எல்லாவற்றுக்கும் தனியார் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதற்கான காவலாளிகளை வழங்கும் தனியார் பாதுகாப்புத்துறை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. 
இந்தக் காவலாளிகளுக்குப் பெரிய தகுதி எதுவும் தேவையில்லை என்பதையும், அவர்களுக்குக் குறைந்த ஊதியமே தரப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்தத் துறையின் வளர்ச்சியால் பொருளாதாரத்துக்கு எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை.
திறன் சார்ந்த வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், ஊரகப் பொருளாதாரத்தை முடுக்கிவிடவும் நிதிநிலை அறிக்கை வழிகோலாவிட்டால், 6.5% என்கிற வளர்ச்சி, மேலும் தளர்ச்சி அடையுமே தவிர, உயராது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com