அணுகுமுறை ஏற்புடையதல்ல!

நீதித்துறை வரலாறு காணாத சோதனையை எதிர்கொள்கிறது. நீதிபதிகளே நீதித்துறையின் மாண்பையும் கெளரவத்தையும் குலைத்துவிடுகின்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே

நீதித்துறை வரலாறு காணாத சோதனையை எதிர்கொள்கிறது. நீதிபதிகளே நீதித்துறையின் மாண்பையும் கெளரவத்தையும் குலைத்துவிடுகின்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே தொடர்ந்து வரும் இந்த மோதல் இப்போது பகிரங்கமாகப் பொதுவெளியில் வெடித்திருக்கிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். 
நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகிய மூவரும், உச்ச நீதிமன்றத்தில் பணி மூப்பு அடிப்படையில் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக இருக்கும் நீதிபதி ஜெ.செலமேஸ்வரின் துக்ளக் சாலை இல்லத்தில் பத்திரிகையாளர்களிடம் தங்கள் அதிருப்தியையும் மனக்குமுறலையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நான்கு நீதிபதிகளும் கையொப்பமிட்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தைப் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படுத்தி, நீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னையை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச்செல்ல முற்பட்டிருக்கிறார்கள்.
நீதித்துறை பாதுகாக்கப்படாவிட்டால் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படாது என்றும், இதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா புரிந்துகொள்ள வைக்கத் தங்களால் இயலவில்லை என்றும் கூறி
யிருக்கிறார்கள் அந்த நீதிபதிகள். அதனால் பொதுவெளியில் தங்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், இதன் மூலம் மட்டுமே நீதித்துறையைக் காப்பாற்ற முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, நீதிபதிகளுக்கு இடையேயான வெளிப்படையான மோதலை உச்ச நீதிமன்றம் எதிர்கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையே ஏற்பட்ட அந்த வெளிப்படையான மோதல் கூச்சலிலும் வாக்குவாதத்திலும் வெளிப்பட்டபோது, தேசமே அதிர்ந்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு, முந்தைய நாள் அவருக்கு இரண்டாமிடத்தில் இருக்கும் நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வின் முடிவை நிராகரித்தது. நீதிபதி செலமேஸ்வரின் ஆத்திரத்துக்கு அதுதான் காரணம்.
வழக்குகளை இன்னின்ன நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளுக்கு ஒதுக்குவது, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தனி உரிமை. இதற்கு 'ரோஸ்ட்டர் தயாரிப்பு' என்று பெயர். உச்ச நீதிமன்றத்தில் அமர்வுகளைத் தீர்மானிப்பதும், எந்த அமர்வுக்கு எந்த வழக்குகளை ஒதுக்குவது என்பதும், தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முடிவில் தவறு காணமுடியாது. இதுதான் கடந்த பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் பின்பற்றி வரப்படும் மரபு. 
நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நேர்மையையும் நாணயத்தையும் மறைமுகமாகக் கேள்வி கேட்க முற்பட்டிருக்கிறார்கள். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது நாடாளுமன்றம் 'இம்பீச்மென்ட்' நடவடிக்கையை முடுக்கிவிட்டு அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமா என்கிற கேள்விக்கு, 'தேசம் தீர்மானிக்கட்டும்' என்று நீதிபதி செலமேஸ்வர் கூறுவதிலிருந்து நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதியின் நேர்மையை சந்தேகிக்கிறார்கள் என்பது தெரிகிறது. 
'மிக முக்கியமான பல வழக்குகளில் எந்தவித காரணமும் இல்லாமல் சில குறிப்பிட்ட நீதிபதிகள் தொடர்ந்து அமர்வுகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்றும் அது தேசத்துக்கு நன்மை பயக்காது' என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தாங்கள் இந்த முடிவை எடுக்காமல் போனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் சமூகம் தங்களை கேள்வி கேட்கும் என்றும், ஆன்மாவையே விற்றுவிட்டவர்களாகக் கருதும் என்றும் அவர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. நீதிபதிகளுக்கு இடையேயான இந்தப் பிரச்னையின் அடிப்படை 'ரோஸ்ட்டர் தயாரிப்பில்' ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுதான் என்பதை அவர்கள் தலைமை நீதிபதிக்கு அளித்திருக்கும் கடிதம் வெளிப்படுத்துகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த நீதிபதிகளுக்கு விசாரணைக்காக ஒதுக்கும் வழக்குகள்தான் அவர்களது அதிருப்திக்குக் காரணம் என்பதையும் அந்தக் கடிதம் தெளிவுபடுத்துகிறது.
இதுபோல நீதிபதிகள் பொது வெளியில் அதிருப்தியை வெளிப்படுத்துவது வியப்பை அளிக்கிறது. உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது புதிதல்ல. அதேபோல தலைமை நீதிபதியின் மீது அதிருப்தி ஏற்படுவதும் புதிதல்ல. ஆனால், நீதித்துறையின் மாண்பு கருதி, எந்தவொரு நீதிபதியும் அதைப் பொதுவெளியில் தெரிவிப்பது கிடையாது.
உச்ச நீதிமன்றத்தின் 14ஆவது தலைமை நீதிபதியாக அஜீத் நாத் ரே, 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது பணி மூப்பு கருதப்படாமல் மூன்று மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் பதவி விலகித் தங்களது எதிர்ப்பைக் காட்டினார்களே தவிர, பத்திரிகையாளர்களைச் சந்தித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யவில்லை. அதேபோல 1977-இல் நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னா பதவி மூப்பு உரிமை மறுக்கப்பட்டபோது பதவி விலகினாரே தவிர, நீதிபதியாக இருந்து கொண்டு விமர்சனத்தில் இறங்க முற்படவில்லை.
நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான நான்கு நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதியின் செயல்பாடு குறித்தும் அணுகுமுறை குறித்தும் கருத்து வேறுபாடும், விமர்சனமும் இருக்கலாம். அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உடன்படவில்லை என்றால், அவர்கள் குடியரசுத் தலைவரிடம் முறையிட்டிருக்க வேண்டும். அப்படியும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், பதவி விலகி தங்களது எதிர்ப்பையும் மனக்குமுறலையும் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். நீதிபதிகளின் அணுகுமுறை ஏற்புடையதல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com