அகலும் வெளிப்படைத்தன்மை!

கடந்த ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசியல் நன்கொடைப் பத்திரங்கள் குறித்து அறிவித்தபோது, ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டன.

கடந்த ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசியல் நன்கொடைப் பத்திரங்கள் குறித்து அறிவித்தபோது, ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டன. கடந்த வாரம் அந்தத் திட்டம் குறித்த விவரங்களை அரசு வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய திட்டம் நடைமுறையில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை முறையில் காணப்படும் கொஞ்சநஞ்ச வெளிப்படைத்தன்மையையும் அகற்றிவிடுகிறது. 
தேர்தல் சீர்திருத்தம் குறித்த 255-ஆவது சட்ட ஆணைய அறிக்கை, அரசியல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அரசியல் கட்சிகள் பெறும் 69% நன்கொடையில் இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்பது குறித்த விவரம் கிடையாது. 2015-16 நிதியாண்டில் மட்டும் ரூ.7,900 கோடி அரசியல் கட்சிகளால் இனம் தெரியாதவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அரசியல் கட்சிகளின் நன்கொடைகள் குறித்துத் தேர்தல் ஆணையத்திடமோ, வருமான வரித்துறையிடமோ முழுமையான விவரம் இல்லை என்பதுதான் உண்மை.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமானவரிச் சட்டம், கம்பெனிகள் சட்டம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் ரூ.20,000-க்கும் அதிகமாகப் பெறும் நன்கொடைகள் அனைத்தும் கணக்கில் காட்டப்பட வேண்டும். அதேபோல, தொழில் நிறுவனங்களும் தங்களது அரசியல் நன்கொடைகளை லாப - நஷ்ட கணக்கு அறிக்கையில், எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை தரப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டாக வேண்டும். நிறுவனத்தின் மூன்று ஆண்டு நிகர சராசரி லாபத்தில் 7.5%-க்கும் அதிகமாக அரசியல் நன்கொடை தரக்கூடாது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற முடியாது. இவையெல்லாம் முன்பு இருந்த அரசியல் நன்கொடை குறித்த கட்டுப்பாடுகள். 
இப்போது நிதிச் சட்டம் 2017-இல் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் அரசியல் நன்கொடைப் பத்திரங்களை நன்கொடை வழங்கலாம். அந்த வங்கியில் கணக்குள்ளவர் மட்டுமே நன்கொடை வழங்க வேண்டும். அரசியல் கட்சிகளும் நன்கொடைப் பத்திரத்தை தங்கள் வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே பெற முடியும். அரசியல் கட்சிக்கும் வங்கிக்கும் மட்டும்தான் இன்னாரிடமிருந்து நன்கொடை பெறப்பட்டது என்பது தெரியும்.
நன்கொடையாளரின் நிறுவனம் அல்லது தனிப்பட்ட கணக்கிலிருந்து நன்கொடை வழங்கப்பட்ட தொகை குறித்த எந்த விவரமும் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்னின்ன கட்சிக்கு இன்னாரிடமிருந்து எவ்வளவு நன்கொடை பெறப்பட்டது என்பது வாக்காளருக்கும் தெரியப் போவதில்லை. 
வழக்கத்தில் உள்ள நன்கொடை முறையில் ரூ.20,000-த்திற்கும் மேல் எந்த ஒரு கட்சி நன்கொடை பெற்றாலும், அது குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறையும் அகற்றப்படுகிறது.
இதற்கு முன்னால், ஒரு நிறுவனம் மூன்று ஆண்டுகளில் பெற்ற நிகர லாபத்தில் 7.5% மட்டுமே அரசியல் நன்கொடையாகத் தர முடியும். இந்த வரம்பு அகற்றப்படுகிறது. அதாவது, ஒரு கட்சிக்கு எந்தவொரு வியாபார நிறுவனமும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அரசியல் நன்கொடைப் பத்திரங்கள் மூலமாக நன்கொடை வழங்க முடியும். லாபம் ஈட்டாத, செயல்படாத போலி நிழல் நிறுவனங்கள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்க முற்பட்டால்? பணம் கணக்கில் காட்டப்படுகிறது என்பது தவிர, அது குறித்த விவரங்கள் அனைத்துமே மறைக்கப்பட்டு, விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, வெளிப்படைத் தன்மை அகற்றப்படுகிறது. 
அதேபோல, முந்தைய தேர்தலில் ஒரு சதவீத வாக்கும் அதற்கு மேலும் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே அரசியல் நன்கொடைப் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறமுடியும் என்கிறது புதிய திருத்தம். புதிதாகத் தொடங்கும் கட்சிகள் தேர்தல் நிதி பெற முடியாது என்பது மக்களாட்சி முறைக்கு எதிரானதல்லவா? எல்லா கட்சிகளுக்கும் சமவாய்ப்பு மறுக்கப்படுவது தவறு.
நன்கொடையாளர் குறித்த விவரம் வாக்காளருக்குத் தெரியாது என்பதால், ஒரு நபரோ, நிறுவனமோ குறிப்பிட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து தான் அளித்த நன்கொடைக்காக எந்த அளவுக்கு பிரதிபலன் பெற்றன என்பது தெரியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல, பத்திரங்கள் வழங்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும்தான் நன்கொடையாளர் குறித்த விவரம் தெரியும். எந்த கட்சிக்கு யாரால் எவ்வளவு நன்கொடை தரப்பட்டது என்பதை அந்த அரசு வங்கியிடமிருந்து ஆட்சியிலிருக்கும் கட்சி பெற்றுவிட முடியும். இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை வழங்குபவர்கள் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்படக்கூடும். 
அரசியல் நன்கொடைப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், கருப்புப் பணப் புழக்கம் தடுக்கப்படும் என்பதும் மாயை. ஏனென்றால், ரூ.2,000-க்கும் குறைவான நன்கொடைகளை ரொக்கமாகப் பெற அரசியல் கட்சிகள் அனுமதிக்கப்படுகின்றன. 
நிதிச் சட்டம் 2017-இல் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் மூலம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சி மட்டும்தான் அரசியல் நன்கொடைப் பத்திரங்கள் மூலம் பயன்பெறும் என்பதையும், எதிர்க்கட்சிகள் அரசியல் நன்கொடை பெறப் போராட வேண்டி இருக்கும் என்பதையும், நன்கொடை விவரங்களைப் பெறுவதில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தால் பயனிருக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் நன்கொடைகளில் வெளிப்படைத் தன்மை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. 
ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ள வாக்காளர்கள் கவலைப்பட்டாக வேண்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com