புலிக்குமா அச்சுறுத்தல்?

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 115 புலிகள் மரணமடைந்திருக்கின்றன. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நூறுக்கும் மேற்பட்ட புலிகள் இறந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 115 புலிகள் மரணமடைந்திருக்கின்றன. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நூறுக்கும் மேற்பட்ட புலிகள் இறந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 2016-இல் வேட்டையாடுபவர்களால் 50க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டபோது தேசமே அதிர்ச்சியில் உறைந்தது. அதற்குக் காரணம் அதற்கு முந்தைய 15 ஆண்டுகளில் இந்த அளவுக்குப் புலிகள் கொல்லப்படவில்லை என்பதுதான். கடந்த ஆண்டிலாவது நிலைமை மாறும் என்று பார்த்தால் அப்படி மாறியதாகத் தெரியவில்லை.
போபாலிலுள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனமும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் 2015-இல் இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. புலிகள் சரணாலயங்களின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்தும் அந்த ஆய்வு பல விவரங்களைத் திரட்டியுள்ளது. இமயமலைச் சாரலிலுள்ள 'கார்பெட்' புலிகள் சரணாலயத்தின் பங்களிப்பால், தில்லிக்கு வருகின்ற குடிநீர் பாதுகாக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல ஆச்சரியமான முடிவுகளை அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஆசியாவின் வனங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலிகள் வாழ்ந்து வந்தன. ஐரோப்பியர்களால், துப்பாக்கியின் மூலம் புலிகளை வேட்டையாடும் வழக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை சரசரவென சரியத் தொடங்கியது. ஐரோப்பிய துரைமார்களுக்கும், சமஸ்தான ராஜாக்களுக்கும், ஜமீந்தார்களுக்கும் புலி வேட்டை என்பது அவர்களது வீர, தீர சாகசத்தை வெளிப்படுத்தும் விளையாட்டானது. அதன் விளைவாக லட்சங்களில் இருந்த புலிகளின் எண்ணிக்கை ஆயிரங்களாகக் குறைந்துவிட்டது.
இந்தியாவைப் பொருத்தவரை, புலிகள் சரணாலயங்கள் அமைக்கப்பட்டு, புலிகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டன. அதற்காக மத்திய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடுகள் செய்தன. 2006-இல் 1411ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2016-இல் 3891ஆக அதிகரித்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் முனைப்பாலும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் மேற்கொண்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளாலும்தான் இந்தியாவில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை நம்மால் இரட்டிப்பாக்க முடிந்தது.
மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் புலிகள் வாழும் பகுதிகளை அதிகரிப்பதற்கு வழியில்லை என்பது மட்டுமல்ல, இப்போதிருக்கும் புலிகளின் எண்ணிக்கையை கணிசமாகக் கூட்டுவதும் உடனடி சாத்தியமில்லை. அதனால், ஒடிஸா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட புலிகள் வாழும் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இந்த மாநிலங்களில் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலும், புலிகள் மிக அதிகமாக வாழ்ந்த வரலாறும் இருந்தும்கூட, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளும், புலி சரணாலய நிர்வாக மேலாண்மையும் மேற்கொள்ளப்படாததால்தான் இந்த மாநிலங்களில் கணிசமான அளவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது. அது மட்டுமல்லாமல், மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் புலி வேட்டைக்காரர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 
இந்தியாவில், புலிகள் சரணாலயங்கள் 50 இருக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 115 புலிகள் கொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் 90 புலிகள் கொல்லப்பட்டது எப்படி என்று இப்போது வரை முழுமையான தகவல் இல்லை. புலி வேட்டைக்காரர்கள் மட்டுமல்லாமல், புலிகள் நடமாடும் வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள தோட்டங்களில் போடப்பட்டிருக்கும் மின் வேலிகளும்கூட புலிகளின் மரணங்களுக்குக் காரணம்.
புலிகள் வாழும் பகுதிகள் குறைந்து வருகின்றன. வனப்பகுதிகளில் குடியிருப்புகளும், தோட்டங்களும், எஸ்டேட்டுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், புலிகள் வனங்களை விட்டு வெளியே வருகின்றன. அதன் விளைவாக மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு ஒரே வழி, புலிகள் சரணாலயங்களின் சுற்றளவை மேலும் அதிகரிக்காவிட்டாலும்கூட, புலிகள் நடமாடும் வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிகழாமல் தடுப்பதுதான்.
அதேபோல, அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டின் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதால், வனவிலங்குகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. வனப்பகுதிகள் வழியாக சாலைகள் அமைக்கப்படுவதால் வாகனங்களில் சிக்கி மடியும் வன விலங்குகளில் புலிகள் முக்கியமானவை. சாலை விபத்துகளில் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையைப் போல புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
சீன மருத்துவத்தில் புலிகளின் உறுப்புகளுக்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. உலகளாவிய அளவில் புலிகள் தொடர்பான வணிகத்தின் அளவு ஆண்டொன்றுக்கு 1,900 கோடி டாலர் (ரூ.1.23 லட்சம் கோடி) என்று கூறப்படுகிறது. இதனால்தான் புலி வேட்டைக்காரர்கள் தீவிரமாகச் செயல்படுகின்றனர். வனக்காவலர்களுக்கும் புலி வேட்டையாளர்களுக்கும் இடையேயுள்ள புரிதலும், தொடர்பும் புலிகள் கொல்லப்படுவற்கு மிகப்பெரிய காரணம். இதைத் தடுப்பது எளிதல்ல என்றாலும், இயலாததல்ல.
நமது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். பல்லுயிர் பெருக்கம் தடையில்லாமல் நடைபெற வேண்டும், வனங்கள் காக்கப்பட வேண்டும் என்று சொன்னால், அச்சுறுத்தல் இல்லாமல் புலிகள் காடுகளில் உலவ வழிகோல வேண்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com