இதுவல்ல வளர்ச்சி!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் உரையாற்ற அழைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பெருமை.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் உரையாற்ற அழைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பெருமை. அந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரை கடந்த ஆண்டு சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் உரையிலிருந்து வெகுவாக வேறுபட்டிருந்தது. ஜீ ஜின்பிங் சீனாவை உலகப் பொருளாதாரத்தின் முன்னணிப் பிரதிநிதியாக சித்திரித்தார் என்றால், பிரதமர் நரேந்திர மோடி உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை ஒரு மிகச் சிறந்த மூலதனச் சந்தையாக அறிமுகப்படுத்தினார். 
டாவோஸ் மாநாடு இந்தியா குறித்த வேறுசில உண்மைகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது. சர்வதேச நிதியத்தின் கருத்துப்படி இந்தியாவின் வளர்ச்சி 2018-இல் 7.4 விழுக்காடாக இருக்கும். அதே நேரத்தில் சீனாவின் வளர்ச்சி 6.8 விழுக்காடு மட்டுமே. உலகில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதாரமாக இந்தியா இருக்கப் போகிறது என்று கணிக்கிறது சர்வதேச நிதியம். 
அத்துடன் நின்றுவிடவில்லை. 2019-இல் இந்தியாவின் வளர்ச்சி 7.8 விழுக்காடாக இருக்கும் என்றும், அதனால் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய ஏற்றங்களை எதிர்நோக்கும் என்றும் சர்வதேச நிதியம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. இது முதலீட்டாளர்கள் அளவில் இந்தியாவுக்கு சாதகமான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.
இது ஒருபுறம் இருக்க, உலகப் பொருளாதார மாநாடு சமச்சீர் வளர்ச்சிக் குறியீடு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது 62-ஆவது இடம்தான். சீனா 26-ஆவது இடத்தில் இருக்கிறது. 
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது வேறு; சமச்சீர் வளர்ச்சி என்பது வேறு. ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு நாட்டில் 10 விழுக்காடு பேர் பெரும் பணக்காரர்களாகவும், மீதமுள்ளவர்கள் பெரும் ஏழைகளாகவும் இருந்தாலும் கூட ஒட்டுமொத்த வளர்ச்சி காணப்படும்.
சமச்சீர் வளர்ச்சிக் குறியீடு என்பது ஒரு நாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்காலத் தலைமுறை மேலும் கடனாளியாகாமல் இருத்தல் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி அடித்தட்டு மக்களையும் மேம்படுத்துகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் உலகப் பொருளாதார மாநாட்டில் சமச்சீர் வளர்ச்சிக் குறியீடு முக்கியத்துவம் பெறுகிறது.
சமச்சீர் வளர்ச்சிக் குறியீட்டை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். முதலாவது பிரிவில் நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 29 வளர்ச்சி அடைந்த நாடுகள் காணப்படுகின்றன. இரண்டாவது பிரிவில் 74 வளர்ச்சி அடையும் நாடுகள் அடங்கும். அந்த 74 நாடுகளில்தான் சமச்சீர் வளர்ச்சியில் இந்தியா 62-ஆவது இடத்திலும் சீனா 26-ஆவது இடத்திலும் இருக்கின்றன.
சமச்சீர் வளர்ச்சி குறித்து உலகப் பொருளாதார வல்லுநர்கள் கவலைப்படுவதன் பின்னணியில் வணிக நோக்கம் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராக அனைவரையும் சென்றடையாமல் போனால், விற்பனைக்கான சந்தை வளர்ச்சி அடையாமல் தேக்கம் அடைந்துவிடும். தொழில் வளர்ச்சி என்பது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைச் சார்ந்தது மட்டுமல்ல, அவர்களது வாங்கும் சக்தி அதிகரிப்பதையும் பொருத்துத்தான் அமையும். ஒரு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சமச்சீராக வளர்ச்சி அடையும்போதுதான் அனைவருடைய வாங்கும் சக்தியும் அதிகரித்து, அதன் மூலம் விற்பனைக்கான சந்தை விரிவடையும்.
பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் இந்தியாவின் மீது அக்கறை செலுத்துவதன் காரணம், இங்கே காணப்படும் அதிக அளவிலான நடுத்தர வர்க்கத்தினர். அவர்களது எண்ணிக்கை அதிகரிப்பதும், வாங்கும் சக்தி அதிகரிப்பதும்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். உற்பத்தி அதிகரிப்பது, உற்பத்தியான பொருள்கள் விற்பனையாவது ஆகியவற்றின் அடிப்படையில்தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது. இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்துவந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கையில் தேக்கம் ஏற்பட்டிருப்பதும், அவர்களது வருவாய் அதிகரிக்காமல் இருப்பதும் 'தி எக்கானமிஸ்ட்' உள்ளிட்ட பல பத்திரிகைகளால் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இந்தியாவில் ஒரு விழுக்காடு பேர்தான் ரூ. 1 கோடிக்கு மேல் சராசரி வருவாய் உள்ளவர்கள். மத்திய ஐரோப்பிய நாடுகளின் அளவுக்கு வருவாய் பெறுபவர்கள் 9 விழுக்காடு பேர். அடுத்த 40 விழுக்காடு பேர் வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைப் போன்ற வருவாய் பெறுபவர்கள். மீதமுள்ள ஏறத்தாழ 50 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் வருவாய் மிகவும் ஏழ்மையான 
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளது போலத்தான் காணப்படுகிறது.
இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை சமச்சீர் வளர்ச்சி இல்லாமல் இருப்பது. சமச்சீர் வளர்ச்சி இருந்தால் மட்டுமே நடுத்தர வர்க்கத்தினரின் வருவாய் அதிகரித்து, வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதை அவர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இது பன்னாட்டு நிறுவனங்களையும் உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளையும் கவலைக்குள்ளாக்கி இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. 
2014-இல் தனது தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த கோஷம் 'அனைவருடனும், அனைவருக்கான வளர்ச்சி' (சப் கா சாத், சப் கா விகாஸ்). பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அது சமச்சீர் வளர்ச்சியாக இல்லை என்பதைத்தான் சமச்சீர் வளர்ச்சிக் குறியீடு வெளிப்படுத்துகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com