"ஆசியான்' உறவு!

குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தில்

குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தில் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வு. ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தின்போது ஏதாவது நாட்டின் அதிபர் விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், இதுபோல பத்து நாடுகளின் தலைவர்கள் இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்பது இதுதான் முதல் முறை. ஆசியானுடனான இந்தியாவின் நெருக்கம் அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாராகிறது என்பதுதான் இதன் மூலம் நரேந்திர மோடி அரசு உலகுக்குத் தெரிவிக்கும் செய்தி.
1967-இல் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 5 நாடுகள் இணைந்து தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான "ஆசியான்' என்கிற அமைப்பை ஏற்படுத்தின. புருணை, கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியத்நாம் ஆகிய ஐந்து நாடுகளும் இந்தக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டபோது இந்த அமைப்பு ஒரு முக்கியமான பொருளாதாரக் கூட்டமைப்பாக மாறியது. ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவின் நெருக்கத்தை அதன் தலைவர்கள் இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் உலகுக்கு உணர்த்தி இருக்கின்றனர்.
60-களில் கிழக்காசிய நாடுகள் வளர்ச்சி அடையத் தொடங்கியபோது அவற்றுடன் கைகோத்து நடைபோட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையும் தடையாக இருந்தன. 1991-இல் பிரதமர் நரசிம்மராவின் தலைமையில் ஆட்சி அமைந்த போதுதான் "கிழக்கு நோக்கிய பார்வை' என்கிற தெற்காசிய நாடுகளுடனான உறவை மேம்படுத்திக் கொள்ளும் வெளியுறவுக் கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதுமுதல் இந்தியப் பொருளாதாரத்தில் ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் பங்களிப்பு அதிகரித்தது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஆசியான் நாடுகளுடனான நமது உறவில் மேலும் நெருக்கமும் கூட்டுறவும் அதிகரித்தன.
எப்படி இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவிலுள்ள நாடுகளையெல்லாம் இணைத்து ஐரோப்பிய யூனியன் உருவாகக் காரணமாக இருந்ததோ அதேபோல, சீனாவின் வளர்ச்சியும் எல்லைப் பிரச்னைகளில் சீனா காட்டும் தீவிரமும் கிழக்காசிய நாடுகளை ஒருங்கிணைத்து, ஆசியான் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா மேற்காசியாவுக்கு அளித்த முக்கியத்துவத்தை தென்கிழக்கு ஆசியாவிடம் காட்டவில்லை. அவருக்குப் பின்பு வந்த அதிபர் டொனால்டு டிரம்ப் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் தலைமைக்கு முன்னுரிமை அளிக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்ததன் விளைவாக ஆசியான் நாடுகள் அடுத்தகட்ட வெளிவிவகாரக் கண்ணோட்டத்துக்கு முற்பட்டிருக்கின்றன. அதுதான் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கூட்டுறவுக்கு அந்த அமைப்பின் நாடுகள் முன்னுரிமை அளிப்பதன் காரணம்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஏதாவது ஒரு வகையில் சீனாவுடன் நெருக்கமாக இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. சீனாவுக்கும் அந்த நாடுகளுக்குமிடையே நெருக்கமான பொருளாதாரத் தொடர்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த நாடுகள் சீனாவை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் சூழல் ஏற்படுவதை விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், ஆசியான் அமைப்பைச் சேர்ந்த சில நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையில் தென்சீனக் கடலின் ஆதிக்கம் குறித்துக் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
அதனால்தான் இந்த நாடுகள் இந்தியாவுடனான நட்புறவையும் வலுவாக வைத்துக் கொள்வதில் முனைப்பு காட்டுகின்றன. தில்லியில் கடந்த வியாழன் நடந்த இந்திய ஆசியான் மாநாட்டில் தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. இந்தியாவும் ஆசியான் அமைப்பும் இணைந்து செயல்படத் தொடங்கி கால் நூற்றாண்டு ஆகிவிட்ட நிலையில், இந்தியாவுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தியாவைப் பொருத்தவரை ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளுடனான உறவு பல்வேறு வகையில் பயனளிக்கக் கூடியது. இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியையும் அந்த மாநிலங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இணைப்பு ரசாயன இணைப்பாக மாறுவதற்கும் காரணமாக இருக்கும். ஆசியான் அமைப்பு நாடுகளின் முதலீடு இந்தியாவின் பொருளாதாரத்தைப் பெரிய அளிவில் மேம்படுத்தக்கூடும். இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதி, அதிக அளவில் ஆசியான் நாடுகளில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
இந்திய-ஆசியான் உறவில் மிக முக்கியமான பங்கை "பெüத்தம்' வகிக்கிறது. இந்தியாவிலிருந்து ஆசியான் நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படுவது போன்ற வசதிகள், அங்கிருந்து இங்கே வருபவர்களுக்கு இல்லை என்கின்ற குறை நீண்ட காலமாகவே காணப்படுகிறது. சுற்றுலாவை மையப்படுத்தி, இந்திய-ஆசியான் உறவு மேம்படுத்தப்படுமேயானால், பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் நட்புறவு ரீதியிலும் இந்தியா ஆசியானுடன் இணைந்து செயல்பட அது வழிகோலும்.
ஆசியானுடனான நெருக்கத்தைப் பொருத்தவரை இந்தியா பல உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 2020-க்குள் 200 பில்லியன் டாலர் (ரூ.13 லட்சம் கோடி) அளவுக்கு வர்த்தக உறவை மேம்படுத்துவது என்கிற இலக்கில் நாம் இன்னும் பாதியைக் கூட எட்டவில்லை. அதேபோல இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே மியான்மர் வழியாக நெடுஞ்சாலை அமைக்கும் பணி நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதிகரித்த ராணுவ கடற்படை கூட்டுறவு என்கிற முந்தைய ஒப்பந்தம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. 
இந்தியா தனது சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடில்லாமல் இருந்தால் மட்டுமே ஆசியானுடனான நட்புறவும் நெருக்கவும் உறுதிப்படுமே தவிர, மாநாடுகள் நடத்துவதால் எந்தவித பயனும் இருக்காது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com