டோக்காலாம் - கவனம்! கவனம்!!

பூடான் - சீன எல்லையில் உள்ள

பூடான் - சீன எல்லையில் உள்ள டோக்காலாமில் இந்தியப் படைகளுக்கும் சீனத் துருப்புகளுக்கும் இடையே காணப்பட்ட 73 நாள் பதற்றம் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசின் ராஜதந்திர வெற்றியாக அந்தச் சம்பவம் பாராட்டப்பட்டு, ஐந்து மாதங்கள் முடிவதற்குள் இப்போது மீண்டும் அந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. 
கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, சீனா-பூடான் எல்லையில் காணப்பட்ட பதற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய- சீனத் துருப்புகள் பின்வாங்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அடுத்த நாளே வெளிவிவகாரத் துறை அமைச்சகம் இன்னொரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி சீனா தன்னுடைய துருப்புகளை விலக்கிக்கொண்டது மட்டுமல்ல, சாலைப் பணிகளுக்காகக் கொண்டுவரப்பட்ட புல்டோசர் உள்ளிட்டவற்றையும் டோக்காலாம் பகுதியில் அமைத்திருந்த கூடாரங்களையும் விலக்கிக் கொண்டிருக்கிறது என்று அந்தச் செய்திக் குறிப்பு தெரிவித்தது.
பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மாநாட்டுக்கிடையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அப்போது இந்திய- சீன உறவில் ஏற்பட்டிருந்த கசப்புகளும், சந்தேகங்களும், நெருடல்களும் அகற்றப்பட்டன என்று பரவலாகக் கருதப்பட்டது.
ஆனால், அடுத்த ஒரு மாதத்திலேயே டோக்காலாம் பகுதியில் சீனா மறுபடியும் சாலைப் பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் கசிந்தன. அதை இந்தியா பொருட்படுத்தவில்லை. சீனாவில் நடைபெற இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் குழுவில் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்காக அதிபர் ஜீ ஜின்பிங் எடுத்த தற்காலிக நடவடிக்கையாகத்தான் இது இருக்கும் என்று கூறி அதை இந்திய அரசு பெரிதுபடுத்த விரும்பவில்லை. பல்வேறு பரபரப்பு செய்திகளும், தேர்தல்களும் முக்கியத்துவம் பெற்றுவிட்டதால், இந்திய ஊடகங்களும் டோக்காலாம் குறித்து சிரத்தையோ, கவலையோ கொள்ளவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு பொதுவெளியில் கசிந்த விண்கோள் படங்கள், டோக்காலாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீன ராணுவம் தீவிரம் காட்டுவதை வெளிப்படுத்தின. இப்போது வெளியாகி இருக்கும் படங்கள் அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன. ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே பதற்றம் நிலவிய அதே டோக்காலாம் பகுதியில், எல்லையில் இருந்து வெறும் 81 மீட்டர் தொலைவில் சீனா பல்வேறு ராணுவ வசதிகளை ஏற்படுத்தி இருப்பதுடன், விமானம் இறங்குவதற்கான ஹெலிபேட், போர்க்காலத் தேவைக்கான பதுங்கு குழிகள் உள்ளிட்டவற்றை உருவாக்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகம் பதற்றம் நிலவிய பகுதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்றும், பல்வேறு வழிகளில் இருதரப்புக்குமிடையேயான கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு கண்டு வருவதாகவும் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் இந்திய ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத் சீன ராணுவம் டோக்காலாமில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி இருப்பதை ஏற்றுக் கொள்கிறார். அவை தற்காலிகமானவை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
ராணுவத் தளபதி கூறுவதிலிருந்து எல்லைப்புற சூழல் குறித்து மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகத்துக்கு முழுமையான விவரமும் கிட்டவில்லையோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. சீன அரசு டோக்காலாம் எல்லைப் பகுதியில் அமைக்கப்படும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. அந்தப் பகுதி எப்போதுமே சீனாவுக்குச் சொந்தமான பகுதி என்றும் அதன் ஆதிக்கத்தில்தான் இருந்து வருகிறது என்றும் சீன அரசு தனது செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கிறது.
கடந்த வாரம் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் சீனாவுடனான பிரச்னைகள் முன்னுரிமை பெறுவதாகக் கூறியிருக்கிறார். அதேபோல ராணுவத்தின் தலைமை தளபதி விபின் ராவத், நமது கவனத்தை மேற்குப்புற எல்லையிலிருந்து கிழக்குப்புற எல்லையை நோக்கித் திருப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இவை எல்லாம் டோக்காலாம் பகுதியில் பிரச்னை முற்றி வருகிறதோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது.
டோக்காலாம் பீடபூமி என்பது பூடான், இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளும் சந்திக்கும் இடம். டோக்காலாம் பீடபூமியின் மத்தியில் இருக்கிறது "டோக்கா லா' என்கிற கணவாய். அதை பூடானின் சார்பில் இந்திய ராணுவம் பாதுகாக்கிறது. 
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கிறது சிலிகுரி என்கிற பகுதி. 200 கி.மீ.நீளமும் 60 கி.மீ அகலமும் சில இடங்களில் வெறும் 17 கி.மீ அகலமும் கொண்ட சிலிகுரி பகுதி மிக முக்கியமானது. ஏதாவது சூழலில் சீனா தாக்குதல் நடத்த நேர்ந்தால், சிலிகுரி பகுதியை இந்தியாவிலிருந்து துண்டித்துவிட்டால் வடகிழக்கு மாநிலங்களுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான இணைப்பு முழுமையாக முடக்கப்படும். தற்போது பூடானிடம் இருக்கும் டோக்காலாம், சீனா வசம் போனால் அதனால் ராணுவ ரீதியாக இந்தியா மிகக் கடுமையாக பலவீனப்படும்.
ராணுவ ரகசியங்கள் பொதுவெளியில் கசிய வேண்டிய அவசியம் இல்லைதான். அதேநேரத்தில் இந்திய அரசு அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து எல்லைப்புறப் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது. இந்திய அரசு, நிதிநிலை அறிக்கையைவிட அதிகமான முன்னுரிமையை டோக்காலாம் 
பிரச்னைக்கு அளிக்க வேண்டும். இதுகுறித்து தெளிவான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com