மீண்டும் போஃபர்ஸ்!

போஃபர்ஸ் ஊழல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது

போஃபர்ஸ் ஊழல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு எதிராகப் போட்டியிட்ட வழக்குரைஞர் அஜய் அகர்வால் மே 31, 2005-இல் தில்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கில் மேல் முறையீடு செய்திருக்கிறார். 
ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஏ.பி.போஃபர்ஸ் என்கிற ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஹோவிட்சர் பீரங்கிகள் வாங்குவதற்கு அன்றைய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மார்ச் 24, 1986-இல் கையொப்பம் இடப்பட்ட ரூ. 1437 கோடிக்கான இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 1989 மக்களவைத் தேர்தலில் போஃபர்ஸ் ஊழல் முக்கிய பங்காற்றியது. ராஜீவ் காந்தி பதவி இழந்து வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு 1989-இல் ஆட்சி அமைத்ததற்கு போஃபர்ஸ் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு மிக முக்கியமான காரணம்.
தேசிய முன்னணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஜனவரி 22, 1990-இல் போஃபர்ஸ் வழக்கின் முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ. பதிவு செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அன்றைய போஃபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ, இடைத்தரகர்களான வின்சத்தா, ஹிந்துஜா சகோதரர்கள் ஆகியோர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1991-இல் அமைந்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
1990-இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட போஃபர்ஸ் வழக்கில், 1999-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபோதுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப் பத்திரிகையில் வின்சத்தா, சோனியா காந்தியின் உறவினர் குவாத்ரோச்சி, அன்றைய பாதுகாப்புச் செயலர் எஸ்.கே.பட்னாகர், போஃபர்ஸ் நிறுவனத் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ ஆகியோர் மீதும், அதைத் தொடர்ந்து ஹிந்துஜா சகோதரர்கள் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. வழக்கும் தொடரப்பட்டது.
2005-இல் தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.எஸ்.சோதி, ஹிந்துஜா சகோதரர்களான ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ் சந்த் ஆகிய மூவரின் மீதும் பதிவு செய்திருந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, அவர்களை வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தார். அதுமட்டுமல்ல, ரூ.64 கோடி ஊழல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு மத்திய புலன் விசாரணைத் துறை ரூ.250 கோடி செலவு செய்திருப்பதற்குக் கண்டனமும் தெரிவித்தார். 
2005-இல் உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்மீது மத்திய புலனாய்வுத் துறை உடனடியாக மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அன்றைய மன்மோகன் சிங் அரசின் நிர்பந்தத்தாலோ என்னவோ இந்த வழக்கில் சி.பி.ஐ. மேல் முறையீட்டு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. எந்தவித நடவடிக்கையையும் சி.பி.ஐ. மேற்கொள்ளாத நிலையில் அக்டோபர் 2005-இல் 5 மாதங்களுக்குப் பிறகு அஜய் குமார் அகர்வால், ராஜ்குமார் பாண்டே ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மனு கிடப்பில் போடப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதுதான் போஃபர்ஸ் வழக்கு இன்னும் இருக்கிறது என்பதே பலருக்கும் நினைவுக்கு வந்தது.
இந்த வழக்கில் 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்வது அவசியம் இல்லாதது என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் கருத்துத் தெரிவித்திருக்கிறார். எந்தவொரு மேல் முறையீடும் சட்டப்படி 90 நாள்களுக்குள் செய்யப்பட்டுவிட வேண்டும். 12 ஆண்டுகால தாமதத்திற்கான எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாத நிலையில், சி.பி.ஐ.யின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிடும் என்பதுதான் அவரது கருத்து. 
வழக்கு தொடுத்திருக்கும் அஜய் அகர்வால் இன்னொரு முக்கியமான தகவலை வெளியிட்டிருக்கிறார். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் 2011-இல் அவருக்கு அளிக்கப்பட்ட தகவல்படி போஃபர்ஸ் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு செலவழித்திருக்கும் தொகை ரூ. 4.77.கோடி மட்டும்தான். ஆனால், தில்லி உயர் நீதிமன்றத்தில், ரூ.64 கோடி ஊழல் வழக்கு விசாரணைக்காக, ரூ.250 கோடி செலவிட்டிருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்திருப்பது தவறான தகவல் என்பதை அகர்வால் சுட்டிக்காட்டுகிறார்.
போஃபர்ஸ் வழக்கு என்பது அரசியல் ரீதியானது என்பதை கார்கில் போரின்போது இந்திய ராணுவத்துக்கு மிகவும் பயனுள்ளதாக போஃபர்ஸ் பீரங்கிகள் அமைந்திருந்தது வெளிச்சம் போட்டது. போஃபர்ஸ் வழக்கு தொடர்புடையவர்களில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, பட்னாகர், வின்சத்தா, மார்ட்டின் ஆர்ட்போ என்று பலரும் காலமாகிவிட்டனர். ஆனாலும், அரசியல் ரீதியாக போஃபர்ஸ் காலாவதி ஆகாத பிரச்னையாக இந்திய அரசியலை வலம்வந்து கொண்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்திலாவது போஃபர்ஸ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா, இல்லை தொடருமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com