இறந்தும் வாழ்வோமே...

இந்தியா, மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக இருந்தும்கூட, உடலுறுப்பு தானம் என்று வரும்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இந்தியா, மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக இருந்தும்கூட, உடலுறுப்பு தானம் என்று வரும்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி கடந்த ஆண்டில் பத்து லட்சம் பேருக்கு 0.86 என்கிற அளவில்தான் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. பிகார், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீரம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் பெயருக்குக்கூட ஒரு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை நடைபெறவில்லை.
முதல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மும்பையில் நடந்து 53 ஆண்டுகள் கழிந்தும்கூட, இந்தியாவில் 12 மாநிலங்களில் இதுவரை ஒரு உறுப்புமாற்று சிகிச்சையும் நடைபெறவில்லை என்பது எந்த அளவுக்கு நம்மிடையே உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வும், உறுப்புமாற்று சிகிச்சை மேற்கொள்ளும் திறமை பெற்ற மருத்துவர்களும் இல்லாமல் இருப்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன. தென் மாநிலங்களும், மகாராஷ்டிரமும், உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக் கேந்திரங்களாக மாறி வருகின்றன என்றாலும்கூட, இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் இதுகுறித்து போதுமான அளவு முனைப்பு இல்லாமலே தொடர்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு கணிசமாகவே அதிகரித்து விட்டிருக்கிறது. முன்பு வெறும் 9,000 மட்டுமே இருந்த நிலைமை மாறி, இப்போது பதினைந்து லட்சத்துக்கும் அதிகமான உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் ரத்த தானம், உறுப்பு தானம் குறித்த ஆர்வமும், இன்னொரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற தன்னார்வ உணர்வும் அதிகரித்திருப்பது வரவேற்புக்குரிய மாற்றம்.
உறுப்பு தானம் செய்ய முன்வருவோர்களுக்காக உறுப்புக் கொடையாளி அட்டை (டோனர் கார்ட்ஸ்) என்பது உருவாக்கப்பட்டுப் பிரபலமடைந்து வருகிறது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்கள் பலர் உறுப்பினர்களாகச் சேர்ந்து அதிக அளவில் ரத்த தானமும், குறைந்த அளவில் உறுப்பு தானமும் செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஆனாலும்கூட தேவைக்கும், கொடையாளிகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி தொடரவே செய்கிறது.
ஆண்டுதோறும் 85,000 புதிய கல்லீரல் மாற்று தேவைப்படுவோரில் வெறும் 3% பேர் மட்டுமே அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள். அதேபோல, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படும் நிலையில், அவர்களில் 8,000 பேருக்கு மட்டுமே சிறுநீரக மாற்று சிகிச்சை நடைபெறுகிறது. இதயமாற்றின் தேவை ஆண்டொன்றுக்கு 50,000 என்றால், மாற்று சிகிச்சைக்கு இதயம் தானமாகக் கிடைப்பது என்னவோ அதிகபட்சமாக வெறும் 50 தான். ஆங்காங்கே, கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றன. கண்தானம் பரவலாகவே நடைபெறுகிறது. இருந்தும்கூட, தேவைக்கேற்றவாறு கண்தானம் இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
பத்து லட்சம் பேருக்கு ஒருவர் என்கிற அளவிலாவது இந்தியாவில் இப்போது உறுப்பு தானம் செய்ய முன்வருகிறார்கள் என்பது சற்று ஆறுதல். உலகிலேயே அதிக அளவில் உறுப்பு தானம் நடைபெறும் நாடாக ஸ்பெயின் இருந்து வருகிறது. அந்த நாட்டைப்போல, பத்து லட்சம் பேருக்கு 36 உறுப்புக் கொடையாளிகள் என்கிற நிலையை இந்தியா எட்டுவது ஒன்றும் சிரமமல்ல.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் மரணிக்கிறார்கள். கடந்த ஆண்டு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 55 சாலை விபத்துகளில் 17 பேர் இறந்ததாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 18 முதல் 35 வயதுப் பிரிவினர். இவர்கள் மட்டுமல்லாமல், மூளைச்சாவால் பாதிக்கப்பட்டு, மரணத்துடன் போராடிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்துக்கும் அதிகம். இவர்கள் அனைவருமே உறுப்பு தானக் கொடையாளிகளாக மாறினாலே, பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்படும். அப்படி இருந்தும், இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு ஒருவர்தான் உறுப்புக் கொடையாளியாக இருப்பது, நம்மிடையே சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு இரண்டு வகையில் உறுப்புக் கொடை பெறப்படுகிறது. முதலாவது, கொடையாளி இறந்த சில மணி நேரங்களில் அவரது உறுப்பு அல்லது உறுப்புகள் அகற்றப்பட்டு தானம் பெறுபவர்களின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. மேலை நாடுகளில், அத்தனை உறுப்பு மாற்று சிகிச்சைகளில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. அங்கே நட்புறவு, குடும்ப உறவு என்பதெல்லாம் இல்லாத நிலை காணப்படுவதுதான் அதற்குக் காரணம்.
இந்தியாவில் பெரும்பாலான உறுப்புக் கொடையாளிகள் நெருங்கிய ரத்த உறவுகளாகவோ, நட்புறவாளர்களாகவோ இருப்பதால்தான் அதிக அளவில் உறுப்பு மாற்று சிகிச்சை நடைபெறுவதில்லை. இந்த நிலைமை மாற வேண்டும். மேலை நாடுகளைப் போல, உறுப்பு தானம் உறவுகளைத் தாண்டி நடைபெற்றாக வேண்டும்.
இப்போதும்கூட, உறுப்பு மாற்று சிகிச்சை என்பது அதிகமாகத் தனியார் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று சிகிச்சைகள் ஊக்குவிக்கப்பட்டால் மட்டுமே, தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் சட்டவிரோதமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும், அதற்காக மிக அதிக அளவில் அவர்கள் வசூலிக்கும் கட்டணங்களும் கட்டுக்குள் வரும். இது குறித்து அரசு தீவிரமாக சிந்தித்தாக வேண்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com