பிரதமர் பேச வேண்டும்!

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தபோது, மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், "தலைநகர் தில்லியிலோ, மும்பை அல்லது கொல்கத்தாவிலோ இதுபோன்ற

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தபோது, மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், "தலைநகர் தில்லியிலோ, மும்பை அல்லது கொல்கத்தாவிலோ இதுபோன்ற சம்பவம் நடைபெற்றால் மட்டுமே அது தேசத்தின் பார்வைக்கு வரும்' என்று கூறிய கருத்து நினைவுக்கு வருகிறது. இப்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அப்பாவி மக்கள் மீது வன்முறைக் கும்பல் நடத்தும் தாக்குதல்களும் கொலைகளும் அவரது கூற்றை மெய்ப்பிக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்பட்டபோது, அதுகுறித்துக் கவலை கொள்ளாத நிலை மாறி, இப்போது அதேபோன்ற சம்பவங்கள் வட மாநிலங்களில் நடைபெறும்போது, தேசிய அளவில் ஊடக வெளிச்சம் பெறுகின்றன.
 கடந்த 25 நாள்களில் நடந்த 14 சம்பவங்களில் ஊருக்குப் புதியவர்கள் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்; 9 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். "குழந்தை கடத்துபவர்கள்' என்கிற அச்சத்தின் அடிப்படையில் பஞ்சம் பிழைக்க வந்த அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், அஸ்ஸாம், திரிபுரா என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும்போது தேசிய அளவில் இப்படியொரு பொய்யான வதந்தி ஏன், யாரால் பரப்பப்படுகிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை.
 சமீபத்தில் திரிபுராவில் நடந்த சம்பவத்தில், பிழைப்புத் தேடி அந்த மாநிலத்துக்குச் சென்றிருந்த உத்தரப் பிரதேசத்துக்காரர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். திரிபுராவில் இன்னொரு வேதனைக்குரிய சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. குழந்தை கடத்துவோர் குறித்த வதந்திகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதற்கு, திரிபுரா அரசு சிலரை நியமித்தது. அதில் ஒருவர் அரசு வாகனத்தில் இன்னோர் அரசு ஊழியருடன் பொய்ப் பிரசாரத்துக்கு எதிர்ப் பிரசாரம் செய்ய முற்பட்டபோது, பொதுமக்களின் தாக்குதலுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
 மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள துலே என்கிற இடத்தில் வன்முறைக் கும்பலின் கொலை வெறித் தாக்குதல் குறித்து விசாரிக்க எட்டு பேர் கொண்ட காவல்படை விரைந்தது. அவர்கள், 3,500-க்கும் அதிகமான பொதுமக்களால் தாக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து, எந்த அளவுக்குப் பொய்ப் பிரசாரம் வெற்றி அடைந்திருக்கிறது, மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள், கும்பல் வெறி நாடு தழுவிய அளவில் பரவி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
 இந்த வன்முறை வெறி, நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளாகவே இருந்து வருவதை குறிப்பிட்டாக வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் வெறுப்புணர்வுதான் இந்த வன்முறை மனோபாவத்தின் தொடக்கம். பசுவதைக்கு எதிராக, "பசுக்காவலர்கள்' என்று வர்ணித்துக் கொள்பவர்கள் இதுபோன்ற கொலை வெறித் தாக்குதல்களில் கும்பலாக ஈடுபடத் தொடங்கினார்கள். இதற்கெல்லாம் அடிப்படை காரணம், சட்டம் தனது கடமையைச் செய்யாது என்கிற துணிவுதான்.
 இதைத் தடுப்பதற்கு சட்டத்தை கையில் எடுத்துக் கொள்பவர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் துணிந்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கும் துணிவு அரசியல் தலைமைக்கும், காவல் துறையினருக்கும் வேண்டும். இதுபோன்ற கொலைவெறி பிடித்த வன்முறைக் கும்பலுக்கு சட்டத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, பொய்ச் செய்தி, அவதூறு, வெறுப்பைக் கக்குதல் ஆகியவை சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது தடுக்கப்பட்டாக வேண்டும். அவதூறு பிரசாரங்களில் சமூக வலைதளங்களின் மூலம் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்கிற செய்தி எல்லா சமூக வலைதளங்களின் மூலமும் பரப்பப்பட்டாக வேண்டும்.
 சமூக வலைதளங்கள் எந்தவிதக் கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லாமல் பொறுப்பற்று செயல்படுவதுதான் கும்பல் வன்முறைக்கு வழிகோலுகிறது. இணையதள செய்திகளையும், கட்செவி அஞ்சல் செய்திகளையும் "யாரோ அனுப்பினார்கள் நாங்கள் மறுபதிவு செய்தோம்' என்று கூறி தப்பித்துக் கொள்வதை சட்டப்படி தடுப்பதற்கு ஒரே வழி, மறுபதிவு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்துவதுதான்.
 கட்செவி அஞ்சலும் முகநூலும் மிக அதிக அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதும், இவற்றின் மூலம் கருத்துப் பரிமாற்றங்களை விட அதிகமாக வெறுப்புணர்வு பரிமாற்றங்கள் பரப்பப்படுகின்றன என்பதும் நிதர்சன உண்மை. கட்செவி அஞ்சல், சுட்டுரை, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குக் கட்டாயப் பதிவும் கட்டணமும் உறுதிப்படுத்தப்பட்டால், ஓரளவுக்கு அவதூறுப் பிரசாரமும் பொய்ப் பிரசாரமும் கட்டுக்குள் வரக்கூடும். தடையற்ற கருத்து சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.
 முந்தைய பிரதமர்களைப் போல அல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி தனது "மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் முக்கியமான கொள்கை முடிவுகள் குறித்தும், நடப்பு நிலை குறித்தும் மக்களிடம் நேரிடையாக உரையாற்றுகிறார். மக்களிடமிருந்து ஆலோசனைகளையும், தகவல்களையும் பெறுகிறார். கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராகவும், ஆதாரமில்லாமல் அப்பாவிகள் மீது நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதல்கள் குறித்தும், அதிகரித்துவரும் வன்முறை மனோபாவம் குறித்தும் பிரதமர் பேசவேண்டும். கடுமையான எச்சரிக்கையையும் விடுக்க வேண்டும். மாநில அரசுகளும் காவல் துறையினரும் பாரபட்சமில்லாமல் சட்டம் தனது கடமையைச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதைப் பிரதமர் தெரிவித்தாக வேண்டும்.
 வன்முறைக் கும்பல்கள் இந்திய அரசுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் சவால் விடுக்கின்றன. இதைத் தொடர அனுமதிப்பது இந்தியாவுக்கே இழுக்கு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com