இதனால் ஆயிற்றா? 

இந்தியா பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி 2017-இல் உலகின் 6-ஆவது பொருளாதாரமாக உயர்ந்திருக்கிறது.

இந்தியா பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி 2017-இல் உலகின் 6-ஆவது பொருளாதாரமாக உயர்ந்திருக்கிறது. உலகின் 6-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா அடைந்திருக்கும் இந்த வளர்ச்சி கடந்த கால் நூற்றாண்டு காலம் பல்வேறு ஆட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக சாத்தியமாகி இருக்கிறது. 
2.59 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.177 லட்சம் கோடி) ஜி.டி.பி. அதாவது மொத்த உற்பத்தி விகிதம் இந்தியாவின் வளர்ச்சி என்று உலக வங்கி அறிவித்திருக்கிறது. 2.58 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.176 லட்சம் கோடி) ஜி.டிபி.யை உடைய பிரான்ஸ் 7-ஆவது இடத்திற்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. பிரெக்ஸிட் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் இங்கிலாந்தின் இப்போதைய ஜி.டி.பி 2.62 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.179.5 லட்சம் கோடி). அதாவது, இந்தியாவை விட 25 மில்லியன் டாலர் (சுமார் ரூ.171.3 கோடி) அதிகம், அவ்வளவே.
உலகின் 6-ஆவது பெரிய பொருளாதாரமாக வளர்த்திருக்கிறோம் என்பதும், சர்வதேச அளவிலான பொருளாதார சக்தியாக இந்தியா மாறக்கூடும் என்பதும் மிகப்பெரிய சாதனைகள் என்பதில் ஐயப்பாடில்லை. அதே நேரத்தில், இந்த வளர்ச்சியின் பலன் சமச்சீராக அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்திருக்கிறதா என்கிற கேள்வி எழாமல் இல்லை. இந்தியாவின் அதிகரித்த மக்கள்தொகையின் காரணமாக தனி மனித ஜி.டி.பி. அளவில் இந்தியா உலக நாடுகளின் மத்தியில் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. 
மனித வளர்ச்சிக் குறியீட்டு அளவிலும் கூட, நம்மைவிட அளவிலும் மக்கள்தொகையிலும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கி இருக்கும் நாடுகளை விட இந்தியா பின்தங்கி இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. மனித வளர்ச்சிக் குறியீடு என்பது தாய்-சேய் நலம், சராசரி கல்வி அறிவு, குழந்தைகள் ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது. அந்த வகையில் பார்க்கும்போது இந்தியாவின் சராசரி மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.
ஒருபுறம், உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவில், மற்றொரு புறம் அடிப்படை வசதிகளே இல்லாத நிலையும், சுகாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையும் காணப்படுவது மிகப்பெரிய முரண். இந்தியாவில் ஏறத்தாழ 35.7% குழந்தைகள் எடை குறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோல அவர்களில் 38.4% பேர் வயதுக்கேற்ற உயரமில்லாதவர்களாகக் காணப்படுகிறார்கள். இதை ஸ்சன்டெட்' வளர்ச்சி என்று கூறுவார்கள். 15 முதல் 49 வயதுடைய பெண்களில், 22.9% பேர் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற எடையில்லாதவர்களாகவும், போதுமான உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்கள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கின்றன. காரணம், கால் நூற்றாண்டு கால பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகும் கூட இந்தியாவின் அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதாரப் பிரச்னைகளில் மிகப்பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான். 
மேலோட்டமான பொருளாதாரத்தில் ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருந்தாலும், அந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் ஊட்டச்சத்து இல்லாதவர்களாகவும், கல்வித்தரமற்றவர்களாகவும், வேலை வாய்ப்பு இல்லாதவர்களாகவும் இருந்தால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிரந்தர வளர்ச்சியாக இருக்காது. குறிப்பாக, சுகாதார அளவிலான வளர்ச்சி காணப்படாவிட்டால், பொருளாதார ரீதியாக ஏற்படும் வளர்ச்சி மாயையான வளர்ச்சியாகத்தான் இருக்க முடியும். 
2016-ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் ரத்த சோகையாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் விகிதம் 15.6%. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பாதிப்புகளை உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று நாம் பெருமிதம் அடைய முடியவில்லை.
பெரிய வளர்ச்சி அடைந்த பொருளாதாரங்களில் வளர்ச்சி என்பது கூடுமானவரை சமச்சீராகக் காணப்படுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும்கூட அடித்தட்டு மக்களும் எல்லா அடிப்படை வசதிகளும் பெற்றவர்களாக இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில், நாம் சமச்சீர் வளர்ச்சியை மாநிலங்களுக்கு இடையிலேயும், மாவட்டங்களுக்கு இடையிலேயும், மக்கள் மத்தியிலும் இருப்பதை உறுதி செய்யத் தவறிவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது.
எதற்கெடுத்தாலும் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவதில் அர்த்தமில்லைதான். இந்தியாவுக்கு இருப்பது போல சர்வாதிகார கம்யூனிச நாடான சீனாவுக்கு அரசியல் நிர்பந்தங்கள் கிடையாது. அங்கே இந்தியாவில் இருப்பது போல எந்தவிதமான தொழிலாளர் சட்டங்களும், பாதுகாப்புகளும் இல்லை. இந்தியாவைப் போல அரசியல் கட்சிகள் தேர்தலைக் குறிவைத்து வாக்குறுதிகளை வழங்குவதும், பொருளாதாரத்தை பாதிக்கும் முடிவுகளை எடுப்பதும் அங்கே இல்லை.
சீனாவுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளாவிட்டாலும்கூட பொருளாதார வளர்ச்சி குறித்த சுய சிந்தனையில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டாக வேண்டும். உலகின் 6-ஆவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறோம் என்பதிலும், உலகக் கோடீஸ்வரர்கள் பலர் இந்தியாவில் உருவாகி இருக்கிறார்கள் என்பதிலும், வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதிலும் பெருமிதம் கொள்வதில் தவறில்லை. ஆனால், அந்தப் பொருளாதார வளர்ச்சி அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அடிப்படை சுகாதார, மருத்துவ, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாட்டு வளர்ச்சியை ஏற்படுத்தாமல் போனால், அதனால் பயன் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com