ராணுவமா? ஜனநாயகமா?

இன்னும் இரண்டு வாரத்தில்

இன்னும் இரண்டு வாரத்தில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பாகிஸ்தான் ஒரு கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. தென்மேற்கு பாகிஸ்தானில் மக்சங் நகரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 128 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தேர்தல் பிரசாரத்திலும், பொதுக்கூட்டங்களிலும் குண்டுகள் வெடித்தவண்ணம் இருக்கின்றன. இதற்கிடையில்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அவரது மகளும் மருமகனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கும் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சியும் அதிகார மையம் என்று அழைக்கப்படும் ராணுவத்தால் முனைந்து ஓரங்கட்டப்படுகின்றன. இதுவரை நடந்த எந்தவொரு தேர்தலின் போதும் இதுபோன்ற மோசமான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. மறைமுக அரசியல் சூத்திரதாரிகளான, அதிகார மையம் என்று அழைக்கப்படும் ராணுவம் எப்படியாவது அமைய இருக்கின்ற நாடாளுமன்றம் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அமைய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவு மறைமுக சதிகள் பல அரங்கேற்றப்படுகின்றன.
இந்தத் தேர்தலைப் பொருத்தவரை ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ராம் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி திகழ்கிறது. பிடிஐ என்று அழைக்கப்படும் அந்தக் கட்சி மட்டுமல்லாமல், மேலும் சில சுயேச்சைகளும் ராணுவத்தின் மறைமுக ஆதரவைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. ராணுவத்தின் நோக்கம் எல்லாம், ஒன்று தனது கட்டளைக்கு பணிந்து நடக்கும் கட்சி ஆட்சியில் அமர வேண்டும். அல்லது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ராணுவத்தின் மறைமுக ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதுதான். மக்கள் செல்வாக்குள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஓரங்கட்டப்பட்டாக வேண்டும் என்பதுதான் ராணுவத்தின் குறிக்கோள்.
பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ தனது தேர்தல் பிரசாரத்தை கராச்சியில் தொடங்கியது முதல் ராணுவத்தின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டது. சிந்து மாகாணத்தில் அவருக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து பிலாவல் புட்டோ தெற்கு பஞ்சாப்புக்குள் நுழைந்தபோது காவல் துறையினர் பாதுகாப்புக் காரணம் கூறி அவரை தடுத்து நிறுத்தினர். அவர் செல்வாக்குடன் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது ராணுவத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.
ராணுவத்தின் நோக்கமெல்லாம் தனது கட்டுப்பாட்டில் இயங்க தயாராக இருக்கும் இம்ரான்கானின் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் தலைமையில், தீவிரவாத அமைப்புகளின் அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். 1970-களில் ராணுவத்தின் ஆதரவுடன் ஜுல்பிகர் அலி புட்டோவும் அன்றைய அதிபர் தளபதி அயூப்கானை இந்தியாவுடன் போர் தொடுக்கத் தூண்டினார். அயூப்கானின் முதுகில் குத்திவிட்டு, தானே பதவிக்கு வந்தார். பதவிக்கு வந்த பிறகு ராணுவத்தை எதிர்க்கத் தலைப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்டார் என்பது வரலாறு.
இதே வரலாறு மீண்டும் மீண்டும் தொடர்கிறது. பாகிஸ்தானில் ஒவ்வொரு தலைவரும் ராணுவத்தின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை வழிமொழிந்து ஆட்சிக்கு வருகிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு ராணுவத்தின் வழிகாட்டுதல் தவறானது என்பதை உணர்கிறார்கள். அன்றாட நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீட்டை அவர்கள் விரும்பாமல் போகும்போது மோதல் வலுக்கிறது. 
நவாஸ் ஷெரீப், பேநசீர் புட்டோ உள்ளிட்டோரும் ராணுவத்தின் உதவியுடன் ஆட்சிக்கு வந்தவர்கள்தான். ராணுவ தளபதிகளான அயூப்கானையும், பர்வேஸ் முஷாரப்பையும்கூட இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் ஆட்சிக்கு வந்த பிறகு ராணுவத்தின் போக்கில் செயல்பட்டால் பாகிஸ்தானின் வறுமை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை உணர்ந்தவர்கள். இந்தியாவுடனான உறவை சீரமைத்துக் கொள்வது, இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை கட்டுக்குள் கொண்டுவருவது, அரசு நிர்வாகத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் முனைப்பு காட்டுவது என்று அவர்கள் முனைய முற்படும்போது ராணுவம் அவர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் பதவியில் தொடர அனுமதிப்பதில்லை என்பதுதான் பாகிஸ்தானின் வரலாறும் பிரச்னையும். 
1980-இல் அன்றைய அதிபர் தளபதி ஜியா உல் ஹக் தனது அரசியல் வாரிசாக நவாஸ் ஷெரீப்பை தேர்ந்தெடுத்தார். நாடு கடத்தப்பட்டிருந்த பேநசீர் புட்டோ பாகிஸ்தானுக்கு திரும்பியபோது ராணுவம் நவாஸ் ஷெரீப்பைப் பயன்படுத்தி தொங்கு நாடாளுமன்றத்திற்கு வழிகோலியது. ராணுவத்தின் ஆசி இல்லாமல் பதவியில் தொடர முடியாது என்பதை உணர்ந்த பேநசீர் புட்டோ, காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளில் ராணுவத்தின் கட்டளைகளுக்கு கீழ்படிய முற்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் தன்னிச்சையாக செயல்பட முற்பட்டபோது அதன் விளைவாக உயிரிழக்க நேரிட்டது. அதேபோன்றதுதான் நவாஸ் ஷெரீப்பும் அவரது அரசியல் வாழ்க்கையும்.
அந்த வரிசையில் இம்ரான்கானும் இடம்பெறப் போகிறாரா, பாகிஸ்தானில் தேர்தல் முறையாக நடைபெறுமா, எதிர்பாராத அதிர்ச்சியாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கைகோத்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்குமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன், வாக்கெடுப்பு தினத்தை நோக்கி பாகிஸ்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com