வெற்றிக்குப் பின்னால்!

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி தொடங்கிய 21-ஆவது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு 32 அணிகள் தேர்வாகியிருந்தன. 
போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 16 அணிகள் வெளியேறின என்றால், அதற்கு அடுத்த சுற்றான நாக்அவுட்' ஆட்டங்களில் ஆர்ஜென்டீனா, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் வெளியேறின. காலிறுதி ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன்களான பிரேசில், உருகுவே உள்ளிட்டவையும் வெளியேற்றப்பட்டன.
இதற்கு முன்னால் உலகக் கோப்பையை வென்ற உருகுவே, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த முறை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வான ஒரே முன்னாள் உலகக் கோப்பைச் சாம்பியன் பிரான்ஸ் மட்டுமே. இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் மீண்டும் கோப்பையை வென்றிருக்கிறது. 
இந்த முறை உலகக் கோப்பையை பிரான்ஸ் வெல்லும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அனைவரது எதிர்பார்ப்பும் பிரேஸில், ஜெர்மனி, ஸ்பெயின், ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளின் மீதுதான் மையம் கொண்டிருந்தது. அதேபோல, இறுதிச் சுற்றுக்கு குரோஷியா தேர்வு பெற்றதும் முற்றிலும் எதிர்பாராத திருப்பம். இதுவரை இறுதிச் சுற்றை எட்டிய பிரேஸில், ஜெர்மனி, இத்தாலி, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், உருகுவே, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வரிசையில் இப்போது குரோஷியாவும் சேர்ந்து கொள்கிறது.
1958 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 17 வயதில் கோல் அடித்து சாதனை படைத்தவர் பிரேஸிலின் பீலே. அதற்கு பிறகு 19 வயதான பிரான்ஸின் கிலியான் மாபே இந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் கோல் அடித்ததன் மூலம் பதின் பருவத்தில் கோல் அடித்த அடுத்த வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். உலகக் கால்பந்தாட்ட சாதனையாளர்களான ஆர்ஜென்டீனாவின் மாரடோனா மற்றும் லியோனல் மெஸ்ஸி, பிரேஸிலின் டீவே மற்றும் ரொனால்டோ ஆகியோரின் வரிசையில் விரைவிலேயே மாபேவும் இணைவார் என்பது உறுதி.
1998-இல் பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியவர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ். அவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து மீண்டும் உலகக் கோப்பையை அந்த நாடு கைப்பற்ற வழிகோலியிருக்கிறார். இதற்கு முன்னால் பிரேஸிலைச் சேர்ந்த மரியோ ஸாகல்லோ 1958-இல் வீரராகவும் 1970-இல் பயிற்சியாளராகவும், ஜெர்மனியைச் சேர்ந்த பிரான்ஸ் பெக்கன்பர் 1974-இல் வீரராகவும், 1990-இல் பயிற்சியாளராகவும் இருந்து உலகக் கோப்பையை வென்றிருக்கிறார்கள்.
உலகக் கோப்பையை ஒன்றுக்கும் அதிகமான முறை பெற்ற அணியின் வரிசையில் ஆறாவதாக இணைகிறது பிரான்ஸ். இதற்கு முன்னால் பிரேஸில் (5), ஜெர்மனி (4), இத்தாலி (4), உருகுவே (2), ஆர்ஜென்டீனா (2) ஆகிய நாடுகள் ஒரு முறைக்கும் அதிகமாக உலகக் கோப்பையை வென்றிருக்கின்றன. 
உலகக் கோப்பை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல். 1930-இல் தொடங்கி இதுவரை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் கால்பந்து போட்டி 1942, 1946 ஆண்டுகளில் மட்டும் இரண்டாம் உலகப் போர் காரணமாக தடைபட்டிருந்தது. உலகிலேயே மிக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் விளையாட்டு என்பது மட்டுமல்ல, ஒலிம்பிக் பந்தயங்களைவிட அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் விளையாட்டும் கால்பந்துக்கான உலகக் கோப்பைதான். இதுவரை 17 நாடுகளில் நடைபெற்றிருக்கும் உலகக் கோப்பை போட்டி 2022-இல் கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது. 
1930 முதல் 1970 வரை உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற அணிக்குக் கோப்பை சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்தது. 1970-இல் மூன்றாவது முறையாக பிரேஸில் உலகக் கோப்பையை வென்றபோது நிரந்தரமாக அந்தக் கோப்பையை பிரேஸில் அணி வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அந்தக் கோப்பை 1983-இல் களவு போனது என்பது மட்டுமல்ல, அது திருடர்களால் உருக்கப்பட்டுவிட்டது என்பதுதான் சோகம்.
1970 முதல் உலகக் கோப்பை' என்று அறியப்படும் கால்பந்தாட்டத்துக்கான கோப்பை வடிவமைக்கப்பட்டது. 36 செ.மீட்டர் உயரமுள்ள 6.175 கிலோ எடையுள்ள இந்தக் கோப்பை வெற்றி பெற்ற அணிக்கு நிரந்தரமாகத் தரப்படுவதில்லை. வெற்றி பெற்ற அணி அந்தக் கோப்பையை வெற்றிக் கொண்டாட்டத்திற்கு சிறிது காலம் பயன்படுத்திவிட்டு திருப்பி அளித்துவிட வேண்டும். அதற்கு பதிலாக, தங்க முலாம் பூசிய மாதிரிக் கோப்பை மட்டுமே அந்த அணிக்கு வழங்கப்படும். 
உலகின் மிகப்பெரிய விளையாட்டுக் கொண்டாட்டம் முடிவுக்கு வந்திருக்கும்போது இன்னொரு பதிவையும் செய்தாக வேண்டும். பிரான்ஸ் 2018-க்கான உலகக் கோப்பையை வெற்றி பெற்றிருப்பதன் பின்னணியில் அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு நாடுகளை, மதங்களைப் பின்னணியாகக் கொண்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றுவிட்ட வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் கருப்பர் இனத்தவர்களும் இருக்கிறார்கள். குரோஷிய அணியில் முழுக்க முழுக்க ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த வெள்ளையர்கள் மட்டுமே பங்கு பெற்றிருந்தனர். பிரான்ஸ் அணியின் வெற்றி, மாறிவரும் ஐரோப்பிய நாடுகளின் போக்கையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பக்குவத்தையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com