ஆபத்தில் இந்திய வானம்!

கடந்த வாரம் பெங்களூரு விமான நிலையத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்தன.

கடந்த வாரம் பெங்களூரு விமான நிலையத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்தன. நல்ல வேளையாக விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கைக் கருவி அந்த விமானங்கள், ஒன்றோடு ஒன்று மோத இருப்பதற்கான எச்சரிக்கை ஒலியை எழுப்பியதால், விமானிகள் சுதாரித்துக்கொண்டு நடு வானில் நடக்க இருந்த விமானங்களின் மோதலைத் தவிர்த்தனர். இதுபோல நூலிழையில் விமான விபத்துகள் தவிர்க்கப்படும் சம்பவங்கள் இந்திய வானில் அடிக்கடி நிகழ்ந்துவருவது கவலை அளிக்கிறது. 
அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்துக்கு ஏற்றாற்போல, விமானங்களின் பாதுகாப்பு குறித்த தேவைகள் அதிகரிக்கப்படவில்லை. 2011-இல் இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 67 விமானங்கள் விண்ணை நோக்கிப் பறந்தன என்றால், இப்போது அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியைப் போலவே விமானங்கள் ஒன்றோடொன்று நெருங்குவது அல்லது மோதுவது போல பறப்பது உள்ளிட்ட சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம், விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கவனக்குறைவுதான்.
விமான நிலையங்களின் விமானப் போக்குவரத்தும் உலக நாடுகளுடனான தொடர்புக்கு மிகவும் இன்றியமையாதது. தேசிய அளவில் விமானத்துறை பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத அம்சமாகவும், வளர்ச்சியின் எடுத்துக்காட்டாகவும் அறியப்படுகிறது. இந்த நிலையில், விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகுமேயானால், அந்தத் துறையின் மீதான நம்பகத்தன்மை சிதையும் என்பது மட்டுமல்ல, அதன் விளைவாக அதனுடன் தொடர்புள்ள ஏனைய துறைகளும் பாதிக்கப்படும். 
நூலிழையில் தவிர்க்கப்படும் விமான விபத்துகளுக்கான அடிப்படைக் காரணம் இந்தியாவில் தேர்ச்சி பெற்ற விமானக் கட்டுப்பாட்டு ஊழியர்கள், அதிகாரிகள் போதிய அளவில் இல்லாமல் இருப்பதுதான். விமான நிலையங்களில் செயல்படும் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் செயல்படுகிறது. அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஏறத்தாழ பாதி அளவு ஊழியர்களுடன்தான் விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்படுகின்றன. அதற்குக் காரணம், விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தரப்படும் மிகக்குறைந்த ஊதியம். 
கடந்த இரண்டாண்டுகளாக விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை நியமிப்பதில் மிகுந்த முனைப்பு காட்டப்பட்டாலும், சிறப்புத் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் பணியில் சேர்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் இன்றைய நிலையில் ஏறத்தாழ 1,000 விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தேவை இருக்கிறது. போதாக் குறைக்கு ராடார்' உள்ளிட்ட அதிநவீன விமானக் கண்காணிப்பு கருவிகளின் தேவையும் அதிகரித்திருக்கிறது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படுவதால் சில பிரச்னைகள் எழுகின்றன. விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அதிக ஊதியம் வழங்கும்போது, அதேபோல தங்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டும் என்று, அரசின் ஏனைய விமானப் போக்குவரத்து ஊழியர்களும் கோரிக்கைகள் வைப்பார்கள் என்கிற அச்சத்தால், அவர்களுக்கு அதிக ஊதியம் தரப்படுவதில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும், வானத்தில் பறக்கும் விமானங்களையும், விமான ஓடு பாதையில் பயணிக்கும் விமானங்களையும் கண்காணித்து, அவற்றுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபடும் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியில் சேர பலரும் தயங்குகிறார்கள். 
அதிகரித்த விமான சேவையால் இந்திய வானத்தில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய பிரச்னை. இதை, விபத்து எதுவும் நேர்ந்துவிடாமல், கண்காணிப்பதற்கும், திறம்பட நிர்வகிப்பதற்கும் போதுமான அளவில் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இருந்தாக வேண்டும். அப்போதுதான் விமான நிலையத்திற்கும் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் விமான ஓட்டிகளுக்கும் இடையே தொடர்பு நிலைநாட்டப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். 
உடனடி நடவடிக்கையாக, இந்திய விமான நிலைய ஆணையத்திலிருந்து விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு பிரிக்கப்பட வேண்டும். விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பையும், விமானங்கள், விமான ஓட்டிகள் தொடர்பான உரிமங்கள் உட்பட எல்லாப் பிரச்னைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் கண்காணிக்கும் பொறுப்புடன் இயங்க வேண்டும். 
இந்திய விமான நிலைய ஆணையம் விமானங்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். அதன் மூலம் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு ஊழியர்களின் ஊதியம் ஒரு பிரச்னையாகத் தொடராது. தேர்ச்சியும், தகுதியும், திறமையும் பெற்ற விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டால், விமானங்கள் மற்றும் விமான சேவையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
இந்தியாவின் ஜி.டி.பி.யில் விமானப் போக்குவரத்தும், அது தொடர்பான சுற்றுலாவும் ஏறத்தாழ 2% பங்கு வகிக்கின்றன. ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. விமான சேவை நிறுவனங்களும், விமானங்களின் எண்ணிக்கையும், விமான நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், விமானப் பாதுகாப்பில் ஏற்படும் சிறிய குறைபாடு கூட மிகப்பெரிய விபத்துக்குக் காரணமாகிவிடும். விமானப் பாதுகாப்பு குறித்து அவசரமாகவும், முனைப்புடனும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com