2019-க்கான முன்னோட்டம்!

நேற்று தொடங்கியிருக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்காலத் கூட்டத் தொடர் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவு பெறும். கூட்டத் தொடரின் தொடக்கத்திலேயே தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரஸ் கட்சியும்

நேற்று தொடங்கியிருக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்காலத் கூட்டத் தொடர் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவு பெறும். கூட்டத் தொடரின் தொடக்கத்திலேயே தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் மனுவை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் அளித்தன. காங்கிரஸின் வற்புறுத்தலையும் மீறி மரபுப்படி முதலில் தரப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். உடனடியாக இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்க இருக்கிறது. 
கடந்த 15 ஆண்டுகளில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டிருப்பது இதுதான் முதல் தடவை. மக்களவையில் 273 உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவின் ஆட்சிக்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் ஆபத்து எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆட்சியின் பல்வேறு குறைகளையும், ஆட்சியின் மீதான விமர்சனங்களையும் முன்வைத்து இந்த விவாதத்தின் மூலம் அரசுக்கு தார்மிக ரீதியான நெருக்கடியை எதிர்க்கட்சிகளால் ஏற்படுத்த முடியும். அதேபோல, ஆளும்கட்சியும் தனது தரப்பு வாதங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாய்ப்பாக அமைய கூடும்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நீரவ் மோடி விவகாரம், ஆந்திரத்துக்கான சிறப்புத் தகுதி, இட ஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை அகற்றுவது, காவிரி பிரச்னை உள்ளிட்டவை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிப்போட ஆளுங்கட்சிக்கு வாய்ப்பாக அமைந்தன. இந்த முறை, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுங்கட்சி துணிந்து எதிர்கொள்ள முன்வந்திருப்பது, நரேந்திர மோúôடி அரசு இதை ஒரு வாய்ப்பாக மாற்ற நினைக்கிறதோ என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரஸும் தனித்தனியாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழியாமல் முதலிலேயே கலந்து பேசி ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைந்திருக்குமேயானால், ஆளுங்கட்சி இந்தத் தீர்மானத்தை எதிர்கொள்ள சற்று தயங்கியிருக்கக் கூடும். 
உச்சநீதிமன்றமே கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மனிதாபிமானமே இல்லாமல் நடத்தப்படும் கும்பல் கொலைகள்; வேளாண் இடர்; கடுமையான பெட்ரோல், டீசல் வரிகள்; வங்கிகளில் நடைபெறும் ஊழல்; வாராக்கடன் பிரச்னை; நிர்வாகக் குளறுபடிகள் என்று அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்கான வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பு எந்த அளவுக்கு பிளவுபட்டுக் கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் என்பதை நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம் வெளிப்படுத்தும். மாநிலங்கள் அளவில் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டு வரும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எந்த அளவுக்கு தேசிய அளவில் சாத்தியப்படும் என்பதற்கான முன்னோட்டத்தை இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஓரளவுக்கு தெளிவுபடுத்தும்.
எதிர்கொள்ளும் பல பிரச்னைகளை திசைதிருப்பி நரேந்திர மோடி அரசு நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத விஷயங்களை முன்னிலைப்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடக்கும் வணிக யுத்தம் எந்த அளவுக்கு இந்தியாவை பாதிக்கும்; சாதகமில்லாத இந்தச் சூழலில் சர்வதேசச் சந்தையில் இந்தியா பாதிக்கப்படாமல் இருக்க அரசு என்ன செய்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பின் குளறுபடிகளை அரசு எந்த அளவுக்கு சரி செய்திருக்கிறது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது விளக்கமளித்தாக வேண்டும். 
ஊழல் தடுப்புச் சட்டம், திவால் சட்டம், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் ஆகியவற்றில் ஏற்படுத்தியிருக்கும் திருத்தங்கள், அரசு இந்த பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்தே இருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டு என்று தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் உதவக்கூடும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு பதிலளிக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் ஆற்ற இருக்கும் உரையை உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகளை அகற்றவும், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தவும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் உதவக்கூடும். 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கான முன்னோட்டமாக இருக்கப்போகிறது தெலுங்கு தேசம் கொண்டுவந்திருக்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம். 
நரேந்திர மோடி அரசைப் பொருத்தவரை, ஆட்சிக்கு ஆபத்தில்லை என்றாலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் பாஜக எதிர்கொள்ளப் போகும் சவால். காங்கிரஸைப் பொருத்தவரை தன்னந்தனியாக பாஜகவை எதிர்கொள்ளும் சக்தியுடன் அந்த கட்சி இல்லை என்பதை உணர்ந்து ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அந்த பல வீனத்தை மாநில கட்சிகளான ஏனைய எதிர்க்கட்சிகள் உணர்ந்திப்பதுதான் காங்கிரஸின் மிகப்பெரிய பலவீனம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com