இதற்கு என்னதான் முடிவு?

அந்நிய சக்திகளால் எந்த அளவுக்கு இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்க முடியும் என்பதற்கும், நமது அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சுயநலத்தின் விளைவால் திறமைசாலிகள்

அந்நிய சக்திகளால் எந்த அளவுக்கு இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்க முடியும் என்பதற்கும், நமது அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சுயநலத்தின் விளைவால் திறமைசாலிகள் இந்தியாவில் எப்படியெல்லாம் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்கும் இஸ்ரோ' ஒற்றாடல் வழக்கு எடுத்துக்காட்டு. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்கு முன்னால் பின்னப்பட்ட சதிவலையில் சிக்கி, தங்களுடைய வாழ்க்கையை இழந்த இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகளின் நிலைமையை எண்ணிப்பார்க்கும்போது, இதுபோல எத்தனை எத்தனை சம்பவங்கள் நடந்தேறியிருக்கக்கூடும் என்கிற அச்சம் ஏற்படுகிறது.
இஸ்ரோ' என்று பரவலாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டு முக்கியமான மூத்த விஞ்ஞானிகள் 1994-இல் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு மாலத்தீவில் இருந்து வந்த ரஷிதா என்கிற பெண்மணியுடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ரஷிதாவும் அவரது நண்பர் பாசியா பசன் என்பவரும் இந்த இரண்டு இஸ்ரோ விஞ்ஞானிகளிடமிருந்து இந்தியாவின் கிரையோஜெனிக் விண்வெளித் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு ரகசியமாகப் பெற்றுத்தர முற்பட்டனர் என்பதுதான் அந்த வழக்கு. இந்த செய்தி வெளிவந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ந்தது.
இஸ்ரோ விஞ்ஞானிகளான நம்பி நாராயணனும் சசிகுமாரும் ஒரு மிகப்பெரிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இருவருமே மேலை நாடுகளின் உதவியில்லாமல் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில், தமிழகத்தின் மகேந்திரபுரியிலுள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஒற்றாடல் வழக்கு.
இந்த வழக்கின் பின்னணியில் கேரள மாநில அரசியல் சூழ்ச்சிகளும், காவல்துறையில் காணப்பட்ட பதவிப் போட்டியும் இருந்திருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. ஒற்றர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளான நம்பி நாராயணனும் சசிகுமாரும் காவல்துறையினரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனர். 
அரசியல் மாற்றம் ஏற்பட்டு கருணாகரன் முதல்வர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதும் பதவிப்போட்டியில் சில காவல்துறை உயர் அதிகாரிகள் தாங்கள் விரும்பியதை சாதித்துக் கொண்டதும் நடந்தேறியதைத் தொடர்ந்து அந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய புலனாய்வுத் துறை, அந்த வழக்குக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று நிராகரித்துவிட்டது. அதைத் தொடர்ந்து நீதி கேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, தான் நிரபராதி என்பதை ஐயம் திரிபற நிரூபித்திருக்கிறார் விஞ்ஞானி நம்பி நாராயணன்.
நம்பி நாராயணனுக்கும் சசிகுமாருக்கும் எதிராகப் புனையப்பட்ட ஒற்றாடல் வழக்குக்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறது. கிரையோஜெனிக் தொழில்நுட்ப ஆராய்ச்சி அடுத்த 19 ஆண்டுகளுக்கு இந்த வழக்கால் தடைபட்டது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், இந்தியா கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை உருவாக்குமேயானால் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிடம் மட்டுமே இருக்கும் தொழில்நுட்பம் வணிகரீதியாக பல ஆயிரம் கோடி ரூபாய் இழக்க நேரிடும். அதனால், இந்தியா கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை தானே உருவாக்கிக் கொள்வதை தடுக்க அமெரிக்காவின் சிஐஏ, இந்தியப் புலனாய்வு, காவல்துறையினர் மத்தியில் இருந்த தன்னுடைய கைக்கூலிகளின் மூலம் தடுக்க முற்பட்டிருக்கக் கூடும் என்கிற ஐயப்பாட்டை மறுத்துவிட முடியாது.
இந்திய அணுசக்தித் துறையின் முன்னோடியான ஹோமி பாபா 1966-இல் பிரான்ஸில் ஒரு விமான விபத்தில் தனது 56-ஆவது வயதில் கொல்லப்பட்டார். அப்போது அவர் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான கடைசிக் கட்டப் பணியில் இருந்தார். அவரது மறைவிற்குப் பிறகு 8 ஆண்டுகளுக்குப் பிறகுதான் போக்ரானில் இந்தியாவால் அணுசக்தி சோதனை நடத்த முடிந்தது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் விக்ரம் சாராபாய். இன்று இந்தியா பல்வேறு விண்வெளிக் கலங்களை தானே உருவாக்கி ஏவும் அளவுக்கு வளர்ந்துவிட்ட நிலைக்கு அவர்தான் காரணம். ஆனால், 1971-இல் தனது 52-ஆவது வயதில் நல்ல உடல் நலத்துடன் இருந்த விக்ரம் சாராபாய், திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். அவரது மரணம் இந்தியாவின் விண்வெளி தொலைநுட்ப சாதனைகளுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை போட்டு தாமதத்தை ஏற்படுத்தியது. 
விக்ரம் சாராபாயின் சீடர்களாகத் தங்களை கருதுபவர்கள்தான் பின்னாளில் மிகப்பெரிய விஞ்ஞானிகளாக அறியப்பட்ட சதீஷ் தவண், யு.ஆர். ராவ், யாஷ்பால், ஆர். நரசிம்மா, எஸ். சந்திரசேகர் உள்ளிட்டோர். இவர்கள் மட்டுமல்ல, இந்தப் பட்டியலில் நம்பி நாராயணன், சசிகுமார், அவர்களுடன் சமகாலத்தில் இஸ்ரோவில் பணியாற்றிய ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் ஆகியோரும் அடங்குவர்.
இஸ்ரோ ஒற்றாடல் வழக்கு இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. நம்பி நாராயணன் தளரவில்லை. கடைசி வரை மன உறுதியுடன் போராடிய நம்பி நாராயணன், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் பின்னப்பட்ட சதிவலையையும் அதன் விளைவுகளையும் நாளைய தலைமுறை தெரிந்து கொள்வதற்காக புத்தகமாகப் பதிவு செய்திருக்கிறார். 
இந்தியாவுக்கு எதிரான அந்நிய சக்திகளின் சதிவலைப்பின்னல்களுக்கு உதவி செய்து சிக்கிக்கொண்டு தேசத் துரோக குற்றம் புரிந்தவர்கள் பதவியில் தொடர்கிறார்கள். நம்பி நாராயணன் போன்றவர்கள் சித்திரவதையை அனுபவிக்கிறார்கள். இதற்கு என்னதான் முடிவு?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com