நழுவவிட்ட வாய்ப்பு!

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடையும் என்பது முன்கூட்டியே

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடையும் என்பது முன்கூட்டியே அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எதிர்க்கட்சிகள் கூடிப்பேசி, ஒருங்கிணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரவில்லை எனும்போதே, அது ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தான் முடியும் என்பது தெளிவாகி விட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுக் கிடக்கின்றன என்பதை வெளிப்படுத்தத் தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு என்பதால்தான், பாஜகவும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள முன்வந்தது.
 இந்தியா குடியரசாகி நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கிய பிறகு கொண்டுவரப்பட்ட 27-ஆவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 27 நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில் 15 தீர்மானங்கள் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக வெவ்வேறு காலகட்டங்களில் கொண்டுவரப்பட்டவை. இதற்கு முன்னால் பிரதமர்கள் லால்பகதூர் சாஸ்திரிக்கும், பி.வி. நரசிம்ம ராவுக்கும் எதிராக மூன்று முறைகளும், மொரார்ஜி தேசாய்க்கு எதிராக இரண்டு முறைகளும், ராஜீவ் காந்தி, வாஜ்பாயிக்கு எதிராக ஒரு முறையும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் மக்களவையில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
 கடந்த நான்கரை ஆண்டுகளில், முதன்முறையாக நாடாளுமன்றம் எதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறதோ அந்தப் பணியில் ஓரளவுக்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போதுதான் ஈடுபட்டது. ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தக்க ஆதாரங்களுடனும் புள்ளிவிவரங்களுடனும் ஆளுங்கட்சியும் விவாதத்தில் ஈடுபடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக, கூச்சலும் அமளியும் அமைதியாக செயல்படாத நிலைமையும்தான் காணப்படுகிறது. சில மரபு மீறல்களும், வழக்கமான கோஷம் எழுப்புதலும் இருந்தாலும்கூட, முழுமையாக ஒரு நாள் நாடாளுமன்றத்தின் மக்களவை விவாதத்தில் ஈடுபட்டது என்பதேகூட மிகப்பெரிய ஆறுதல்தான்.
 கடந்த நான்கரை ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க இதுபோல ஒரு வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்கவே இல்லை எனும் நிலையில், முறையான திட்டமிடலுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டிருக்க வேண்டாமா? உயர்மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளும், அரசின் அறிவிப்புகள் எதுவும் நிறைவேறாததும் முன்னிலைப்படுத்தப் படவில்லை. "பசுக் காவலர்கள்' எனும் பெயரில் ஆங்காங்கே இந்துத்துவ அமைப்புகள் நடத்தும் "கும்பல் கொலை' அரசுக்கு எதிரான பிரச்னையாக்கப்பட்டிருக்க வேண்டாமா? வங்கிகளில் வாராக்கடன், நடைமுறை சாத்தியமில்லாத பிரதமரின் அறிவிப்புகள், நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், பொருளாதாரக் குற்றவாளிகளின் தப்பியோட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் எழுப்பப்பட்டன என்றாலும்கூட, அவை வலிமையான வாதங்களுடன் முன்வைக்கப்படாததால், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் எடுபடாமல் போய்விட்டன.
 காங்கிரஸ் கட்சியின் தலைவராகி இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்க இருக்கும் நிலையில், ராகுல் காந்தி தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டது, சற்றும் எதிர்பாராதது. 2004 முதல் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களவை உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்திக்கு, அவையில் இல்லாதவர்கள் குறித்துப் பேசக்கூடாது என்பது கூடவா தெரியாமல் இருக்கிறது? தனது உரை முடிந்ததும், அவையின் மாண்பையும் மீறி பிரதமரை அவரே எதிர்பாராத விதத்தில் கட்டிப் பிடித்ததும், தனது கட்சிக்காரர்களைப் பார்த்துக் கண்ணடித்ததும் பொறுப்பற்றத்தனம் என்பதா, சிறுபிள்ளைத் தனம் என்பதா, முதிர்ச்சியின்மை என்பதா?
 ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதாலோ என்னவோ பெரும்பாலான உறுப்பினர்களுக்கு எப்படி உரையாற்ற வேண்டும் என்பதேகூடத் தெரியாமல் இருப்பது பளிச்சிட்டது. கடந்த நான்கரை ஆண்டுகளை கூச்சலிடுவதிலும், கூடிப் பிரிவதிலுமே கழித்துவிட்டவர்களுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த புரிதல் இல்லாமல் இருந்ததில் வியப்பில்லைதான். பெரும்பாலான உறுப்பினர்கள், நரேந்திர மோடி அரசின் தவறுகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி ஆட்சியின் பலவீனத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, தங்களது மாநிலப் பிரச்னைகள் குறித்தும், தொகுதிப் பிரச்னை குறித்தும் சாதாரண மக்களவைக் கூட்டத்தொடரில் உரையாற்றுவது போலப் பேசியது வேடிக்கையாக இருந்தது.
 பிரதமரின் உரையும், ஆளுங்கட்சித் தரப்பின் தன்னிலை விளக்கங்களும், இந்தியா எதிர்கொள்ளும் எந்தவொரு முக்கியமான பிரச்னை குறித்தும் முற்றிலும் தெளிவான எதிர்வினையாக இருக்கவில்லை. ஆண்டுதோறும் இரண்டு கோடி வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம், விவசாயிகள் பிரச்னை, பெட்ரோல் - டீசல் விலையேற்றம் குறித்தெல்லாம் தெளிவுபடுத்தும் விதமான விளக்கங்கள் எதுவும் அரசுத் தரப்பால் தரப்படவில்லை. பலவீனமான எதிர்க்கட்சிகள்தான் பிரதமரின் ஒரே பலம். அதன் விளைவுதான் 325 / 126 வெற்றி.
 வாய்ப்பை நழுவவிட்டன எதிர்க்கட்சிகள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com