நிறைவேறுமா மசோதாக்கள்?

மக்களவையில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம் முடிவடைந்துவிட்ட நிலையில்,

மக்களவையில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம் முடிவடைந்துவிட்ட நிலையில், இனிமேலாவது நாடாளுமன்றம் முறையாகச் செயல்பட்டு, தேங்கிக் கிடக்கும் ஏராளமான மசோதாக்களை குறைந்தபட்ச விவாதத்துடனாவது முறையாக நிறைவேற்ற முற்பட வேண்டும். 
ஜூலை 18-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. நாடாளுமன்றம் செயல்படப்போவது 18 நாள்கள் மட்டுமே. இதில் ஏற்கெனவே ஒரு நாள் நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. எஞ்சி இருக்கும் 17 நாள்களில் அரசு நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் ஏராளம் என்பதை மட்டுமல்ல, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயலின் அறிவிப்பின்படி மக்களவையில் 68 மசோதாக்களும், மாநிலங்களவையில் 40 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆறு அவசரச் சட்டங்கள் உடனடியாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த ஆறு சட்டங்களும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் போனால் அவை காலாவதியாகிவிடும். அவற்றில் ஒன்றான தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதா' கடந்த வியாழக்கிழமை மக்களவையின் ஒப்புதலைப் பெற்றுவிட்டிருக்கிறது. இது அல்லாமல், திவால் சட்ட மசோதா', உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீட்டு ஆணைய மசோதா', குற்றவியல் சட்ட மசோதா', ஹோமியோபதி மத்திய கவுன்சில் மசோதா', தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதா' ஆகியவை உடனடியாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உள் ஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தீவிரமாக இருக்கிறார். பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து கிடைப்பதற்கு வழிகோலும் 123-ஆவது திருத்த மசோதா கடந்த 2017 ஏப்ரல் மாதத்திலிருந்து காத்திருப்பில் இருக்கிறது. அதேபோல, ஆதிவாசிகள் சிலரை இணைப்பதற்கு வழிகோலும் பட்டியலினத்தவர்கள் ஆதிவாசிகள் சட்டத்திருத்த மசோதா 2016' நிறைவேற்றப்படாமல் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. 
வாடகைத் தாய் ஒழுங்காற்று மசோதா' நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறாமல் நவம்பர் 2016 முதல் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று, முஸ்லிம் பெண்களின் மண உரிமை பாதுகாப்பு மசோதா' மக்களவையால் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. முத்தலாக் தடுப்பு மசோதா என்று பரவலாக அறியப்படும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் சிறுபான்மை முஸ்லிம் சமூக வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தி, முஸ்லிம் பெண்களின் ஆதரவைப் பெற முடியும் என்று பா.ஜ.க. கருதுகிறது.
சாலை விபத்துகளில் ஒவ்வொரு மணி நேரத்திலும் 16 பேர் மரணமடைகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா' கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் முதல் நாடாளுமன்ற ஒப்புதலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அதேபோன்று, டிசம்பர் 2014 முதல் லோக் பால், லோக் அயுக்தா மசோதா', மே 2015 முதல் இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதா' ஆகியவையும் ஒப்புதல் பெறாமல் இருக்கின்றன. 
முதலீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கவும், தொழில்துறை செயல்பாட்டை எளிமைப்படுத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் சில முக்கியமான பொருளாதாரம் சார்ந்த சட்டங்கள் இயற்றப்பட்டாக வேண்டும். அது தொடர்பான சில மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்துக்கிடக்கின்றன. ஒப்பந்தத் தொழிலாளர் திருத்த மசோதா', ஊதியச் சட்ட மசோதா', தொழிற்சாலைகள் திருத்த மசோதா', சீட்டுக் கம்பெனிகள் மசோதா' உள்ளிட்ட மசோதாக்கள் இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் எஞ்சி இருக்கும் மிகக் குறைந்த கால அவகாசத்தில் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். வங்கி வாராக்கடன் அதிகரித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம், மாநில மின்வாரியங்கள் திவால் நிலையை எட்டியிருப்பதுதான். இதை எதிர்கொள்ளும் மசோதா ஒன்று கடந்த மூன்று ஆண்டுகளாக அவையின் ஒப்புதலுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் இணைக்கப்பட்டு, மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்கிற பலமான வதந்தி நிலவுகிறது. அது உண்மையாகுமானால், நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடர் 16-ஆவது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடராக மாறக்கூடும். 
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு 41 மசோதாக்களை நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்தும், இரண்டு மசோதாக்களைத்தான் நிறைவேற்ற முடிந்தது. அதுபோன்று, தர்னா அரசியலில் சிக்கி நாடாளுமன்ற செயல்பாடுகள் முடக்கப்படாமல் மழைக்காலக் கூட்டத் தொடரில் எஞ்சி இருக்கும் மசோதாக்களை நிறைவேற்றி, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் தங்களது ஜனநாயகக் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றிட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com