கைநழுவும் காண்டீபம்!

தகவல் பெறும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா 2018', நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காக' அரசால் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் அரசு கொண்டுவர எத்தனித்திருக்கும் 

தகவல் பெறும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா 2018', நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காக' அரசால் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் அரசு கொண்டுவர எத்தனித்திருக்கும் மாற்றங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படாத, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் இன்னோர் அரசுத் துறையாக மாற்றிவிடும். இந்த மாற்றங்களைக் கொண்டு வருவதைவிட, அந்தச் சட்டத்தையே அகற்றிவிடலாம்.
இப்போது இருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தலைமைத் தகவல் ஆணையரும், தகவல் ஆணையர்களும் ஐந்தாண்டுகள் பதவியில் இருப்பார்கள். அவர்களுக்கு, தேர்தல் ஆணையத்துக்குத் தரப்பட்டிருக்கும் அதே அந்தஸ்தும், ஊதியமும் வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையர்களும், தகவல் ஆணையர்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான அந்தஸ்தை உடையவர்கள்.
இந்தச் சிறப்பு அங்கீகாரங்களை அகற்றி, தகவல் ஆணையர்களை அரசுத்துறை அதிகாரிகளுக்கு இணையாக மாற்றுவதுதான், தகவல் பெறும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா 2018'-இன் நோக்கம். அதன்படி, தகவல் ஆணையர்களுக்குக் குறிப்பிட்ட பதவிக்காலம் அகற்றப்பட்டு, அரசு அதிகாரிகளைப்போல அவர்களை நியமிப்பதும், அவர்களுக்குப் பதவி மாற்றம் வழங்குவதும் ஆட்சியாளர்களின் உரிமையாக்கப்படுகிறது. அதேபோல, அவர்களது ஊதியமும் அரசால் நிர்ணயிக்கப்படுவதாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டால், அரசுக்கு சாதகமான, அரசின் ஏவலாளாக இருக்கும் அதிகாரிகள்தான் பதவியில் அமரவோ, தொடரவோ முடியும்.
முன்னாள் தலைமைத் தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லாவிலிருந்து, இப்போதைய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு வரை இதற்குத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் விடுப்பில் இருக்கும் நிலையில், ஜூலை 19-ஆம் தேதி தகவல் ஆணையர்களில் ஒருவரான ஸ்ரீதர் ஆச்சார்யலு, இது குறித்து விவாதிக்க இரண்டாவது இடத்தில் இருக்கும் மூத்த தகவல் ஆணையர் யஷோவர்தன் ஆசாதை உடனடியாகத் தகவல் ஆணையர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்ட வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அரசியல் சாசனப் பிரிவு 19(1) (அ) மிகவும் தெளிவாகவே மக்களுக்கு வாக்குரிமையையும், தகவல் பெறும் உரிமையையும் வழங்கி இருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் இந்த உரிமையை அரசியல் சாசன அங்கீகாரம் பெற்ற உரிமையாக நிலைநாட்டுகிறது. அரசியல் சாசனப் பிரிவு 19(1) (அ) வின் கீழ் தரப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டும் தகவல் ஆணையம், திருத்த மசோதாவில் கூறப்படுவதுபோல எப்படி அரசியல் சாசன அமைப்பாக இல்லாமல் இருக்க முடியும் என்று ஸ்ரீதர் ஆச்சார்யலு எழுப்பி இருக்கும் கேள்வி ஆணித்தரமானது.
ஏறத்தாழ கால் நூற்றாண்டு கால போராட்டத்துக்குப் பிறகு 2005-இல் முந்தைய மன்மோகன் சிங் அரசால் தகவல் பெறும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மாதங்களிலேயே 2002-இல், அதே மன்மோகன் சிங் அரசு இந்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சில திருத்தங்களை மேற்கொள்ள முயன்றது. பலத்த எதிர்ப்பு மேலிட்டதால், அரசு அந்த முயற்சியைக் கைவிட்டது.
அப்போது, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தில் ஒரு வாக்குறுதி அளித்தார். இந்தச் சட்டத்தில் எந்தவொரு மாற்றம் கொண்டுவரப்படுவதாக இருந்தாலும், அதை மக்கள் மன்றத்தில் பரவலான விவாதத்திற்கு உட்படுத்தி ஆலோசனைகள் பெற்று, நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகுதான் அரசு மேற்கொள்ளும் என்பதுதான் அந்த வாக்குறுதி. நாடாளுமன்றத்தில் பிரதமர் ஒருவர் அளித்திருக்கும் வாக்குறுதி என்பது கொள்கை முடிவு என்றுதான் கருதப்பட வேண்டும்.
மக்கள் மன்றத்தில் ஆலோசனை கோரவில்லை என்பது மட்டுமல்ல, ஸ்ரீதர் ஆச்சார்யலுவின் கோரிக்கையை வைத்துக் பார்க்கும்போது, தகவல் ஆணையர்களையே கூட அரசு கலந்தாலோசிக்கவில்லை என்றல்லவா தெரிகிறது. நேர்மையான அரசு, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் அரசு என்றெல்லாம் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் தகவல் பெறும் உரிமைச் சட்டதை வலுவிழக்கச் செய்ய முற்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
இந்தச் சட்டத்தின் நாலாவது பிரிவின்படி, அரசின் எல்லா தகவல்களும், முடிவுகளும் உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டாக வேண்டும். ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எவையெல்லாம் ரகசியம்', என்னவெல்லாம் பாதுகாக்கப்பட்டவை' என்பது குறித்த தெளிவான வழிமுறையோ, விளக்கமோ இல்லாததால் பல கேள்விகளுக்கு அதிகாரிகளால் விடையளிக்கப்படுவதில்லை. இப்படி இருக்கும் ஓட்டைகளையும், குறைபாடுகளையும் அகற்ற வேண்டிய அரசு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையே அல்லவா வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கிறது.
மாநிலங்களையில் அரசுக்குப் போதுமான பெரும்பான்மை இல்லாததாலும், அரசின் பதவிக் காலம் விரைவிலேயே முடிவுக்கு வர இருப்பதாலும் தகவல் பெறும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா-2018' நிறைவேறாது என்பது தற்காலிக ஆறுதல். ஆனால், ஆட்சியே மாறினாலும் காட்சிகள் மாறிவிடாது. நாம் விழிப்புடன் இல்லாமல் போனால், தகவல் பெறும் உரிமை என்கிற காண்டீபம் கைநழுவக் கூடும். விழிப்புடன் இருந்தாக வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com