ஓராண்டு கடந்தும்...

நரேந்திரமோடி அரசின் கடந்த நான்காண்டு சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒரு சாதனை 2017, மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டம்'. முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்

நரேந்திரமோடி அரசின் கடந்த நான்காண்டு சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒரு சாதனை 2017, மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டம்'. முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சியிலேயே மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டம் முன்மொழியப்பட்டது. பலமுறை அமைச்சரவை ஒப்புதலுக்கு வந்தும் கூட மீண்டும் மீண்டும் ஒத்திப் போடப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தச் சட்டம் துணிந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு வசதித்துறை இந்தியாவின் மிகப்பெரிய துறையாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மொத்த விற்று வரவு 180 பில்லியன் டாலரைத் தொடலாம் என்பதும் எதிர்பார்ப்பு. ஆனால், மிக அதிகமான விதிமுறை மீறல்களும், கண்காணிப்பின்மையும், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதும் இந்தத் துறையில்தான். நடுத்தரப் பிரிவினரின் சொந்த வீடு வாங்கும் ஆசையைப் பயன்படுத்தி வீட்டு வசதித்துறையில் பல்வேறு மோசடிகள் வெளிவரும் நிலையில், மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டம் வீடு வாங்குவோருக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும்கூட இன்னும் பல மாநிலங்களில் நடைமுறைக்கு வராமலிருக்கிறது என்பதுதான் சோகம்.
பல நிகழ்வுகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவோர் நிலத்தைக் கூட சட்டப்படி வாங்காமல் அறிவிப்புகளை செய்வது வழக்கமாகத் தொடர்கிறது. அதேபோல, நில உரிமையாளர்களுக்குக் குறைந்த அளவில் முன்பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்துகொண்டு வாடிக்கையாளர்களின் முன்பணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்க முற்படும் திடீர் நிறுவனங்கள் நாடு தழுவிய அளவில் உருவாகி இருக்கின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முறையாகத் தொழில் நடத்தும் குடியிருப்பு நிறுவனங்கள் மட்டுமே செயல்படுவதை உறுதிப்படுத்துவதுதான் மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டத்தின் நோக்கம்.
மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனமும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் திட்டத்தை மேற்கொண்டால், பொதுவெளியில், இணையத்தில் பதிவு செய்தாக வேண்டும். கட்டுமான காலத்தில் வாடிக்கையாளர்களின் புகார்களை கவனிப்பதற்கான தனிப் பிரிவு இயங்க வேண்டும். குடியிருப்புத் திட்டத்தைத் தொடங்கும் போது தங்களது திட்டத்தை மனைவணிக ஒழுங்காற்று ஆணையத்தில் பதிவு செய்தாக வேண்டும். 
திட்டத்தின் வரைபடம், திட்டம் குறித்த விளம்பரங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தரப்படும் மாதிரி விவரங்கள், அந்தத் திட்டத்திற்காகத் தரப்பட்ட அனுமதிகள் இவை குறித்த அனைத்து விவரங்களையும் ஒழுங்காற்று ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்தக் குடியிருப்புத் திட்டத்தில் வீடு வாங்க முற்படுவோர் எல்லா விவரங்களையும் இணையத்தில் பார்த்துத் தெரிந்து அந்த நிறுவனத்திடமிருந்து வீடு வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இது வழிகோலுகிறது.
மனை வணிகத்தில் ஈடுபடுவோரும் , வீட்டு வசதிக் குடியிருப்பு உள்ளிட்டத் திட்டங்களில் ஈடுபடுவோரும், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் முன் பணத்தில் 70 % தனியாக வங்கிக் கணக்குத் தொடங்கி, பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் பணத்தைப் பயன்படுத்தி புதிய திட்டங்களைத் தொடங்குவது தடுக்கப்படும். இதனால் முறையாகச் செயல்படும் சில நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன என்றாலும், பல போலி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது தடுக்கப்படும்.
மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டத்தின் இன்னொரு முக்கியமான அம்சம், குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்போ, வீடோ தரப்படாமல் போனால் அந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டிருப்பது. வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற வழிகோலப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகப் பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்பு நிறுவனங்கள் காலதாமதம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு வாடகை பணத்தை வழங்குவதை இப்போதே வாடிக்கையாக்கிவிட்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு பூனைக்கு மணி கட்டுவது போல நரேந்திர மோடி அரசு, மனை வணிக ஒழுங்காற்றுச் சட்டத்தின் மூலம் மனை வணிகத் துறையில் காணப்படும் குளறுபடிகளுக்குக் கடிவாளம் போட முற்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு கடந்தும் கூட மூன்றே மூன்று மாநிலங்களில் மட்டுமே மனைவணிக ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. 14 மாநிலங்கள் மட்டும்தான் ஒழுங்காற்று ஆணையத்திற்கான இணைய தளத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 20 மாநிலங்கள் மட்டுமே மனைவணிக ஒழுங்காற்றுச் சட்ட விதிகளை அறிவித்திருக்கின்றன. 
இன்னொன்றையும் பதிவு செய்தாக வேண்டும். மனை வணிகத் துறையில் காணப்படும் குறைபாடுகளுக்கும், தில்லுமுல்லுகளுக்கும் அடிப்படைக் காரணம், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் குடியிருப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்குப் பெறும் கையூட்டுதான் என்பது உலகறிந்த உண்மை. இதில் எந்தவொரு மாநிலமும் விதிவிலக்கல்ல.
மனைவணிக ஒழுங்காற்றுச் சட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி, துணிந்து குடியிருப்புகளில் முதலீடு செய்ய அவர்களைத் தூண்டும் என்பதில் ஐயப்பாடு இல்லை. தொடக்கத்தில் இதனால் மனை வணிகத் துறையில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் மூன்று நான்கு ஆண்டுகளில் இந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரத்தொடங்கிவிட்டால், அது பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கும் வழிகோலும் என்பது நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com