பாகிஸ்தானின் இடைக்கால அரசு!

பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' (நவாஸ்) கட்சியின் பதவிக்காலம் கடந்த மே 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' (நவாஸ்) கட்சியின் பதவிக்காலம் கடந்த மே 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் 25-ஆம் தேதி அங்கே பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவைப் போல அல்லாமல், பாகிஸ்தானில் இடைக்கால அரசின் மேற்பார்வையில்தான் தேர்தல் நடத்தப்படும். 
இடைக்காலப் பிரதமரை அல்லது முதல்வரை நியமிக்கும் அதிகாரம் முன்பு அதிபருக்குத்தான் இருந்தது. 2012-இல் செய்யப்பட்ட அரசியல் சாசனத் திருத்தத்திற்குப் பிறகு, பிரதமர் அல்லது முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் கலந்துபேசி இடைக்கால பிரதமரையோ, முதல்வரையோ முடிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. 
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நசீருல் முல்க் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசுக்கு, அதிபர் மம்னூன் ஹுசைன் இஸ்லாமாபாதில் கடந்த செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இரண்டாவது முறையாக மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்து, ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலுகிறது. பாகிஸ்தானில் இதுவரை எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரும் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை எனும் நிலையில், ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றம் 2013-க்குப் பிறகு மீண்டும் நடைபெற இருப்பது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு.
1950-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸ்வாத் மலைப்பகுதியின் மின்கோரா நகரத்தில் பிறந்தவர் நசீருல் முல்க். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் படித்துத் தேறி வழங்க்குரைஞரானார். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் இவர் அளித்திருக்கும் பல தீர்ப்புகள் பரபரப்பையும், பரவலான பாராட்டையும் இவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன.
2007-இல் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அவசர நிலையை பிரகடனம் செய்தபோது, அதற்குத் தடை உத்தரவு பிறப்பித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளில் முல்க்கும் ஒருவர். 2012-இல், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியை நீதிமன்ற அவமதிப்புக்காக இவர் வரவழைத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
2014-இல் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் - இ-இன்சாஃப் கட்சியும், தாஹிருல் காத்ரி என்கிற மதகுரு தலைமையிலான பாகிஸ்தான் அவாமி டெஹ்ரீக் என்கிற அமைப்பும் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலகக் கோரி மிகப்பெரிய பேரணியும் போராட்டமும் நடத்த முற்பட்டன. அவர்களுக்கு எதிராக ஜனநாயக விரோதமாக எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தவர் நீதிபதி நசீருல் முல்க்.
எல்லாப் பிரச்னைகளிலும் பாரபட்சமில்லாதவர்; நடுநிலையாகத் தீர்ப்பு வழங்குவார் என்கிற பரவலான பாராட்டுதலைப் பெற்றவர் இவர். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் 13 மாதங்கள் தலைமை நீதிபதியாக இருந்த நசீருல் முல்க், 2013-14-இல் தலைமைத் தேர்தல் ஆணையராகத் தற்காலிகப் பொறுப்பும் வகித்தவர். இவர் இடைக்காலப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டதில் வியப்பில்லை.
நீதிபதி முல்க் தலைமையிலான இடைக்கால அரசு பல்வேறு இடர்பாடுகளை அடுத்த இரண்டு மாதங்கள் எதிர்கொண்டாக வேண்டும். சர்வதேச தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக பாகிஸ்தான் விரைவிலேயே அறிவிக்கப்பட இருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருக்கிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் நெருகடியை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அரசு, வேறு வழி தெரியாமல் சீனாவிடம் 2 பில்லியன் டாலர் (சுமார் 13,400 கோடி) கடன் கேட்டிருக்கிறது. அதன் மூலம்தான், பாகிஸ்தான் வாங்கியிருக்கும் சர்வதேச கடன்களுக்கான தவணைத் தொகைகளைக் குறித்த நேரத்தில் கட்ட முடியும் என்கிற இக்கட்டான நிலைமை.
பாகிஸ்தான் எதிர்கொள்ளும் இன்னொரு மிகப்பெரிய பிரச்னை உள்ளூர் தீவிரவாதம். தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீஃபுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையைத் தொடர்ந்து அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப, சில தீவிரவாத இயக்கங்கள் அரசியல் களத்தில் இறங்க முற்பட்டிருக்கின்றன. தீவிரவாதி ஹபீஸ் சயீதின் மில்லி முஸ்லிம் லீக்' அரசியல் கட்சி அந்தஸ்து கோரி நீதிமன்றத்தை அணுகி இருக்கிறது. தீவிரவாதக் குழுக்கள் அரசியல் கட்சிகளாக மாறும்போது, முறையான அரசியல் கட்சிகள் ஓரங்கட்டப்படும் ஆபத்து ஏற்படக்கூடும். 
தேர்தலின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது இடைக்கால பிரதமர் நசீருல் முல்குக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. கடந்த மாதம் கராச்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அஹ்சன் இக்பால் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும்போது குறிப்பாக, தீவிரவாத இயக்கங்கள் அரசியலில் இறங்கும் நிலையில், வன்முறை மிகப்பெரிய தலைவலியாக உருவெடுக்கக்கூடும்.
நீதிபதி நசீருல் முல்க் தலைமையிலான இடைக்கால அரசுக்கு உள்நாட்டு ஆதரவு மட்டுமே போதாது. பாகிஸ்தானில் முறையாகத் தேர்தல் நடத்தப்பட சர்வதேச நாடுகள் உதவ வேண்டும். பாகிஸ்தானைத் தொடர்ந்து பூடான், மாலத்தீவு, வங்கதேசம், இந்தியா, ஆப்கானிஸ்தான் என்று வரிசையாகப் பல நாடுகள் பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கின்றன. அண்டை நாடுகளில் ஜனநாயகம் தழைத்து, தெற்காசியாவில் அமைதி நிலவினால்தான் இந்தியா நிம்மதியாக இருக்க முடியும் என்பதால், இந்தத் தேர்தலில் நமக்கும் அக்கறை உண்டு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com