கரும்பின் கசப்பு!

விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை எல்லா ஆளும் கட்சிகளுமே தேர்தல் தோல்விக்குப் பிறகுதான் உணர்கின்றன. இதற்கு பாஜகவும் விதிவிலக்கல்ல

விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை எல்லா ஆளும் கட்சிகளுமே தேர்தல் தோல்விக்குப் பிறகுதான் உணர்கின்றன. இதற்கு பாஜகவும் விதிவிலக்கல்ல. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கரும்பு விவசாயிகளின் இடர்ப்பாடு தீர கூடுதல் சர்க்கரை கையிருப்பை ஏற்படுத்தவும், எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் இழப்பைக் குறைப்பதற்கு குறைந்தபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கவும் ரூ.8,500 கோடி ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது. 
உற்பத்தியாகும் கரும்பைப் பயன்படுத்தி எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க ஆலைகளுக்கு ரூ.4,400 கோடி கடனுதவி, 30 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பு, கிலோ ஒன்றுக்கு ரூ.29 குறைந்தபட்ச விற்பனை விலை என்று அறிவித்திருக்கிறது. இவையெல்லாம் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கித் தொகையான ரூ.22,000 கோடியை எதிர்கொள்ள ஆலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உதவி.
கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த 2017-18 சாகுபடி ஆண்டில் இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவில் 3.15 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவின் வருடாந்தர உள்நாட்டுத் தேவை 2.5 கோடி டன் மட்டுமே. உற்பத்தி அதிகரித்து, சர்க்கரையின் விலை உற்பத்திச் செலவை விட குறைந்துவிட்டது. அதனால் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு அவர்கள் வழங்கிய கரும்புக்கான பணத்தைக் கொடுக்கவில்லை. கரும்பு விவசாயிகளின் இடர்ப்பாடுக்கு இதுதான் மிக முக்கியமான காரணம். 
கடந்த மாதம் தேர்தலுக்கு முன்னால் மத்திய அமைச்சரவை 2017-18 -இல் அரைக்கப்பட்ட கரும்புக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5.50 ஆலைகளுக்கு வழங்க அனுமதித்தது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான, லாபகரமான விலை வழங்கப்பட்டு, ஆலைகள் அவர்களுக்குத் தரவேண்டிய பாக்கித் தொகையை வழங்கும் என்று அரசு எதிர்பார்த்தது. சரக்கு சேவை வரிக் குழுவும் (ஜி.எஸ்.டி) ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.3 கூடுதல் வரிவிதித்து அந்தப் பணத்தை கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசித்தது. அதேபோல சர்க்கரை ஆலைகளுடன் இணைந்த எரி சாராய தொழிற்சாலைகள் தயாரிக்கும் எத்தனாலுக்கான 18% வரியைக் குறைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
அரசு மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் கரும்பு உற்பத்தியாளர்களுக்கோ, கரும்பு ஆலைகளின் அடிப்படை பிரச்னைகளுக்கோ தீர்வு வழங்கவில்லை. கரும்பு விவசாயிகள் சாகுபடிப் பரப்பை அதிகரிப்பதும், ஆலைகள் அதிகமாக சர்க்கரையை உற்பத்தி செய்வதும், விலை எதிர்பாராத வீழ்ச்சியை சந்திப்பதும் வழக்கமாகிவிட்டது. 
கடந்த ஆறு மாதங்களில் கிலோ ஒன்றுக்கு ரூ.36 ரூ.37-ஆக இருந்த சர்க்கரையின் விலை தற்போது ரூ.26, ரூ.27-ஆக குறைந்திருக்கிறது. சர்க்கரையின் சராசரி உற்பத்தியின் மதிப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.32. இப்போது ஆலைகள் விற்கும் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.26 முதல் ரூ.28 வரை. 3.15 கோடி டன் உற்பத்தியில் கிலோ ஒன்றுக்கு ரூ.4 இழப்பு என்றால், மொத்த இழப்பு எந்த அளவில் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
சர்வதேச அளவிலும் சர்க்கரை விலை சரிந்திருக்கிறது. இந்தியாவில் விற்கும் விலையை விட சர்வதேசச் சந்தையில் குறைந்த விலைக்கு சர்க்கரை விற்கப்படுவதால், ஏற்றுமதிக்கான வாய்ப்பும் இல்லை. 
இதுபோல சர்க்கரை உற்பத்தி அதிகரித்து, விலை குறைந்து கரும்பு விவசாயிகளுக்கு முறையாக அவர்கள் வழங்கும் கரும்புக்கு பணம் தரப்படாமல் போகும்போது, மறு ஆண்டில் அவர்களின் கரும்பு சாகுபடிப் பரப்பு குறைகிறது. அதன் விளைவாக ஆலைகளுக்குப் போதிய கரும்பு உற்பத்திக்குக் கிடைக்காமல் சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை திடீரென்று உயர்கிறது. சர்க்கரை விலை அதிகரிக்கும்போது பொதுமக்கள் நலன் கருதி அரசு தலையிடுகிறது. சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை, வரியில்லாமல் இறக்குமதி என்று அரசு வாடிக்கையாளர்களின் (வாக்காளர்களின்) நலன் கருதி சில முடிவுகளை எடுக்க முற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகக் கரும்பு உற்பத்தியாளர் நலன், பொதுமக்கள் நலன் என்று மாறி மாறி அந்தந்த ஆண்டு உற்பத்திக்கு ஏற்ப அரசு எடுக்கும் முடிவுகளால் கரும்பு விவசாயமும் சர்க்கரை உற்பத்தியும் பாதிப்புகளைத்தான் எதிர்கொள்கின்றனவே தவிர, எந்தவிதத் தீர்வும் இந்தப் பிரச்னைக்கு ஏற்படவில்லை. கரும்பு விவசாயிகளின் நலனையும், சர்க்கரை ஆலைகளின் நலனையும் பாதுகாக்க வேண்டுமானால், முதலில் மத்திய-மாநில அரசுகள் கரும்புக்கான விலையையும், சர்க்கரைக்கான விலையையும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும். 
இன்ன ஆலைகளுக்கு இன்னின்ன பகுதிகளில் விளையும் கரும்புகள் தரப்பட வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடு அகற்றப்பட வேண்டும். கரும்பு விவசாயிக்கு, தான் விரும்பும் சர்க்கரை ஆலைக்கு கரும்பை வழங்கும் சுதந்திரம் தரப்பட்டால் அந்த ஆலைகளுடன் சாகுபடிக்கு முன்பே ஒப்பந்தம் மேற்கொள்ளும் வசதி விவசாயிக்குக் கிடைக்கும். தங்களுக்குக் கட்டுப்பாடு இல்லாமல் கரும்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆலைகள் விவசாயிகளுக்கு முன்பணம் வழங்கி ஒப்பந்தம் செய்து கொண்டு தேவைக்கேற்ப கரும்பு உற்பத்தியை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். இது குறித்து அரசு ஏன் சிந்திப்பதில்லை என்று தெரியவில்லை. 
அதேபோல சர்க்கரை ஆலைகளின் மொலாசஸ் விற்பனைக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? சர்க்கரை ஆலைகள் தங்கள் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்துகொண்டு மொலாசஸ் விற்பனையில் ஈடுபட அனுமதித்தாலே போதும், கரும்பு விவசாயிகளுக்குத் தரப்பட வேண்டிய நிலுவைத் தொகை விரைவிலேயே வழங்கப்பட்டுவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com