நெகிழி சவால்!

ஒரு முறை மட்டுமே

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாடு வரும் 2022}ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்திலும் மக்காத நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அரசும் அறிவித்திருக்கிறது. இந்தத் தடை அடுத்த ஆண்டு ஜனவரி 1}ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருக்கிறார். 
நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய முந்தைய ஜெயலலிதா அரசால் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்த வல்லுநர் குழு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத நெகிழிப் பொருள்களைத் தடை செய்யவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலை, பாக்கு மட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் பரிந்துரை வழங்கியிருந்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில்தான், அடுத்த ஆண்டு முதல் மக்காத, ஒருமுறை மட்டுமே பயன்பாட்டுக்கு உதவும் நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
நெகிழித் தாள்கள், நெகிழித் தட்டுகள், தேநீர் மற்றும் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், நெகிழி உறிஞ்சிக் குழல், வணிக வளாகங்களில் வழங்கப்படும் நெகிழிக் கைப்பைகள், நெகிழிக் கொடிகள் ஆகியவை தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களில் குறிப்பிடத்தக்கவை. இந்தப் பொருள்களை தயாரிப்பது, விற்பனை செய்வது, சேமித்து வைப்பது, பயன்படுத்துவது ஆகிய அனைத்துமே தடை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், அன்றாடம் பயன்படுத்தப்படும் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருள்களுக்கான நெகிழி உறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோல நெகிழிக்குத் தடை விதிப்பது என்பது புதிதொன்றுமல்ல. இந்தியாவில் 18 மாநிலங்களில் இந்த முயற்சி வெற்றியடையவில்லை என்றாலும் அது மேற்கொள்ளப்பட்டுவிட்டது. தமிழகத்திலேயேகூட, 2002}இல் ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது நெகிழிக்குத் தடை விதிக்க முற்பட்டார். ஆனால் அதை கடுமையான நடவடிக்கைகள் மூலம் நடைமுறைப்படுத்தாததால் செயல்பாட்டுக்கு வரவில்லை. 2015}இல் மீண்டும் ஜெயலலிதா அரசு நெகிழிக்குத் தடை விதித்து உத்தரவு போட்டது. நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அமைத்து ஆலோசனை கோரியது.
அகில இந்திய அளவில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 40,000 டன் நெகிழிக் கழிவு ஏற்படுகிறது. கடந்த 2015}இல் வெறும் 15,342 டன்னாக இருந்தது, கடந்த ஐந்து ஆண்டுகளில் 160 சதவீதம் அதிகரித்து இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவாகியிருக்கிறது. அடுத்த 2030}க்குள் இந்தியாவில் ஆண்டொன்றுக்கான நெகிழிக் கழிவு 16.5 கோடி டன் என்றும், 2050}க்குள் அதுவே 45 கோடி டன்னாக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலேயே தில்லியில்தான் மிக அதிகமான நெகிழிக் கழிவு உருவாகிறது. அதைத் தொடர்ந்து சென்னையிலும், கொல்கத்தாவிலும். உலகளாவிய அளவில் 22% பயன்படுத்தப்பட்ட நெகிழிக் கழிவுதான் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது என்றால், இந்தியாவில் ஏறத்தாழ 60% நெகிழிக் கழிவு மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இவற்றில் 70% நெகிழிகள் அங்கீகரிக்கப்பட்ட நெகிழி மறுசுழற்சி நிறுவனங்களால் கையாளப்படுகின்றன. 
தமிழகத்தில் மட்டும் 8,000 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளும் 10,000 அனுமதி பெறாத தொழிற்சாலைகளும் நெகிழி மறுசுழற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இவற்றில் நேரடியாக இரண்டு லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக நான்கு லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். தமிழகத்தின் நெகிழி மறுசுழற்சி தொழிலின் ஆண்டு விற்று வருவாய் ரூ.2,000 கோடிக்கும் அதிகம்.
2002}இல் நீலகிரி மாவட்ட ஆட்சியராக சுப்ரியா சாஹு இருந்தபோது துணிந்து அந்த மாவட்டத்தை நெகிழியற்ற மாவட்டமாக மாற்றக் கடும் முயற்சிகளை எடுத்தார். முழுமையான வெற்றி பெறவில்லை என்றாலும்கூட, இப்போதும்கூட தமிழகத்திலேயே மிகக்குறைந்த நெகிழிப் பயன்பாடு நீலகிரியில்தான் என்பதிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் முனைப்புடன் செயல்பாட்டால் நெகிழிப் பயன்பாட்டை கணிசமாகக் குறைக்க முடியும் என்பது தெரிகிறது.
மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழித் துகள்களுக்கு மத்திய அரசு 18% ஜிஎஸ்டி வரிவிதிப்பு செய்தது மிகப்பெரிய தவறு. குப்பைகளிலிருந்து நெகிழிகளைப் பிரித்தெடுத்து அவற்றை சேகரித்து மொத்த விற்பனையாளர்கள் மூலம் நெகிழி மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் குப்பை பொறுக்குபவர்கள். இப்போது 18% ஜிஎஸ்டி வரியால் பல நெகிழி மறுசுழற்சி ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. இதன் விளைவாக, நெகிழிக் கழிவுகளின் அளவு மிக அதிகமாக இந்தியா முழுவதும் அதிகரிக்கப் போகிறது. 
மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பொருள்கள் குறித்து தீவிரமான சிந்தனை மேற்கொள்ளப்பட்டு அவற்றை அழிப்பதற்கோ, மறு பயன்பாடு செய்வதற்கோ உடனடி முயற்சி மேற்கொள்ளாவிட்டால், வளர்ச்சியடைந்த உலக நாடுகளைப் போலவே நாமும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருக்கிறோம்.
மனித குலத்தின் சீரழிவுக்கு நெகிழிப் பயன்பாடும், நெகிழிக் கழிவுகளும் வழிகோலுகின்றன என்கிற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமல்ல, ஊடகங்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் உண்டு. இனியும் தாமதம் தகாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com