மன அழுத்தம் எனும் விடுகதை!

பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட மன அழுத்தம், எதிர்பார்ப்பு ஆகியவை இந்தியாவில் மிக அதிக அளவில் குழந்தைகளிடம் காணப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட மன அழுத்தம், எதிர்பார்ப்பு ஆகியவை இந்தியாவில் மிக அதிக அளவில் குழந்தைகளிடம் காணப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் 13 வயது முதல் 19 வயது வரையுள்ள பிரிவினரில் நான்கு பேரில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தேசிய குற்ற ஆவணத் துறையின் 2015-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிகிறது.
உலகளாவிய அளவில் 20 பேருக்கு ஒருவர் ஏதாவது ஒரு விதத்தில் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார். தீவிரமான மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலர் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் அவர்களது மன அழுத்தத்தையோ, மன நோயையோ புரிந்துகொள்ளாமல் அது அவரது பிறவிக் குணம் என்று கருதி ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால், மன நோய் குறித்த பிரச்னைகளுக்கு புதியதொரு அணுகுமுறை தேவைப்படுகிறது. 
இது ஏதோ புதிய பிரச்னை என்று நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகத்தான் இருக்கும். பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் இளைஞர்களும் எப்போதுமே மன நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். பெரியவர்கள் மத்தியிலேயே மன நோய்க்கு முறையான சிகிச்சை மேற்கொள்வது தவிர்க்கப்படும்போது குழந்தைகள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் காணப்படுவது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதில் வியப்பில்லை. இந்தப் பிரச்னையை புரிதலுடன் ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம்தான் குழந்தைகளிடம் காணப்படும் மன அழுத்தம் தொடர்பான வெளிப்பாடுகளை புரிந்துகொள்ள இயலாமல் போகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை சிறார்கள் மத்தியில் காணப்படும் மன அழுத்தத்துக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. பள்ளிச்சூழலில் காணப்படும் அதிகரித்த போட்டி, அவர்களது வயதுக்கும் புரிதலுக்கும் மீறிய கல்விச்சுமை, அதிக மதிப்பெண் பெறுவதற்கு பெற்றோரால் தரப்படும் அழுத்தம், சிதைந்த குடும்பச்சூழல், உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் குழந்தைகள் மீது தொடுக்கப்படும் வன்முறை உள்ளிட்டவை குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அவர்களுக்கு ஆறுதல் அளித்து பாதுகாக்க வேண்டிய பெற்றோர் கூச்ச உணர்வு காரணமாகவும், வெட்க உணர்வு காரணத்தாலும் தங்கள் குழந்தைகளின் மன அழுத்தத்துக்கு தீர்வு காண முற்படுவதில்லை.
இந்தியாவில் 3.4 லட்சம் பேருக்கு ஒரு மன நோய் மருத்துவர் என்கிற நிலைதான் காணப்படுகிறது. மன நோய் மருத்துவமனைகளும் சரி, அரசு பொது மருத்துவமனைகளைப்போல போதிய கவனம் பெறுவதில்லை. மன நோய் மருத்துவ நிலையங்களில் உள்ள ஊழியர்களும் நோயாளிகளை மனிதர்களாக நடத்தாமல் மிகவும் கொடூரமாக நடத்தும் சம்பவங்கள் பல வெளிவந்தும்கூட அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. அதனால், மன நோய் மருத்துவ நிலையங்களில் குடும்பங்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் மட்டுமே சேர்க்கப்படுகிறார்கள்.
2016-இல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் மனநல மருத்துவச் சட்டம் 2017' நரேந்திர மோடி அரசின் குறிப்பிடத்தக்க வரவேற்புக்குரிய சாதனைகளில் ஒன்று. இந்தச் சட்டத்தின் மூலம் மன நோய் மருத்துவம் என்பது சமுதாய நாணுறு சூழ்நிலையிலிருந்து நோயாளிகளைப் பாதுகாக்கிறது. இதன் முதல் கட்டமாக மன நோய் மருத்துவம், பொது மருத்துவமனையுடன் இணைக்கப்படுகிறது. 
மன நோய் குறித்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்தி மன நோயாளிகளுக்கு சில உரிமைகளை வழங்குகிறது இந்தச் சட்டம். தாங்கள் எப்படி கவனிக்கப்பட வேண்டும், தங்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மன நோயாளிகளுக்குத் தரப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கிரிமினல் குற்றமாக இருந்த தற்கொலை முயற்சி இந்தச் சட்டத்தால் குற்றவியல் சட்டத்திலிருந்து அகற்றப்படுகிறது. 
ஒருசில மாநிலங்களில் இப்போதும்கூட மன நோய் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைந்தால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், சொத்துத் தகராறில் குடும்பத்தினரே சிலரை மன நோயாளியாக்கி அவர்களைக் கொன்று விடும் வழக்கம் காணப்படுவது. இந்தச் சட்டத்தின் மூலம் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, மறுவாழ்வு ஆகியவற்றுக்கு வழிகோலியிருப்பதுடன் மன நோய் மருத்துவத்துக்கான கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கும் வழிகோலப்பட்டிருக்கிறது. 
இந்தியாவிலுள்ள பல மருத்துவக் கல்லூரிகளில், மன நோய் மருத்துவத்திற்கான பிரிவு இல்லாமல் இருக்கும் அவலம் காணப்படுகிறது. மன நோய் மருத்துவத்துக்கான செலவும் உளவியல் ஆலோசனைக்கான செலவும் அதிகமாகவே காணப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் சட்டம் தீர்வாக இருக்க முடியாது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் புரிதல் மூலமும் அக்கறை மூலமும் மட்டும்தான் குணமடைய முடியும். 
மன அழுத்தம் என்பது ஒருவகையில் விடுகதைக்கு விடைதேடுவது போலத்தான். உளவியல் நிபுணர்களால்தான் விடைகாண முடியும். அப்படி இருக்கும் நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் கட்டாயமாகக் குழந்தைகளின், மாணவர்களின் மன அழுத்தத்துக்கு தீர்வளிக்கும் உளவியல் நிபுணர்களின் பிரிவு ஒன்று அரசால் நியமிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com