இரப்பது குற்றமல்ல!

சட்டத்தின் பார்வையில் பிச்சைக்காரர்களுக்கும் திருடர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்தியாவில் 20 மாநிலங்களிலும் இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் பிச்சை எடுப்பது என்பது கிரிமினல் குற்றம்.

சட்டத்தின் பார்வையில் பிச்சைக்காரர்களுக்கும் திருடர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்தியாவில் 20 மாநிலங்களிலும் இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் பிச்சை எடுப்பது என்பது கிரிமினல் குற்றம். கர்நாடகத்திலும் அஸ்ஸாமிலும் சாதுக்களும் சந்நியாசிகளும் பிச்சைக்காரர்கள் என்கின்ற வரம்பிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் அவர்கள் மட்டுமல்ல, தெருக்கூத்தில் ஈடுபடுவோர், தெருப்பாடகர்கள், கழைக் கூத்தாடிகள், தெருவில் மந்திரவாதத்தில் ஈடுபட்டுப் பிழைப்பவர்கள் ஆகியோரும் பிச்சைக்காரர்கள் என்கின்ற வரைமுறையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பல மாநிலங்களில் பிச்சை எடுப்பது என்பது பிணையில் வெளிவர முடியாத கிரிமினல் குற்றம். காவல் துறையினர் அவர்களைக் குற்றவாளிகள் என்று முதல் கட்ட விசாரணையிலேயே தீர்மானித்து, குற்றம் பதிவு செய்துவிடலாம். மூன்று முறைக்கு மேல் காவல் துறையினரால் பிச்சை எடுத்த குற்றத்துக்காகக் கைது செய்யப்படுபவர்கள், அரசு பரிந்துரைக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பத்தாண்டு காலம் தண்டனை ஊழியமும், இரண்டாண்டு கால சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்கிறது சட்டம். 
பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டங்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டாலும் கூட அந்தச் சட்டங்களின் பல்வேறு கூறுகள் மிகவும் கடுமையானவை. அந்தச் சட்டத்தின் அடிப்படை, உச்சகட்ட வறுமை தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, அதிலிருந்து ஒருவர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதல்ல. பெரும்பாலான பிச்சைக்காரர்கள் பிழைப்புக்கு வேறு வழியில்லாமல் கையேந்தி வயிற்றைக் கழுவுகிறார்கள் என்பதை சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை.
2011 மக்கள் தொகை கணக்கின்படி நிராதரவானவர்களைப் பிச்சைக்காரர்கள் என்றும், நாடோடிகள் என்றும் குறிப்பிட்டு அவர்களுடைய எண்ணிக்கை சுமார் ஐந்து லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவிலுள்ள நிராதரவான பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையில் 20-இல் ஒரு பகுதிதான் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். பிச்சைக்காரர்கள் என்கின்ற வார்த்தைக்கான சரியான விளக்கம் எதுவும் தரமுடியாத நிலையில், அவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது இயலாத ஒன்று. 
அநேகமாக எல்லா மாநில சட்டங்களின்படியும் ஒருவரது தோற்றமோ அல்லது பொது இடத்தில் காரணமில்லாமல் சுற்றித் திரிவதோ கூடப் பிச்சைக்காரர்கள் என்கின்ற வரைமுறைக்குள் வந்துவிடும். ஒருவர் பிச்சை எடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டால் அவருடைய மனைவியும் குழந்தைகளும் உடன் இருக்கும் பெற்றோரும் கைது செய்யப்படலாம் என்பதற்கான சட்ட விதிமுறை கூட சில மாநிலங்களில் காணப்படுகிறது. 
ஒருவர் பிச்சை எடுப்பதற்கு அடிப்படைக் காரணம் வறுமையாக இருந்தாலும் கூட, அதை முழு நேரத் தொழிலாக மாற்றியிருப்பவர்களும் இருக்கிறார்கள். கூடுதல் பணத்தை இரந்து பெறுவதற்காக வேண்டுமென்றே தங்களது உடல்களைக் காயப்படுத்திக் கொண்டோ, உடலுக்கு ஊறு விளைவித்துக் கொண்டோ பிச்சை எடுப்பவர்களும் உண்டு. தொழில் ரீதியாகவும், குழுக்களாகவும் பிச்சைத் தொழிலில் ஈடுபடுவோர் இல்லாமல் இல்லை.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் புள்ளி விவரப்படி ஆண்டொன்றுக்கு 40,000 குழந்தைகள் இந்தியாவில் கடத்தப்படுகிறார்கள். அவர்களில் 10,000 பேர் என்ன ஆனார்கள் என்பதுகூட தெரியவில்லை. ஏறத்தாழ 3 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் போதை மருந்து தரப்பட்டு, அடிக்கப்பட்டு பிச்சைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக மனித உரிமை ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது. 
2015-இல் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு சமூக நீதித்துறை இணை அமைச்சர் விஜய் சம்பலா, இந்தியாவில் 4 ,13,670 பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், அவர்களில் 2.2.லட்சம் பேர் ஆண்கள் என்றும், 1.91 லட்சம் பேர் பெண்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்தியாவிலேயே மிக அதிகமாக பிச்சைக்காரர்கள் காணப்படுவது மேற்கு வங்கத்தில் (81,844) அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (65,835), ஆந்திரப் பிரதேசம் (30,218), பிகார் (29,723), மத்தியப் பிரதேசம் (28,695) என்று பட்டியல் நீள்கிறது. 
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, பிச்சைக்காரர்கள் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காண முழுமையான சட்டம் ஒன்றை கொண்டுவரும்படி சமூக நீதித்துறையை வலியுறுத்தி இருக்கிறார். நிராதரவானவர் (பாதுகாப்பு, உதவி, மறுவாழ்வு) மாதிரி மசோதா ஒன்றை மாநில அரசுகளுக்கு அனுப்பி, அவர்களின் கருத்தைக் கோரியிருக்கிறார். தொழில் ரீதியான யாசகம் தவிர்த்த, வறுமையின் காரணமாகப் பிச்சை எடுப்பதை கிரிமினல் சட்டத்திலிருந்து அகற்றவும், பிச்சைக்காரர்களின் உறவினர்களை தண்டிப்பதைத் தடுக்கவும் இந்த மசோதா வழிகோலுகிறது.
மாநில அரசுகள் போதுமான ஊழியர்களுடன் கூடிய பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்கான நிலையங்களை அமைப்பதும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும், தொழில் கற்றுக்கொடுக்கவும் இந்த மசோதா வழிகோலுகிறது. மத்திய அரசால் தயாரிக்கப்படும் மாதிரி மசோதாக்கள், மாநில அரசுகளால் மாற்றங்களுடனோ, மாற்றம் இல்லாமலோ சட்டமாக்கப்படலாம். 
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை குறையாத நிலையில், பிச்சை எடுப்பதை சட்டம் போட்டுத் தடுப்பதோ, தண்டிப்பதோ, மனிதாபிமானத்துடன் கூடிய செயலாக இருக்காது. அனுதாபத்துடனும், கருணையுடனும் அணுக வேண்டிய இந்தப் பிரச்னையை மனிதாபிமானம் இல்லாமல் கிரிமினல் சட்டத்திற்கு
உட்படுத்தி இருப்பது அகற்றப்பட்டாக வேண்டும்.
ஏற்பது இகழ்ச்சி, சரி. அதற்காக இரப்பது குற்றம் என்றால் எப்படி?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com