சந்தித்ததே வெற்றி!

யாருமே எதிர்பாராத ஒன்று நடந்திருக்கிறது. மூன்று நாள் முன்பு வரையிலும்கூட இந்தச் சந்திப்பு நிகழுமா நிகழாதா என்பது குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நடந்துகொண்டிருந்தது.

யாருமே எதிர்பாராத ஒன்று நடந்திருக்கிறது. மூன்று நாள் முன்பு வரையிலும்கூட இந்தச் சந்திப்பு நிகழுமா நிகழாதா என்பது குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நடந்துகொண்டிருந்தது. அனைவருடைய ஐயப்பாடுகளையும் பொய்யாக்கி அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னும் சிங்கப்பூரில் சந்தித்திருப்பது நிஜமான வரலாற்றுத் திருப்புமுனை. 
தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், வட கொரியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நட்புறவில் தான் தொடங்கியது இப்போதைய அமெரிக்க - வட கொரியா ஒப்பந்தத்திற்கான ஆரம்பம். வட கொரிய அதிபர் கடந்த பிப்ரவரியில் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் பந்தயத்துக்கு வட கொரிய வீரர்களை பங்கேற்ற அனுப்பியதிலிருந்து கொரிய தீபகற்பத்தில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் மோதல் போக்கில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. தென் கொரியாவை பயன்படுத்தி, வட கொரியாவை சமரசப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வந்தது அமெரிக்க ராஜதந்திரமாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்குக் காரணம், தென் கொரியா, ஜப்பான் மட்டுமல்ல அமெரிக்காவே கூட வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் அச்சமடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
அதிபர்கள் டிரம்பும், கிம்மும் கையொப்பமிட்டிருக்கும் கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விவரங்கள் புதிதொன்றுமல்ல. இதேபோல, இதே பிரச்னைகளில் வட கொரியா, அமெரிக்காவுடன் இதற்கு முன்பும் ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கிறது, அதை மீறியும் இருக்கிறது. ஆனால், இந்த முறை அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இப்படியொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 
இப்போது வட கொரியா தன்னைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகளை மட்டுமல்ல, அமெரிக்காவையேகூட குறிவைத்துத் தாக்கக்கூடிய அணு ஆயுத வல்லமை பெற்ற நாடாக மாறியிருக்கிறது. அதே போல வட கொரியாவும் அணு ஆயுத பலம் பெற்றிருந்தாலும் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், ஏதாவது ஒரு வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதுதான் இரு தரப்புக்குமே நல்லது என்கிற புரிதலை ஏற்படுத்திய இரண்டு நாடுகளின் வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.
அமெரிக்க அதிபர்கள் இதற்கு முன்னால் பங்குபெற்ற ஏனைய உச்சி மாநாடுகளைப்போல அதிபர் டிரம்பின், கிம் ஜோங் உடனான சிங்கப்பூர் மாநாடு தெளிவான ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூற முடியாது. அதிபர் கிம் ஜோங் வட கொரியாவின் அணு ஆயுத குறைப்புக்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவதாகவும் அதிபர் டிரம்ப் வட கொரியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள், அவ்வளவே. அதே நேரத்தில் வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை, வட கொரியா மீண்டும் தனது அணு ஆயுத முயற்சிகளில் ஈடுபட முடியாத அளவை எட்டுவது வரை தொடரும் என்று அமெரிக்கா குறிப்பிடுகிறது.
வட கொரியாவின் ஏவுகணைகளால் பாதிப்பை எதிர்கொள்ளும் அமெரிக்காவும் சரி, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் சரி அதிபர் கிம் எந்தளவுக்கு அவரது வாக்குறுதியில் உறுதியாக இருந்து அணு ஆயுதக் குறைப்பில் ஈடுபடுகிறார் என்பதை கூர்ந்து கவனிக்கும். அதே நேரத்தில், எந்த அளவுக்கு அமெரிக்கா பொருளாதார ரீதியாக வட கொரியாவுக்கு உதவப் போகிறது என்
பதைப் பொருத்துத்தான் அதிபர் கிம் ஜோங்-உன்னின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கக் கூடும்.
இதற்கு முன்னால் தன்னுடைய நண்பர்கள், எதிரிகள் என்கிற பாகுபாடு இல்லாமல் பல சர்வதேச ஒப்பந்தங்களை அதிபர் டிரம்ப் கிழித்துப் போட்டிருக்கிறார், நிராகரித்திருக்கிறார். அடுத்து அவர் என்ன செய்வார் என்பது தெரியாது என்கிற பெயர் அவருக்கு உண்டு. அதேபோலத்தான் அதிபர் கிம் ஜோங்-உன்னும். புரிந்துகொள்ள முடியாத இந்த இரண்டு சர்வதேசத் தலைவர்களுக்கும் இடையில் புரிதல் ஏற்பட்டிருப்பதுதான் எப்படி என்கிற புதிர் உலக நாடுகளை வியப்படைய வைத்திருக்கிறது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வட கொரிய அதிபருடன் மேலும் நெருக்கமாகப் பழக முடியும் என்கிற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டிருப்பதாக அதிபர் டிரம்பும், இந்த நட்புறவால் உலகம் மிகப்பெரிய மாற்றத்தைப் பார்க்கப் போகிறது என்று அதிபர் கிம்மும் தெரிவித்திருக்கும் நிலையில், இந்த உச்சி மாநாடு ஒரு வகையில் வெற்றி மாநாடுதான் என்று கொள்ளலாம்.
ஒப்பந்தத்தில் எந்தவிதக் காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை. வட கொரியாவின் ஒரேயொரு நட்பு நாடான சீனாவைக் குறித்து எதுவும் பேசப்படவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே ராஜாங்க ரீதியிலான உறவு ஏற்படுத்தப்படுவது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. இந்த நிலையில் அதிபர் டிரம்பும், அதிபர் கிம்மும் கை குலுக்கி ஆரத்தழுவி நட்புறவு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும்தான் குறிப்பிடத்தக்க செய்தி. 
அடுத்தக்கட்டமாக அதிபர் கிம் வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படலாம். அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் வடகொரியாவுக்கு அரசுப் முறைப் பயணம் மேற்கொள்ளலாம். அதன் பிறகுதான் சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமாதான ஒப்பந்தம் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுமா என்பதைத் தீர்மானிக்க முடியும். 
சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது, சமாதானக் கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது என்பது வரை வெற்றி!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com