போதும் இந்த மோதல் போக்கு!

கடந்த நான்கு நாள்களாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் அவரது மூன்று அமைச்சரவை சகாக்களும் துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜாலின் ராஜ் நிவாஸ் மாளிகை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்

கடந்த நான்கு நாள்களாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் அவரது மூன்று அமைச்சரவை சகாக்களும் துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜாலின் ராஜ் நிவாஸ் மாளிகை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அநேகமாக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் ஆளுநர்களுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் ஏற்பட்டதுண்டு. ஆனால், இதுவரை எந்த ஒரு முதல்வரும் தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநரின் அலுவலகத்தில் தர்னா போராட்டம் நடத்தியதாக வரலாறு இல்லை. 
கடந்த பிப்ரவரி மாதம், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் தில்லி மாநிலத்தின் தலைமைச் செயலர் அன்சுல் பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதிலிருந்து முதல்வர் அலுவலகத்திற்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது. தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள் கூட்டும் எந்த ஒரு கூட்டத்திலும் தில்லி அரசின் ஏனைய மூத்த அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கலந்துகொள்ளவதில்லை. இதனால் அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்து இருக்கிறது என்பது மட்டுமல்ல மக்கள் நலப் பணிகளும் முடங்கிக்கிடக்கின்றன.
முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் அவரது அமைச்சரவை சகாக்கள் மூவரும் முன்வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு தில்லி அரசின் இந்திய அரசுப் பணி அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் மறைமுக ஆதரவு அளிக்கிறார் என்பதுதான். அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றும்படி அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், அதற்கு இணங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் ஆம் ஆத்மி கட்சி அரசின் வீடு தேடி ரேஷன்' திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரித்தான் முதல்வரும், அமைச்சர்களும் ராஜ் நிவாஸில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், தில்லி அரசின் அதிகாரிகளோ தாங்கள் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்றும், தலைமைச் செயலருக்கு ஏற்பட்டது போல தங்களுக்கும் அமைச்சர்களால் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற பாதுகாப்பு உணர்வால்தான் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அரசியல், ஆரம்பம் முதலே போராட்டத்துடன் கூடிய மோதல் போக்கின் அடிப்படையில்தான் இருந்து வந்திருக்கிறது. தில்லிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி தொடர்ந்து போராடி வருகிறது ஆம் ஆத்மி கட்சி. இந்தியாவின் தேசியத் தலைநகர் என்பதால் தில்லி யூனியன் பிரதேசத்துக்கு தனி மாநில அந்தஸ்து அளிப்பதில் பல சிக்கல்களும் பிரச்னைகளும் இருக்கின்றன என்பதை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புரிந்துகொள்ளவில்லையா இல்லை புரிந்துகொள்ளத் தயாராக இல்லையா என்பது புரியவில்லை. 
தில்லியின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் அலுவலகங்களும், ராணுவ பகுதிகளும் காணப்படுகின்றன. மேலும் பிரதமர் சுதந்திர தின உரையாற்றும் செங்கோட்டை, பல்வேறு வெளிநாட்டு பிரமுகர்கள் விஜயம் செய்யும் தில்லி விமான நிலையம் இவையெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட முடியாது. தில்லி மாநில அரசின் 80 சதவீத வருவாய் தேசிய தலைநகர் பகுதியான கன்னாட் பிளேஸ், சாந்தினி செளக், பாரக்கம்பா சாலை ஆகிய பகுதிகளிலிருந்து பெறப்படும் நிலையில், தில்லி பிரிக்கப்பட்டால் மாநில அரசு செயல்பட முடியுமா என்பதே சந்தேகம்தான். மேலும், மத்திய அரசின் மானியங்களை இழந்துவிட்டால் தில்லி அரசால் அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியமும் கொடுக்கக்கூட வருவாய் இருக்காது என்பதுதான் உண்மைநிலை.
இதற்கு முன்னால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் தில்லி மாநில அரசில் பாஜகவும், மத்தியில் பாஜக ஆட்சியும் தில்லி மாநில அரசு காங்கிரஸ் வசமும் இருந்து வந்திருக்கிறது. அப்போதெல்லாம் தில்லி மாநில முதல்வர்கள் பல்வேறு பிரச்னைகளை இப்போதைய முதல்வர் அரவிந்த் கேஜரிவால் போலவே எதிர்கொண்டனர் என்றாலும்கூட, மத்திய அரசுடன் அலுவல் ரீதியாக சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொண்டு நிர்வாக ரீதியிலானப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டனர். அவர்களுக்கு அரசியலைவிட ஆட்சி செய்வதில்தான் கவனம் இருந்தது. ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஒவ்வொரு பிரச்னையையும் அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில்தான் ஆர்வம் காணப்படுகிறதே தவிர, இணக்கமாக இருந்து நல்ல நிர்வாகத்தை வழங்குவதில் ஆர்வம் இல்லை என்பதைத்தான் அவரது நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
தலைநகர் தில்லி மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறது. தேவைக்குப் போதுமான மின்சாரம் இல்லாத நிலை, மழைக் காலம் தொடங்குவதற்குள் கழிவுநீரோடைகளையும் மழைநீர் வடிகால்களையும் சுத்தம் செய்தாக வேண்டும். தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து என்பது சாத்தியம் இல்லை என்கிற நிலையில் அரசியலுக்காக நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைப்பது பொறுப்புள்ள முதல்வருக்கு அழகல்ல.
மத்திய அரசும் சரி, துணைநிலை ஆளுநரும் சரி முதல்வரின் முரட்டுத் தனத்தையும் பிடிவாதத்தையும் சற்று சகித்துக்கொண்டு சமாதான முயற்சியில் ஈடுபடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டு தில்லியின் நிர்வாகத்தைத் தொடர்ந்து ஸ்தம்பிக்க வைப்பார்களேயானால், அடுத்தாற்போல் தேர்தல் வரும்போது வாக்குச் சாவடிகளின் மூலம் மக்கள் அவர்களை தண்டிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com