கால்பந்து உலகக் கோப்பை!

உண்மையிலேயே கால்பந்துதான் ஒரு சர்வதேச விளையாட்டு. கால்பந்துக்கான உலகக் கோப்பை போட்டிதான் உலகத்திலேயே


உண்மையிலேயே கால்பந்துதான் ஒரு சர்வதேச விளையாட்டு. கால்பந்துக்கான உலகக் கோப்பை போட்டிதான் உலகத்திலேயே மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா. 211 நாடுகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியின் கடைசி கட்டங்களுக்கான போட்டிக்கு 32 அணிகள் தேர்வாகி இருக்கின்றன. அடுத்த ஒரு மாத காலத்திற்கு ரஷியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து பல நூறு கோடி ரசிகர்கள் நேரிலும், தொலைக்காட்சி மூலமும் கண்டு ரசிக்க இருக்கிறார்கள். 
கடந்த வியாழக்கிழமை மாஸ்கோவில் தொடங்கிய கால்பந்துக்கான உலகக் கோப்பை போட்டி ரஷியாவிலுள்ள 11 நகரங்களில் நடைபெற இருக்கிறது. அடுத்த ஒரு மாதத்தில் 64 கால்பந்துப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் போட்டிக்காக காத்திருந்த கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சாணிக் கொம்பில் இந்த முறை வெற்றிக் கோப்பையைத் தட்டிப் பறிக்கப் போவது யார் என்கின்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கிறார்கள்.
ரஷியாவில் மட்டுமல்லாமல், உலகக் கோப்பை கால்பந்துக்கான டிக்கெட்டுகள் சர்வதேச அளவில் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கின்றன. இந்தப் போட்டியின் கடைசி கட்ட சுற்றுக்கு அமெரிக்கா தகுதி பெறவில்லை என்றாலும்கூட, மிக அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பது அமெரிக்காவில்தான். டிக்கெட் விற்பனையில் முதல் 20 நாடுகளில் இந்தியாவும்கூட இடம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவைப் போலவே கடைசி கட்டப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்றாலும்கூட, சீனாவிலிருந்து மட்டும் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளைக் காண்பதற்கு லட்சத்துக்கும் அதிகமானோர் ரஷியா செல்கிறார்கள்.
2018 கால்பந்து உலகக் கோப்பையில் கடைசிச் சுற்று போட்டிகளுக்குத் தேர்வாக முடியாமல்போன குறிப்பிடத்தக்க நாடுகள் இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகியவை. ஐஸ்லாந்து, பனாமா, மொராக்கோ, பெரு உள்ளிட்ட நாடுகள் ரஷியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்கின்றன. நேற்று இரவு நடந்த ஸ்பெயினுக்கும் போர்ச்சுக்கலுக்கும் இடையிலான போட்டியும், மொராக்கோவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடந்த போட்டியும் தொலைக்காட்சி தரவரிசையில் உச்சத்தை எட்டியிருக்கின்றன எனும்போது அடுத்த 28 நாட்களில் கால்பந்து ஜுரம் எந்த அளவுக்கு அதிகரிக்கப்போகிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம்.
1980-இல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு கடந்த 38 ஆண்டுகளாக இதுவரை எந்த சர்வதேச விளையாட்டையும் ரஷியா முன்னின்று நடத்தியதில்லை. ஏனைய நாடுகளும் ரஷியாவில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம், ரஷிய ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுபவர்கள் என்கின்ற பரவலான அச்சம் எப்போதுமே உண்டு. கடந்த 2016 ஐரோப்பியக் கூட்டமைப்பு சாம்பியன் போட்டியில்கூட ரஷிய கால்பந்து ரசிகர்கள் இங்கிலாந்தில் இருந்து வந்த ரசிகர்களுடன் கைகலப்பில் தொடங்கி வன்முறையில் ஈடுபட்டதை சர்வதேச நாடுகள் இப்போதும்கூட அச்சத்துடன்தான் பார்க்கின்றன. ரஷியா உலகக் கோப்பை கால்பந்தில் வெற்றி பெறப் போவதில்லை என்று தெரிந்தாலும்கூட, ரஷியா குறித்த எதிர்மறைப் பார்வையை, உலகக் கோப்பை பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்படுவதன் மூலம் அகற்ற முடியும் என்று அதிபர் புதின் கருதுவதாகத் தெரிகிறது.
1998 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு, இந்த அளவுக்கு வலுவான அணிகள் இறுதிக் கட்டப் போட்டிகளில் கலந்துகொண்டதில்லை. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரேஸில், பெல்ஜியம் உள்ளிட்ட எல்லா அணிகளுமே உச்சகட்ட உற்சாகத்தில் இருக்கின்றன. கடந்த 2014 உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி, இந்த முறை எப்படி அந்தக் கோப்பையைத் தக்க வைத்துக்கொள்ளப் போகிறது என்று உலகமே வேடிக்கை பார்க்கிறது. இந்த முறை முக்கியமான அணிகள் அனைத்துமே எப்படியும் கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றன. இதுபோதாதென்று, குரோஷியா, இங்கிலாந்து, ஆர்ஜென்டீனா, போர்ச்சுக்கல், உருகுவே ஆகிய அணிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகத் திறமையான விளையாட்டு வீரர்களுடன் கோப்பையைக் கைப்பற்ற உற்சாகத்துடன் மைதானத்துக்கு வந்திருக்கின்றன.
இதுதான் ஆர்ஜென்டீனாவின் லையோனல் மெஸ்ஸி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கக் கூடும். தன்னிகரற்ற கால்பந்து விளையாட்டு வீரர்களான அவர்களது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் மாஸ்கோவில் குழுமியிருக்கிறார்கள். நெய்மர், சால் ரோகும்போ, ஈஸ்கோ, காபிரியேல் ஜீசஸ், ஜூனியன் பிராக்ஸ்லஸ், ஜேவியர் ஹெர்ணான்டஸ் உள்ளிட்ட அடுத்தத் தலைமுறை நட்சத்திர விளையாட்டு வீரர்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆன்ட்ரேஸ் இனியெஸ்டா, ஜேவியர் மஷ்ரானோ ஆகிய இருவருக்கும்கூட இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கக் கூடும்.
பிரேஸில், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் கோப்பைக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஸ்பெயின், ஆர்ஜென்டீனா, பெல்ஜியம் ஆகிய அணிகளில் ஒன்று அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கி வெற்றிக் கோப்பையைத் தட்டிக்கொண்டு போனால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரஷியாவிலுள்ள மைதானங்களில் கால்பந்து உருளத் தொடங்கியிருக்கிறது. உலகம் உச்சக்கட்ட உற்சாகத்தில் போட்டிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com